உயர் நீதிமன்றத்தை நாடிய வைரமுத்து


தன்மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கவிஞர் வைரமுத்து மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ராஜபாளையத்தில் `தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை கூறியதால் கருத்தரங்கில் இருந்தவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்தனர். இதனையடுத்து வைரமுத்துவின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும், வைரமுத்துவைக் கண்டித்தும் போராட்டங்களையும் நடத்தினர். மேலும் இவர் மீது ராஜபாளையம், சென்னை, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இந்து அமைப்பினர் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் முருகானந்தம் என்பவர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வைரமுத்து மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆராய்ச்சி ஒன்றை மேற்கோள் காட்டி, ஆண்டாள் குறித்து நான் பேசிய கருத்து தற்கால சூழலுடன் பொருத்தி தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுவிட்டது" என்று கூறியுள்ளார்.