தெலுங்குப் பள்ளிகள் அமைத்தால் என்ன தவறு?

‘ஆந்திராவில் தமிழ்ப் பள்ளிகள் இருக்கும்போது, தமிழகத்தில் தெலுங்குப் பள்ளிகள் அமைப்பதில் என்ன தவறு?’ என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்றுக் கொண்டார். வேறு எந்த ஆளுநரும் அரசு நிர்வாகத்தில் தலையிடாத நிலையில், புரோகித் முதன்முறையாக கோவையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு தூய்மை இந்தியா திட்டம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இதுபோலவே ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதற்கு பல்வேறு கட்சிகளும் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. திமுகவினர் ஆளுநர் செல்லும் இடங்களிலெல்லாம் அவருக்குக் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 258ஆவது பிறந்த நாள் விழா, தியாகராஜ சாமிகளின் 250ஆவது ஆண்டு விழா ஆகியவை அகில இந்திய தெலுங்கு அமைப்பின் சார்பில் சென்னை நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று (ஜனவரி 18) நடைபெற்றது. நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசுகையில், “தமிழில் பேசினால் தமிழர்களின் மனதில் இடம்பிடிக்க முடியும். ஆந்திர மாநிலத்தில் தமிழ்ப் பள்ளிகள் இருக்கும்போது, தமிழகத்தில் தெலுங்குப் பள்ளிகள் இருப்பதில் தவறேதுமில்லை. எனவே, தெலுங்குப் பள்ளிகள் அமைப்பது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்துவேன்” என்று கூறியுள்ளார்.