மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: ஊடகவியலாளர் உரிமையும், ஊடகவியலாளரை வெளியேற்றும் உரிமையும்!

சிறப்புக் கட்டுரை: ஊடகவியலாளர் உரிமையும், ஊடகவியலாளரை வெளியேற்றும் உரிமையும்!

அ. குமரேசன்

ஊடகச் சுதந்திரம் குறித்துப் பேச அழைக்கப்படுகிற நேரங்களில், “ஊடக அறம் குறித்தும் பேசுவேன் சம்மதமா” என்று கேட்டுக்கொண்டு, அதற்கான ஒப்புதலின் பேரில்தான் கலந்துகொள்வேன். ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், கருத்துகள், கண்ணோட்டங்கள் ஆகியற்றை விமர்சனத்துக்கு உள்ளாக்குகிற உரிமையை முன்வைத்து, ஊடக அறம் என்று சொல்லப்படுகிற மாயமானைப் பிடிக்கிற முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன். அதேவேளையில், ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்பு உரிமை, அந்தச் செய்தியைத் தங்களின் கண்ணோட்டத்தில் வெளியிடும் உரிமை - இந்த இரண்டு உரிமைகளையும் வலியுறுத்தியிருக்கிறேன்.

இன்று மறுபடி ஒரு விவாதம் முன்னுக்கு வந்திருக்கிறது. குஜராத்திலிருந்து புறப்பட்டு, ஒற்றை மதவாத ஆதிக்கமும் கார்ப்பரேட் சந்தை வேட்டையும் இணைந்த ஆர்எஸ்எஸ் - பாஜக அரசியலுக்கு எதிராகப் போராடுவோருக்கு ஒரு நம்பிக்கை ஊற்றை நாடு முழுக்கப் பாய்ச்சிக்கொண்டிருக்கும் இளம் தலித் போராளி ஜிக்னேஷ் மேவானி இந்த விவாதத்தையும் முடுக்கிவிட்டிருக்கிறார். சென்னைக்கு வந்திருந்த அவர் ஜனவரி 16 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில், தன் முன் மேசையில் இருந்த ஒலிவாங்கிகளில் ரிபப்ளிக் டிவி நிறுவனத்தின் ஒலிவாங்கியும் இருந்ததைக் கண்டு, அந்த நிறுவனத்தின் நிருபர் அதை எடுத்துவிட வேண்டும் என்றும் அந்த நிறுவனத்துக்குப் பேட்டியளிக்க தாம் விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார். அது அந்த நிறுவனத்துக்கான தனிப்பட்ட பேட்டியல்ல என்றும் பொது நிகழ்வு என்றும் அதில் ஊடகவியலாளர்கள் எல்லோருமே இருக்கத்தான் செய்வார்கள் என்று செய்தியாளர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டது. அவர் தனது நிலையில் உறுதியாக இருந்ததைத் தொடர்ந்து, அனைத்துச் செய்தியாளர்களும் வெளிநடப்புச் செய்தார்கள்.

வர்க்கச் சுரண்டலுக்கும் வர்ணப் பாகுபாட்டுக்கும் எதிரான விரிந்ததொரு போராட்டக்களம் எப்போது உருவெடுக்கும் என்ற ஏக்கத்தோடு இருந்தவர்களில் ஒருவனாக, அதற்கொரு முன்மாதிரியை உருவாக்கியுள்ள ஜிக்னேஷ் இயக்கத்தில், உணர்வுபூர்வமாக இணைந்து நிற்கிறேன். அதேவேளையில், ஓர் ஊடகவியலாளராக, அவரது இந்தக் குறிப்பிட்ட அணுகுமுறை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவர் தனது முடிவில் கறாராக இருந்ததால், வருத்தமளிக்கும் வகையில் செய்தியாளர்கள் அங்கே ஒருமைப்பாட்டுடன் செயல்பட்டது தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றும் முகநூல், வாட்ஸ்அப் தளங்களில் பதிவு செய்திருந்தேன். அந்தப் பதிவுக்குப் பல தோழமைகளும் ஆதரித்தோ, எதிர்த்தோ எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். சிலர், எனது கருத்து சரிதான் என்றாலும் இந்த நேரத்தில் அதை வெளிப்படுத்தாமல் மௌனமாக இருந்திருக்கலாம் என்றார்கள்.

ஊடகத்துறையில் செயல்பட்டுக்கொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்வி உரிமைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்றுக்கொண்டு, இதுபற்றிக் கருத்துக் கூறாமல் இருந்தால் அது போலித்தனம். அந்த மௌனம் என் கொள்கைக்கு நானே செய்கிற துரோகமாகிவிடும். அதேபோல், ஊடகவியலாளர்கள் நடந்துகொண்டதன் நியாயம், அவர் இப்படிச் செய்ததன் நியாயம் என்று இரண்டு நியாயங்களையும் பேசிவிட்டு, இப்படியாகத்தான் வினையும் எதிர்வினையும் இருக்கும் என்று நகர்வதும் நியாயமில்லை. அது உண்மையான நடுநிலையல்ல.

எனது கருத்துடன் உடன்பாடின்மையை வெளிப்படுத்தியவர்களில் யாரும் என் பதிவுக்கு எவ்வித உள்நோக்கமும் கற்பிக்கவில்லை, ஜிக்னேஷ் தொடங்கியுள்ள இயக்கத்துக்கோ, தலித் விடுதலைக்கோ என்னை ஒரு எதிரியாகப் பார்க்கவில்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், ரிபப்ளிக் டிவியால் பல வகைகளில் கொச்சைப்படுத்தப்பட்டு வந்திருக்கிற ஜிக்னேஷ் இப்படியொரு முடிவை எடுத்ததில் என்ன தவறு என்று வினவியிருக்கிறார்கள். அந்த நிறுவனத்தை ஊடகச் சுதந்திரத்துக்கான ஓர் அடையாளமாகப் பார்க்க முடியுமா என்று கேட்டிருக்கிறார்கள். இது குறித்தும் எனது மற்றொரு நீண்ட பதிவைச் செய்திருக்கிறேன். அதற்கும் பல எதிர்வினைகள் வந்துள்ளன.

முதலில், ரிபப்ளிக் டிவி என்ற பெருமுதலீட்டு நிறுவனத்தின் மீது எனக்கு மயக்கமேதும் கிடையாது. அவர்கள் ஏதோ ஊடக நெறியை உயர்த்திப் பிடிக்க வந்தவர்கள் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. நுட்பமாக அல்லாமல், வெளிப்படையாகவே மதவெறி அரசியலும், நவீன மனுவாதமும், உலகமய சுரண்டலும் இணைந்த அமைப்புக்குத் துணைபோகிற நிறுவனம் அது என்பதே என் கருத்து. துணைபோகிற நிறுவனம்கூட அல்ல; இந்த அமைப்பின் ஓர் அங்கமாகவே இருக்கிறது என்றும் சொல்வேன். ஒருவேளை ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமைப் பீடம் ம(நு)தவாதத்தை மட்டும் முன்வைக்குமானால் அதை அர்னால்ட் கோஸ்வாமி போன்றோர் இந்த அளவுக்கு ஆதரிப்பார்களா என்பது சந்தேகமே. அதேபோல், ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமை வெறும் கார்ப்பரேட்மய சுரண்டலுக்கு மட்டும் சாதகமாக இருக்குமானால் அவர்கள் இந்த அளவுக்குத் துணை நிற்பார்களா என்பதும் சந்தேகமே. இன்றைய பொருளாதார உலகமயச் சூழலில் இந்த இரண்டின் கலவையாக அந்தத் தலைமை இருப்பதுதான் கோஸ்வாமிகளின் யுக்திகளுக்கு அடிப்படை. ஊடக நேயர்களிடம் அம்பலப்படுத்தப்பட வேண்டிய அடிப்படை அது.

ஆனால், ரிபப்ளிக் டிவி நிறுவனமோ, சென்னை நிகழ்வை ஒளிபரப்பு, மறு ஒளிபரப்பு, மறுமறு ஒளிபரப்பு என நேரம் ஒதுக்கி, “ஜிக்னேஷ் அம்பலமாகிறார்” என்று குறிப்புப் போட்டுச் சிரிக்கிறது. அவர்கள் இப்படிச் செய்வார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும், அதற்குத் தயாராக இருப்பதாகவும் பின்னர் ஜிக்னேஷ், தன்னைக் கலந்துரையாடலுக்கு அழைத்த நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். சிலர் இது அவரது ஒரு விளம்பர யுக்தி என்பதாகக் கூறுகிற விமர்சனம் சுண்டியெறியப்பட வேண்டியது. அவரைப் பொறுத்தவரையில், அந்த நிறுவனம் எப்படிப்பட்டது என்று நாடு முழுக்கப் பேசப்படட்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்திருக்கலாம். ஒரு கம்பீரச் சவாலாக உயர்ந்துள்ள ஜிக்னேஷ் இயக்கத்தை வலுவிழக்கச் செய்கிற கார்ப்பரேட் மற்றும் சங் பரிவார அரசியல் செயல்திட்டத்தில் மேற்படி ஒளிபரப்பும் சேர்கிறது. துரும்பு கிடைத்தாலும் விடக் கூடாது என்றிருப்பவர்களுக்குக் கரும்பு கொடுக்கலாமா? இதில் என்ன அரசியல் வியூகம் இருக்கிறது?

எப்படியோ ஊடகச் சுதந்திரம், ஊடக நெறி பற்றிய விவாதம் மறுபடியும் முன்னுக்கு வந்திருப்பது நல்லதுதான். அந்த விவாதம் ஊடக நிறுவனங்கள் தங்களை மறு ஆய்வு செய்வதற்கு மட்டுமல்லாமல், மக்களுக்காகக் களமிறங்கிய போராளிகள் தங்கள் அணுகுமுறைகளை மறு சிந்தனைக்கு உட்படுத்துவதற்கும் பயன்படுமானால் மகிழ்ச்சி.

செய்தியாளர்களைப் பொறுத்தவரையில், ஓர் அரசியல் தலைவரைச் சந்திக்கிறபோது கேட்கிற கேள்விக்கு அவர் பதிலளித்தால் அது ஒரு செய்தி. அவர் பதில் சொல்ல மறுத்தாலோ அது இரட்டிப்புச் செய்தி. குறிப்பிட்ட கேள்விக்கு “பதில் சொல்ல மறுத்துவிட்டார்” என்ற வரியை மட்டும் செய்தியில் சேர்த்துவிடுவார்கள். அது வாசகர்கள் மனங்களை பலப்பல ஊகங்களுக்கு இட்டுச் செல்லும். பேட்டியாளர் ஏதோ உண்மைமையை மறைக்க விரும்புகிறாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அனுபவம் மிக்க தலைவர்கள் ஊடகவியலாளர்கள் வீசும் கேள்விகளிலிருந்து நழுவுவதில்லை. நேரடியாகப் பதிலளிக்க விரும்பாவிட்டாலும், சுற்றி வளைத்து எதையாவது சொல்லிவைப்பார்கள். செய்தியாளராகப் பணியாற்றிய நாள்களில் இத்தகைய சமாளிப்புகளை நிறையச் சந்தித்திருக்கிறேன். இளம் பத்திரிகையாளர்களுக்கான பயிற்சி முகாம்களில் இத்தகைய கேள்விகளைத் துணிவோடு வீசுவதற்கான தகுதியை, போதிய தகவலறிவோடும் அரசியல் கூர்மையோடும் வளர்த்துக்கொள்ள வேண்டுமெனக் கூறுகிறேன்.

ஊடக நிறுவனங்களின் ஊழியர்களாக வருகிற செய்தியாளர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் கேள்விகள் கேட்கவும், அதைத் தங்களது கண்ணோட்டத்தில் வெளியிடவும் உள்ள உரிமை முக்கியமானது, பாதுகாக்கப்பட வேண்டியது. ஆர்எஸ்எஸ் - பாஜக நிழல் நிறுவனம் என்பதற்காக அதன் செய்தியாளரை அனுமதிக்க மறுப்பது என்றால், இந்தியாவில் இன்றிருக்கிற பல கார்ப்பரேட் ஊடக நிறுவனங்கள் ஏதோவொரு கட்டத்தில், ஏதேதோ பின்னணிகள், சிக்கல்களோடு வணிகம் சார்ந்த சமரசங்களோடு பாஜக ஆதரவு நிலை எடுக்கின்றன. அந்த நிறுவனங்களின் தொழிலாளர்களான செய்தியாளர்கள் எல்லோரையும் பேனாக்களோடும் ஒலிவாங்கிகளோடும் வெளியேற்ற வேண்டியிருக்கும்.

எடுத்துக்காட்டாக, உலகமயப் பொருளாதார நடவடிக்கைகள் நாட்டு மக்கள் மீது வம்படியாகத் திணிக்கப்படுவதை எதிர்த்தும், உண்மையான மதச்சார்பின்மைக்காகவும் வாதாடுகிற கம்யூனிஸ்ட்டுகள் பற்றிப் பல கார்ப்பரேட் ஊடகங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இளக்காரமாகச் சித்திரித்து வந்துள்ளன. இன்றும் அப்படியே சித்திரிக்கின்றன. அந்த நிறுவனங்களை கம்யூனிஸ்ட் தலைவர்கள் புறக்கணித்ததில்லை. தங்களுடைய விமர்சனத்தை வெளிப்படுத்தி, நிலைபாட்டைத் தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பாகக் கருதுகிறார்கள். அதை ஊடக வெளிச்சம் பெறுவதற்கான சமரசம் என்று சிறுமைப்படுத்த முடியுமா?

கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்படுவது தொடர்பாக தந்தி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் (அவர்கள் என்னை அழைத்துக்கொண்டிருந்த நாள்களில்) கலந்துகொண்டது நினைவுக்கு வருகிறது. மதவாதத்தின் அடிப்படையிலேயே கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறை இருக்கிறது என்றும், ஆகவே அது நியாயம்தான் என்ற சிந்தனை மக்களை சித்தாந்த அடிப்படையிலேயே கவ்வியிருக்கிறது என்றும் நான் சொன்னேன். நெறியாளுகை செய்த நண்பர் பாண்டே அதற்குச் சான்றிருக்கிறதா எனக் கேட்டார். திருவிளையாடல் கதைகளில் ஒன்றான நக்கீர தகனம் கதையை நினைவூட்டினேன். பெண்ணின் கூந்தலில் உள்ள மணம் செயற்கையாக வந்ததாகத்தான் இருக்க முடியும் என்ற ஒரு இயற்கை உண்மையைச் சொன்னதற்காக, சிவனார் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தாரே, அதன் மூலம் அதிகார ஆன்மிக பீடத்தில் இருப்பவரின் கருத்துடன் முரண்பட்டால் வன்முறைத் தாக்குதல் தொடுப்பதில் தவறில்லை என்ற எண்ணம் விதைக்கப்படவில்லையா என்று கேட்கப்போனேன். சட்டென்று குறுக்கிட்ட பாண்டே, “அந்தக் கதையை நம்புகிறீர்களா?” என்று கேட்டு விவாதத்தைத் தடம் மாற்றினார். அதற்காக நான் அந்த நிறுவனத்தின் விவாதங்களில் பங்கேற்க மறுத்ததில்லை. அவர்களாக என்னை அழைப்பதை நிறுத்திக்கொண்டதன் பின்னணியை யானறியேன். அது ஒன்றும் எனக்குப் பெரிய இழப்பல்ல என்றெல்லாம் நான் வசனம் பேச மாட்டேன். நிச்சயமாக, பரவலான மக்களிடையே செல்லும் ஓர் ஊடகத்தில் எனது மாற்றுக் கருத்துகளைச் சொல்ல முடிகிறது என்ற வாய்ப்பு தடுக்கப்பட்டுவிட்ட ஆதங்கம் எனக்கு இருக்கவே செய்கிறது.

ஊடக நிறுவனங்கள் எதுவுமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல. அந்த விமர்சனத்தை வலுவாக முன்வைப்பதன் மூலம் இத்தகைய நிறுவனங்களின் நடுநிலை ஒப்பனைகளை மக்கள் முன் கலைத்துக்காட்ட வேண்டும். அதற்கான வழி நிச்சயமாக, அந்த நிறுவனங்களையோ அவற்றின் செய்தியாளர்களையோ புறக்கணிப்பது அல்ல. ஒரு குறிப்பிட்ட பேட்டியில் எல்லாச் செய்தியாளர்களும் பங்கேற்ற நிலையில், அது செய்தியாக வருகிறபோது குறிப்பிட்ட நிறுவனம் திரித்துச் சொல்கிறது என்றால் அதைக் கிழித்துக் காட்ட முடியும். மக்களே அதை ஒப்பிட்டுப் பார்த்து அந்த நிறுவனத்தின் திரிப்புக் கைங்கர்யத்தைப் புரிந்துகொள்வார்கள்.

ஊடகச் சுதந்திரம் என்ற பெயரில்தானே இதையெல்லாம் செய்கிறார்கள், அதற்கு என்ன வரையறை என்று கேட்கப்படுகிறது. ஊடகங்கள் தாக்கப்படுகிறபோதெல்லாம் ஊடகச் சுதந்திரம் பற்றிய குரல்கள் ஓங்கி ஒலிக்கும். வேடிக்கை என்னவென்றால், ஊடகச் சுதந்திரம் என்றால் என்ன, அந்தச் சுதந்திரத்தின் எல்லை எது என்பதெல்லாம் இதுவரையில் எங்கேயும் வரையறுக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபை சார்பில் இதற்காக சில முயற்சிகள் நடந்தன. ஆனால், அந்தக் கூட்டங்களில் கலந்துகொண்ட வளரும் நாடுகளின் ஊடகப் பிரதிநிதிகள், ஊடகச் சுதந்திரத்தை மட்டும் வரையறுத்தால் போதாது, ஊடக நெறியையும் வரையறுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். மேற்குலக நாடுகளின் பெரும் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் அதை ஏற்கவில்லை. ஊடகச் சுதந்திரம், ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி மட்டுமே விவாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். ஆகவேதான், இன்றும் இவை இரண்டும் வரையறுக்கப்படாமல் இருக்கின்றன. ஆகவே, இந்த இரண்டையும் பற்றி அவரவர் கண்ணோட்டப்படியே இன்றளவும் வாதங்கள், எதிர்வாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஓர் ஊடக நிறுவனம் தனக்கான நெறியைத் தனக்குத் தானே வகுத்துக்கொள்ள வேண்டும் என்பதுகூட ஏற்கத்தக்கதுதான். அவ்வாறு வகுத்துக்கொள்கின்றனவா அல்லது ஒரு பரபரப்பு அலையைக் கிளப்பிவிட்டு வணிகக் கரையைப் பாதுகாத்துக் கொள்கின்றனவா என்பதற்குப் பல சாட்சியங்கள் இருக்கின்றன. ஜிக்னேஷ் செய்தியை ரிபப்ளிக் டிவி எப்படி ஒளிபரப்பியது என்பதும் ஒரு சாட்சிதான். முன்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளி உதயகுமார் பற்றிய ஓர் ஒளிப்பதிவை அதே நிறுவனம் எப்படிப் பயன்படுத்தி அவரை மக்கள் பார்வையில் கீழிறக்கி வைக்க முயன்றது என்பது உள்ளிட்ட காட்சிகள் இருக்கின்றன. அந்த நிறுவனத்தால் இப்படிக் குறிவைக்கப்படுகிறவர்கள் எல்லோரும் மத்திய ஆட்சியாளர்களுக்கும் அவர்களை ஆட்டுவிக்கிறவர்களுக்கும் உகந்தவர்களாக இல்லை என்பது தற்செயலானதுதானா?

தற்போதைய வாதத்தில் சிலர், வேறு சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, அப்போதெல்லாம் செய்தியாளர்கள் இப்படி ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியதுண்டா என்று கேட்டிருக்கிறார்கள். எல்லாச் செய்தியாளர்களும் பங்கேற்கிற நிகழ்வுகளில் குறிப்பிட்ட செய்தியாளர் மட்டும் இருக்கக் கூடாது என்று பேட்டியாளர்கள் நிபந்தனை போட்டபோதெல்லாம் மற்ற செய்தியாளர்கள் கூட்டாகச் செயல்பட்டு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். அந்தச் செய்தியாளரும் தொடர்ந்து அங்கே இருந்து பணியாற்றுவதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அது ஏற்கப்படாதபோது இதேபோல் வெளிநடப்பும் செய்திருக்கிறார்கள். அந்தச் செய்திகள் எதையுமே பார்க்காமல் இவர்கள் இப்படிக் கேட்கிறார்கள் என்பதுதான் சங்கடம்.

செய்தியாளர்களையே சந்திக்காதவர்களான பிரதமர் மோடி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பற்றியெல்லாம் குறிப்பிட்டு அவர்களைக் கேள்வி கேட்டதுண்டா என்றும் சிலர் கேட்டிருக்கிறார்கள். இப்படிக் கேட்பது தற்போதைய விவாதத்துக்குப் பொருத்தமில்லாதது. ஜெயலலிதா அன்று செய்தியாளர்களைச் சந்தித்ததே இல்லை என்பதையும், மோடி இன்று செய்தியாளர்களோடு தனது மன் கி பாத் நிகழ்வை வைத்துக்கொள்வதில்லை என்பதையும் ஊடகவியலாளர்கள் கூர்மையாக விமர்சித்து வந்திருக்கிறார்கள். அவர்களுடைய அரிதான செய்தியாளர் சந்திப்பு நிகழ்வுகளில் குறிப்பிட்ட யாரேனும் வெளியேற்றப்பட்டிருப்பார்களானால், அப்போது சக செய்தியாளர்கள் மௌனமாக இருந்திருப்பார்களானால் மட்டுமே இந்தக் கேள்வியை எழுப்ப முடியும். நடக்காத ஒன்றைக் கேள்வி மேடைக்குக் கொண்டுவந்தால் பதில் எங்கேயிருந்து வரும்?

இதில் உள்ள இன்னொரு முரண்பாட்டை ஓர் ஊடக நண்பர் சுட்டிக்காட்டுகிறார். ஜெயலலிதா செய்தியாளர்களையே சந்தித்ததில்லை என்பதை அவரது ஆணவம் அல்லது திமிர் என்று கூறுகிறவர்கள், ஜிக்னேஷ் இவ்வாறு செய்கிறபோது அதை ஒரு தீரச் செயல்போல பார்க்கிறார்களே என்று கேட்டார் அவர். தமிழக முதலமைச்சராக இருந்துகொண்டு ஒட்டுமொத்தமாக எல்லா ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களையும் பார்க்க மறுத்ததையும், ஓர் எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் செய்தியாளர்களிடம் மட்டும் ஒரு ஆவேச வெளிப்பாடாக இவ்வாறு நடந்துகொள்வதையும் ஒப்பிட முடியாது.

ஆனால், அது வேறு. அவ்வாறு நடந்துகொள்ளத்தான் வேண்டுமா என்பது வேறு. சொல்லப்போனால், வெளிநடப்புச் செய்த செய்தியாளர்களில் பலர், “தமிழ் நேயர்களுக்கு ஜிக்னேஷ் இயக்கம் பற்றிய ஒரு நல்ல அறிமுகத்தைத் தருவதற்கான வாய்ப்பாக அந்தப் பேட்டியைப் பயன்படுத்த நினைத்திருந்தோம். ஆனால் அவருடைய அணுகுமுறையால் அந்த வாய்ப்பு தவறிவிட்டது” என்று உளப்பூர்வமாக என்னிடம் வருந்திப் பேசினார்கள். ஆக தமிழகத்துக்கல்லவா ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது? அதற்கு ஜிக்னேஷ் அணுகுமுறையுமல்லவா காரணமாக இருந்திருக்கிறது?

நடக்காத ஒன்றை நடப்பதாக வைத்துக்கொண்டு பேசுவதானால், இப்படியும் நடக்கலாமே. போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் போன்றதொரு நிகழ்வின்போது அரசாங்கத்தின் சார்பாக ஒரு செய்தியாளர் சந்திப்பு நடப்பதாக வைத்துக்கொள்வோம். அல்லது சந்தை ஆக்கிரமிப்பின் பின்னணியில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அமைப்பு சார்பாக, அல்லது ஒரு மதவாத அரசியல் அமைப்பின் சார்பாக, அல்லது சாதிய அமைப்பொன்றின் சார்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வு நடப்பதாக வைத்துக்கொள்வோம். நானும் அதில் கலந்துகொள்கிறேன் என்றும் வைத்துக்கொள்வோம். இதற்கெல்லாம் எதிராக எழுதிக்கொண்டிருக்கிற ‘தீக்கதிர்’ ஏட்டிற்குப் பேட்டியளிக்க மாட்டோம் எனக்கூறி அவர்கள் என்னை வெளியேறச் சொன்னால் சக பத்திரிகையாளர்கள் என்னோடு வரத்தான் செய்வார்கள். அவர்களில் என்னோடு கருத்து முரண்பாடு உள்ளவர்களும் இருப்பார்கள்.

பொது அரசியல் களத்தில் இன்றைய நிலைமைகளுக்கு ஏற்ற அணுகுமுறைகள் தேவை. உடனடி வெற்றிக்காக சில உடனடி யுக்திகளும், தொலைநோக்கு வெற்றிக்காக இலக்குத் திட்டங்களும் தேவை. இந்தப் பார்வையைச் சரியாகவே கொண்டிருக்கிறார் ஜிக்னேஷ். அது, இந்த அமைப்போடு இருக்கிற ஊடகங்கள் தொடர்பாகவும் இருப்பதில் தவறில்லை. கூர்மையாக விமர்சித்துக்கொண்டே, அவர்களது திருவிளையாடல்களைச் சாடிக்கொண்டே, அவர்கள் மூலமாகவும் செய்தி மக்களைச் சென்றடைய வைப்பதில் வீழ்ச்சி ஒன்றுமில்லை.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 19 ஜன 2018