ஆக்கிரமிப்பால் சுவாசிக்கக்கூட முடியவில்லை: நீதிமன்றம்!


விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், ‘ஆக்கிரமிப்பு கட்டடங்களால் ஒழுங்காகச் சுவாசிக்கக்கூட முடியவில்லை’ என்று வேதனை தெரிவித்துள்ளது.
செங்குன்றம் அருகே அடுக்குமாடி கட்டடத்துக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று (ஜனவரி 18) நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கட்டடம் விதி மீறி கட்டப்பட்டிருப்பது உறுதியானால் அதைக் கட்டாயம் இடிக்க வேண்டும் என்றும், கட்டடத்தை இடிக்கத் தாமதப்படுத்தும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
பின்னர், சென்னையில் புற்றுநோய் போல் பரவும் ஆக்கிரமிப்பு கட்டடங்களால், ஒழுங்காகச் சுவாசிக்க கூட முடியவில்லை என்ற வேதனைத் தெரிவித்தனர். மேலும், சென்னையில் விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்வதை விடுத்து, ஒரு மாதத்துக்குள் அவற்றை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். இதேபோன்று ஏரி, புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.