மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: ஆப்பிள் சாகுபடியில் நம்பிக்கை கொண்ட விவசாயிகள்!

சிறப்புக் கட்டுரை: ஆப்பிள் சாகுபடியில் நம்பிக்கை கொண்ட விவசாயிகள்!

பிரேர்னா லிதூ

குணால் சவுகான் எட்டு வருடத்துக்கு முன்பு சண்டிகரில் டெல் நிறுவனத்திலிருந்து நல்ல ஊதியம் கிடைத்த வேலையை விட்டு வெளியேறினார். தனது குடும்பத் தொழிலிலேயே ஈடுபட விரும்பினார். இமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞரான இவர், மூன்றாம் தலைமுறையாக விவசாயத்தைக் கையிலெடுத்திருக்கிறார். இவர் ஆப்பிள் விவசாயத்தை நவீனப்படுத்தி மேற்கொள்ள விரும்பினார். “இமாசலப் பிரதேசத்தின் இந்நிலப்பரப்பில் முந்தைய காலங்களில் விவசாயம் மேற்கொண்ட யாரும் இயந்திரங்களைப் பயன்படுத்த பெரிதும் பழகவில்லை. ஆனால், நான் உற்பத்தியை அதிகரிக்கவும், வருவாயைப் பெருக்கவும், மனித ஆற்றலின் தேவையைக் குறைக்கவும் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினேன்” என்கிறார் சவுகான்.

இவர் சிம்லாவைச் சேர்ந்த முற்போக்கு விவசாயிகள் சங்கத்தில் (பி.ஜி.ஏ.) பொதுச் செயலாளராகவும், நிறுவனராகவும் உள்ளார். இச்சங்கத்தில் 135 பேர் உறுப்பினராக உள்ளனர்.

இமாசலப் பிரதேசத்தில் ஆப்பிள் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. வெகு காலமாகவே சாகுபடிக்கு அதிகளவிலான மனித ஆற்றலைப் பயன்படுத்தியே இங்கு ஆப்பிள் விவசாயம் மேற்கொண்டு வந்துள்ளனர். மிகவும் மெதுவாகவே நவீனமயமாக்கல் கையிலெடுக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் விவசாயம் தான் இமாசலப் பிரதேசத்தின் வேளாண் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. பனி உருகும் காலங்களிலும், வசந்த காலங்களிலும் ஆப்பிள் விவசாயம் சற்றே பாதிக்கும். இக்காலகட்டத்தில் பழங்களின் நிறமும் தித்திக்கும் சிகப்பு நிறத்திலிருந்து சற்றே பச்சை நிறமாகக் காணப்படும். சிம்லா, கின்னார் மற்றும் குல்லு ஆகிய மாவட்டங்களில் ஏக்கர் கணக்கான ஆப்பிள் தோட்டங்களில் கூலிப் பணியாளர்கள் ஒரு முக்கோணக் கூடையை முதுகில் கட்டிக்கொண்டு அறுவடையில் ஈடுபடுவர்.

“பனியால் சூழப்பட்ட இச்சிகரங்களில் நீண்ட காலமாக ஆப்பிள் விவசாயத்தை முக்கிய தொழிலாகக்கொண்டு இப்பகுதியின் பெரும்பான்மை மக்கள் வாழ்கின்றனர். தொடக்கத்தில் பழைய முறையைப் பயன்படுத்தியே இவர்கள் பெரும்பாலும் இப்பணியை மேற்கொள்கின்றனர். ஆனால், அதிநவீனத் தொழில்நுட்பம், அமைப்பு முறை, தானியங்கி மருந்துத் தெளிப்பு முறை, விதைகள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டம் போன்றவற்றைத் தற்பெருமைக்காகப் பயன்படுத்தத் தொடங்கினர். அதேபோல பருவநிலைக்கேற்ப பழங்களைச் சேமித்து வைக்கும் குளிர்பதன வசதிகளையும் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் பழங்களை நீண்ட நாள்கள் சேமித்து வைக்க முடிந்தது. பணம் செலுத்தி அறிவியல் முறைகளைப் பெற்றனர். பழங்கால முறைப்படி செய்யப்பட்ட விவசாயத்தில் 25 ஆண்டுகளுக்கு மரங்கள் பழங்களைத் தந்தன. ஆனால், இன்று இதன் கால அளவு எட்டு வருடங்களாகச் சுருங்கிவிட்டது. புதிய தொழில்நுட்பங்கள் பழங்களின் தரத்தையும், அளவையும் பாதித்துவிட்டது” என்கிறார் சவுகான்.

இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தியில் இமாசலப் பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் காஷ்மீர் உள்ளது. 2015-16ஆம் நிதியாண்டில் இமாசலப் பிரதேசத்தில் 7,80,000 டன் ஆப்பிள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் வர்த்தக மதிப்பு ரூ.3,500 கோடியாகும். இதன் மேம்பாடு மற்றும் இங்கு விளையும் பழங்களின் தரத்தால் இங்குள்ள 1,70,000 குடும்பங்கள் பயன்பெறுகின்றன.

“25 கிலோ ஆப்பிள் பை ஒன்றுக்குத் தொடக்கத்தில் ரூ.1,000 கிடைத்தது. ஆனால், தற்போது ரூ.1,700 வரை கிடைக்கிறது” என்கிறார் சவுகான். இம்மாநிலத்தின் மொத்த பழ சாகுபடியில் 84 சதவிகிதம் ஆப்பிளாகும். 1950-51ஆம் ஆண்டில் 400 ஹெக்டேராக இருந்த ஆப்பிள் சாகுபடி தற்போது 1,10,679 ஹெக்டேராக அதிகரித்துள்ளது. அதாவது மொத்த பழ உற்பத்தியில் 49 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இந்த மதிப்பீடுகள் ஆப்பிள் சாகுபடி நன்கு செழிப்பாக உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால், உண்மையில் இத்துறை பலவேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக அதிகப்படியான அளவில் அமெரிக்கா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்கள் உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தகத்தைப் பெருமளவு பாதித்துள்ளது. பாரம்பர்யமாக ஆப்பிள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் பலவும் இன்று குடியிருப்புகளாக மாறியிருக்கின்றன. மக்கள்தொகை அதிகரிப்பும், நகரமயமாதலுமே இதில் முக்கிய பங்காற்றியுள்ளன.

இமாசலப் பிரதேசத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் செயலாக்க நிறுவனம் (ஹெச்.எம்.பி.சி) இந்தச் சிக்கல்களுக்கான தீர்வைக் காண முன்வந்துள்ளது. “தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு நிதியுதவி அளிக்க உலக வங்கி நிதியாக ரூ.1,115 கோடி அளித்துள்ளது. புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க 7 ஆண்டுத் திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். உலக வங்கி சந்தைப்படுத்துதலுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயல்படுகிறது. சந்தைப் பங்கை அதிகரித்தல், சிறந்த வகைகளை இறக்குமதி செய்தல், சொட்டு நீர்ப்பாசனத் திட்டத்தை அளித்தல் போன்றவற்றின் மூலம் ஆப்பிள் விவசாயிகளுக்குச் சிறந்த வாய்ப்பை அமைத்துக் கொடுத்தல் ஆகியவையே முக்கிய இலக்காகும்” என்று ஹெச்.எம்.பி.சி. துணைத் தலைவர் பிரகாஷ் கூறுகிறார்.

இந்நடவடிக்கைகள் இந்த உற்பத்தி வளையத்தில் இருந்த நுகர்வோர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நேர்மறையான வளர்ச்சியை அளித்தன. அதேசமயத்தில் ஆப்பிள் உற்பத்தியாளர்கள் இரண்டு வகையான விற்பனை முறையைப் பின்பற்றினர். ஒன்று, சரக்குகளை அடிப்படையாகக் கொண்டு ஏலத்தில் விடுவது; மற்றொன்று, பல்வேறு தரங்களில் விலை நிர்ணயித்து தனியார் விற்பனையில் ஈடுபடுவது. இமாசலப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் 95 சதவிகித ஆப்பிள் உற்பத்தியாளர்கள் மண்டிகளில் ஏலம் விடும் முறையையே பின்பற்றுகின்றனர்.

“ஆப்பிள் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கிய காலகட்டத்தில் ஆப்பிள் கிலோ ஒன்றுக்கு ரூ.45 வரை விற்பனையானது. ஆனால், இன்று இதன் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100 வரை சென்றுவிட்டது. பேக்கிங் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள், வர்த்தகர்கள் மற்றும் இடைத் தரகர்களுக்கான கமிஷன் தொகை, மாநில அரசின் வரி மற்றும் ஊழியர்களின் ஊதியம் ஆகியவை அதிகரித்ததே விலையுயர்வுக்குக் காரணமாகும். ஆப்பிள் உற்பத்தியாளர்கள் தோராயமாக பெட்டி ஒன்றுக்கு 70 சதவிகிதம் வரை லாபமீட்டுகின்றனர். பழைய முறையைக் கையாண்டபோது கூடுதல் லாபம் கிடைத்தது” என்கிறார் சவுகான்.

இந்தியா தற்போது சர்வதேச அளவில் ஆப்பிள் உற்பத்தியில் மூன்றாவது இடம் வகிக்கிறது. ஆனால், இந்தியாவின் ஆப்பிள் சாகுபடி தற்செயலாக அமைந்தது. 1870ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி குல்லு பள்ளத்தாக்கில் இங்கிலாந்து ஆப்பிள்களை அறிமுகம் செய்து வைத்தார். ஆனால், அது இந்தியச் சுவையில் மிகவும் புளிப்பாக இருந்தது. பின்பு 1915ஆம் ஆண்டில் அமெரிக்க மத போதகர் ஒருவர் லூசியானாவில் காப்புரிமை பெறப்பட்ட ஆப்பிள் வகைகளை இந்தியாவில் அறிமுகம் செய்தார். இந்தப் பழங்கள் சிவப்பு நிறத்தில் மிகவும் சுவையுடையவையாக இருந்தன. இவர் ஆப்பிள் செடிகளை வாங்கி இமாசலப் பிரதேசத்தின் தாந்தர் கிராமத்தில் தோட்டம் அமைத்தார். இதன் முதல் அறுவடை 1926ஆம் ஆண்டில் நடந்தது.

தொடக்கக் காலத்தில் உள்ளூர் விவசாயிகள் கோதுமை சாகுபடியிலிருந்து ஆப்பிள் சாகுபடிக்கு மாற மறுத்தனர். ஆனால், இனிப்பான ஆப்பிள் வகைக்குச் சந்தையில் வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து விவசாயிகளும் ஆப்பிள் சாகுபடியை கையிலெடுக்கத் தொடங்கினர். தற்போது 100 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்று இமாசலப் பிரதேசத்தின் முக்கிய விவசாயத் தொழிலாக ஆப்பிள் சாகுபடி மாறியிருக்கிறது. சந்தைகளில் இன்று ஆப்பிள் நிரம்பி வழிகிறது. ஆப்பிள் ஜாம் (பழ ஊறல்), பழச்சாறு மற்றும் சட்னி வகைகள் அதிகளவில் இன்று சந்தைகளில் விற்பனையாகின்றன. அதேசமயம் பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஆப்பிள் உற்பத்தியாளர்களையும், வர்த்தகர்களையும் கடுமையாகப் பாதித்தது என்கிறார் புரா ஹாசன்.

இவர் சிம்லா மால் சாலையில் 25 ஆண்டுகளாக ஆப்பிள் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கூறுகையில், “பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட காலத்தில் மக்கள் ஆப்பிள் வாங்குவதையே நிறுத்திவிட்டனர். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் சுமார் நான்கு மாதங்கள் வரை விற்பனை கடுமையாகப் பாதித்திருந்தது. உணவகங்களும் தெருக்களும் காலியாக இருந்தன. நம்மிடம் யார் வருவார்கள்?” என்றார்.

நன்றி: பார்ச்சூன் இந்தியா

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வெள்ளி 19 ஜன 2018