ஆண்டாள் சர்ச்சை: மவுனம் கலைத்த ஆளுங்கட்சி!


ஆண்டாள் சர்ச்சை குறித்து ஆளுங்கட்சியிலிருந்து யாரும் கருத்து தெரிவிக்காத நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் முதன்முறையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 7ஆம் தேதி தினமணி நாளிதழ் சார்பில் ஆண்டாள் குறித்த நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது. விழாவில் கலந்துகொண்டு ஆண்டாள் பற்றி உரையாற்றிய கவிஞர் வைரமுத்துவின் பேச்சு சர்ச்சைக்குரிய விதத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வைரமுத்துவுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன. ஆனால், ‘ஆண்டாள் குறித்து நான் கூறியது எனது கருத்தல்ல, ஆண்டாளை பெருமைப்படுத்துவதே தனது நோக்கம்’ என்று வைரமுத்து இருமுறை விளக்கம் அளித்துவிட்டார். ஆனால், வைரமுத்துவுக்கு எதிராக இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆளுங்கட்சி சார்பில் இதுவரை முதல்வரோ, துணை முதல்வரோ கருத்து தெரிவிக்காமல் இருந்துவந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரில் கடந்த பொங்கலன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி, ‘ஆண்டாள் சர்ச்சை பெரிய விவகாரம். அதைப் பற்றி பேச விரும்பவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று (ஜனவரி 18) ஆண்டாள் சர்ச்சை குறித்து முதன்முறையாக தனது கருத்தை முகநூலில் பதிவு செய்துள்ளார் துணை முதல்வர் பன்னீர்செல்வம். அவர், “அவரவர் எண்ணங்களின் அடிப்படையில் தெய்வங்களை வணங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய இஷ்டப்படி தெய்வங்களை வணங்கிக்கொண்டிருக்கும்போது கரும்புள்ளி ஏற்படும் வகையில் யார் கருத்து சொன்னால் அது ஏற்புடையதாக இருக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.