காட்டுமிராண்டி அரசியலை நடத்த முயற்சி: கி.வீரமணி


தமிழகத்தில் காட்டுமிராண்டி அரசியலைப் புகுத்த சில சக்திகள் முயற்சிப்பதாகவும், அதைக் கண்டு அஞ்சமாட்டோம் என்றும், திருநெல்வேலியில் நேற்று (ஜனவரி 18) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
திருநெல்வேலியில் திராவிடர் கழகம் சார்பாக, நேற்று பயிலரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்தார். “ஆண்டாள் சர்ச்சையில் வைரமுத்து மன்னிப்பு கேட்ட பின்னரும், தற்போது தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இது அவசியமற்றது.
தலையை வெட்டுவேன் என்று பேசுகிறார்கள்; காட்டுமிராண்டி அரசியலை இங்கு நடத்த முயற்சிக்கிறார்கள். வடநாட்டு கலாசாரத்தைத் தமிழகத்தில் புகுத்த நினைக்கின்றன சில சக்திகள். புதிதாகச் சேர்ந்த இடத்தில் ஏதாவது கிடைக்கும் என்று சிலர் அவ்வாறு பேசி வருகின்றனர். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். கருத்து மோதலை எதிர்கொள்ளத் தெரியாதவர்களே, இப்படி பண்பாடற்ற முறையில் பேசுவார்கள்” என்று கூறினார் வீரமணி.
தொடர்ந்து பேசியவர், “அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதைச் சட்டமாக்கியது திமுக அரசு. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2014ஆம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. அதில், அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் செல்லும் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனாலும், இதுவரை அதை நிறைவேற்றாமல் இருக்கிறது தமிழக அரசு.
திருப்பதி கோயிலிலும் கேரளாவிலுள்ள சில கோயில்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக அனுமதி தரப்பட்டுவிட்டது. ஆனால், சாதி ஒழிப்புக்காக போராடிய தமிழகத்தில் இன்னும் இதை நடைமுறைப்படுத்த முடியவில்லை” என்று வருத்தம் தெரிவித்தார். மேலும், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அர்ச்சகர் ஆவதற்கு பயிற்சி அளிக்கப்பட்ட அனைத்து சமுதாயத்தினரையும் கோயில்களில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், அதை நடைமுறைப்படுத்தாவிட்டால் திராவிடர் கழகம் சார்பாகப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.