கட்டாயமாகும் ஜிபிஎஸ் கருவி!


இந்தியா முழுவதிலும் உள்ள டாக்ஸி, பஸ், மக்கள் பயன்பாட்டு வாகனங்கள்,ரிக்ஷா உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்கள் அனைத்திலும் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ‘ஜிபிஎஸ்’ கருவியைப் பொருத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் நேற்று (ஜனவரி 17) இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "மத்திய போக்குவரத்து அமைச்சகம், 23 இருக்கைகளுக்கு மேல் கொண்ட பேருந்துகளுக்கு சிசிடிவி பொருத்தும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. திறந்த அமைப்பு கொண்ட மூன்று சக்கர வாகனங்களுக்கு ஜிபிஎஸ் மற்றும் அலர்ட் பட்டன் வசதி தேவையில்லை. மூடிய அமைப்பு கொண்ட மூன்று சக்கர வாகனங்களுக்கு இவை அவசியமாகும்.
மாநில போக்குவரத்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மக்கள் பயன்பாட்டு வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் அலர்ட் பட்டன் வசதி பொருத்தப்படவுள்ளது. பயணிகள் ஆபத்து நேரத்தில் அந்த அலர்ட் பட்டன் அழுத்த நேரிட்டால் காவல் துறைக்கு உடனடியாக தகவல் அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.