வெற்றிவேல் வெற்றி செல்லும்!


பெரம்பூர் தொகுதியில் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றிவேலும், திமுக கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் என்.ஆர்.தனபாலனை விட 519 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிவேல் வெற்றி பெற்றார்.
இதனை எதிர்த்து வெற்றிவேல் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி என்.ஆர்.தனபாலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை என்றும், பணம் மற்றும் அதிகார பலத்தை வைத்து வெற்றிவேல் வெற்றிபெற்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், இன்று ( ஜனவரி 18) சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் வெற்றிவேல் வெற்றி பெற்றது செல்லும் என்று தீர்ப்பளித்தும், மனுதாரரின் சாட்டிய குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.