தினகரன் – திவாகரனைக் கைது செய்ய வேண்டும்!

ஜெயலலிதா மரணம் குறித்த தகவல்களை விசாரணை ஆணையத்திடம் அளிக்காமல் பொதுவெளியில் தெரிவித்துவரும் தினகரன் திவாகரன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்துவருகிறது. இதுவரை பலரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். கடந்த மாதம், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நேற்று ஜனவரி 17 நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மாலையே இறந்துவிட்டார்” என்று தெரிவித்தார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தினகரன், திவாகரன் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜனவரி 18) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜெயலலிதா மரண விவகாரத்தில் யாராக இருந்தாலும் விசாரணை ஆணையத்தில்தான் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். ஜெயலலிதாவை வைத்து அரசியல் செய்யும் தினகரன், திவாகரன் போன்றோர் தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர். எனவே விசாரணை ஆணையம் தானாகவே முன்வந்து வழக்கு (Suo Moto) தொடர்ந்து இருவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ரஜினி, கமலின் அரசியல் பாதை குறித்த கேள்விக்கு, “யார் எதை நோக்கி பயணித்தாலும் எங்களின் பயணம் மக்களை நோக்கியே உள்ளது” என்று அவர் விளக்கமளித்தார்.
காணாமல் போன மீனவர்கள் குறித்து அரசிதழ்
புயலால் காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்கள் குறித்து அவர் பேசுகையில், “ஓகி புயலால் காணாமல் போன 194 மீனவர்கள் தொடர்பாக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்படும். புயலால் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை 194. உயிரிழந்தோர் எண்ணிக்கை 25. ஜனவரி முதல் வாரத்தில் மாலத்தீவு பகுதியில் தேடினோம். காணாமல் போனவர்கள் 15 நாட்களுக்குள் கரை திரும்பாவிட்டால் இறந்ததாக அறிவிக்கப்படும்” எனக் கூறினார்.