மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

வைரமுத்து விவகாரம்: திரையுலகம் மவுனம் காப்பது ஏன்?

வைரமுத்து விவகாரம்: திரையுலகம் மவுனம் காப்பது ஏன்?

இராமானுஜன்

வைரமுத்து தமிழ் சினிமாவுக்குத் தன் பாடல்களால் பெருமை சேர்த்தவர். சினிமா பாடல்களில் புதுப் புதுச் சொற்றொடர்களைப் புகுத்தித் திரைத் தமிழுக்குப் பெருமை கூட்டிய படைப்பாளி. இன்றைக்கு அவர் குறிப்பிட்ட ஒரு பிரிவினரால் வதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

சினிமா மேடைகளிலும் பொது மேடைகளிலும் பேசும்போது மேற்கோள் காட்டுவதற்கு இலக்கியங்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும், அறிஞர்கள் கருத்துகளையும் துணைக்கு அழைத்துக்கொள்வது வைரமுத்துவின் வாடிக்கை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பற்றி பேசியதிலும், எழுதியதிலும் அப்படி ஒரு மேற்கோள் கையாளப்பட்டதன் விளைவாக வைரமுத்து மட்டுமல்ல அவரது வம்சாவளிகளையும், குடும்பத்தாரையும் அநாகரிக வார்த்தைகளால் அர்ச்சித்துக்கொண்டிருக்கிறது காவிக் கூட்டம். தொலைக்காட்சி ஊடகங்கள் இந்தப் பிரச்சினையின் அனல் குறையாமல் ஊதிப் பெரிதாக்கி ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கின்றன.

தார்மிக அடிப்படையில் வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்பும் ஏன் இந்தக் கண்டனங்கள் என்கிற கேள்வி உரக்க ஒலிக்கிறது. எப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற கட்டளையும் காவிக் கட்சியின் தூண்டுதலால்கர்ண கொடூரமாக கர்ஜிக்கப்படுகிறது. இதற்கு எதிராகக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மதவாத, சாதிய அமைப்புகளின் அநாகரிகப் பேச்சுகளைக் கண்டித்தார்கள்.

திரையுலகின் நிலை என்ன

ஆனால், திரையுலகம் வைரமுத்து வசைபாடப்படுவதைக் கனத்த மௌனத்துடன் வேடிக்கை பார்த்துவருகிறது. இயக்குனர் பாரதிராஜா வைரமுத்துவுக்கு ஆதரவு குரல் கொடுக்கும் சாக்கில் நாங்கள் யார் தெரியுமா எனச் சாதிய உணர்வுடன் அறிக்கை வெளியிட்டு இனிய தமிழ் மக்களிடம் சாயம் வெளுத்த சாதிக்காரனாக அடையாளப்படுத்திக்கொண்டார்.

எழுத்துலகின் அறிவுஜீவிகள் அறிவுபூர்வமாக அறிக்கை வெளியிட்டுத் தங்கள் கடமையை முடித்துக்கொண்டார்கள். காவிரிப் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, ஜல்லிகட்டுப் போராட்டம், விவசாயிகள் பிரச்சினை என அனைத்துப் பொது விஷயங்களிலும் கருத்து சொன்ன, கண்டித்து அறிக்கை வெளியிட்ட திரைப் பிரபலங்கள் இதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. திரைப்பட அமைப்புகள் சார்பில்கூட வைரமுத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடப்படவில்லை.

இதற்கு என்னதான் காரணமாக இருக்க முடியும்? திரை பிரபலங்களை உரசிப் பார்த்தபோது, வைரமுத்து தன் கவிதைத் தொழிலுக்கு மட்டும் நேர்மையான படைப்பாளி, மற்றபடி மனிதாபிமானி கிடையாது என்ற பதில் கிடைத்தது. தனக்குப் போட்டியாக வந்த இளம் பாடலாசிரியர்களைப் பாராமுகத்துடன் அணுகியவர். பிறருக்குக் கிடைக்கின்ற வாய்ப்புகளைத் தன் பிராபல்யத்தை வைத்துத் தட்டிப் பறித்தவர். பிறருக்குப் பிரச்சினை வந்தபோதெல்லாம் மௌனம் காக்கும் மஹா ஞானி என்றெல்லாம் சொல்கிறார்கள்.

தனக்குப் பின் தமிழ் சினிமாவுக்கு நல்ல பாடலாசிரியர்களை வளர்த்தெடுக்கும் பொறுப்பைப் புறந்தள்ளியதன் விளைவு, திரைப்படப் பாடலாசிரியர்கள்கூட இவருக்கு ஆதரவாகக் களமிறங்கத் தயாராகவில்லை.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 18 ஜன 2018