மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

ஐந்தாம் தேதிதான்... அப்போலோ விளக்கம்!

ஐந்தாம் தேதிதான்... அப்போலோ விளக்கம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதி மாலையே மரணமடைந்ததாகக் கூறிய சசிகலாவின் சகோதரர் திவாகரன் கிளப்பிய சர்ச்சைக்கு அப்போலோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அவற்றை விசாரிப்பதற்கு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மன்னார்குடியில் நேற்று (ஜனவரி 17) தினகரன் அணியினர் ஏற்பாடு செய்திருந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்துவிட்டதகாவும் மருத்துவமனை நிர்வாகத்தின் பாதுகாப்பு கருதியே டிசம்பர் 5ஆம் தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாகத் தான் கூறிய கருத்துகளுக்கு விளக்கமளித்து பேசிய திவாகரன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதி மாலையே மரணமடைந்ததாகத் தான் கூறிய கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, “மருத்துவத்தில் கிளினிக்கல் மற்றும் பயோலஜிக்கல் என்று இருவகையான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 4ஆம் தேதி மாலை மாரடைப்பு ஏற்பட்டு கிளினிக்கல் மரணம் அடைந்ததாகவும் டிசம்பர் 5ஆம் தேதி மாலை ஏற்பட்டதே பயோலஜிக்கல் மரணம், ராஜீவ் காந்தி அரசு மருத்துவர்கள் பரிசோதனை செய்தே ஜெயலலிதாவின் மரணத்தை உறுதி செய்தனர்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், “தொண்டர்களிடம் இதை விளக்குவதற்காகவே முயற்சி செய்தேன். ஆனால், அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” என்று தான் பேசியதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதிதான் உயிரிழந்தார் என்றும் சிகிச்சையின்போது மருத்துவமனையின் அனைத்து விதிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டன. ஜெயலலிதா மரணம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அப்போலோ நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சர்ச்சை குறித்து பேசிய தினகரன் ஆதரவாளரான தங்க.தமிழ்ச்செல்வன், திவாகரன் கூறிய கருத்துகளுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். மேலும், “அவர் பேசுவது உவப்பாக இல்லை. ஜெயலலிதா இறப்பு குறித்து திவாகரனுக்கு எப்படி தெரியும்? ஜெயலலலிதா மரணம் குறித்து ஏதாவது தெரிந்திருந்தால் விசாரணை ஆணையத்தில் சொல்வதே முறையானது” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 17) மாலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரன், “திவாகரன் பேசியது குறித்துத் தனக்குத் தெரியாது” என்றும், “அவர் கூறியது உண்மையா, பொய்யா என்று தெரியாது” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசும்போது, “ஏற்கெனவே ஜெயலலிதா வீட்டிலேயே இறந்துவிட்டதாகப் பலர் கூறிவந்தார்கள். வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ மூலமாக அது பொய் என்று நிரூபணமாகியது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு யாரை முதல்வராக்க வேண்டுமென்று திவாகரன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதை முடிவுசெய்ய வேண்டியவர்கள் மருத்துவர்களே. திவாகரன் அல்ல. அவர் அப்போலோவுக்கு எப்போது வந்திருந்தார் என்பது பற்றி எனக்குத் தெரியாது. இறந்துவிட்டாகக் கூறுவது திவாகரனின் சொந்தக் கருத்து” என்றும், “ஹார்ட் அட்டாக் வந்துவிட்டாலே ஒருவர் இறந்துவிட்டதாகக் கூற முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வியாழன் 18 ஜன 2018