மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: எனக்கு இன்னொரு பேர் இருக்கு - ரஜினியின் ஆன்மிக அரசியல்!

சிறப்புக் கட்டுரை:  எனக்கு இன்னொரு பேர் இருக்கு - ரஜினியின் ஆன்மிக அரசியல்!

தேவிபாரதி

ரஜினி கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தபோது தமிழக அரசியல்களத்தில் பெரும் பதற்றம் உருவாகியிருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது. இந்தத் தோற்றத்தைக் கட்டமைத்தவை ஊடகங்கள், குறிப்பாகக் காட்சி ஊடகங்கள். தனது பிறந்த நாளையொட்டி ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து ஆண்டின் இறுதி நாளில் அறிவிக்கப்போவதாகத் தெரிவித்த அந்தக் கணத்திலேயே தொலைக்காட்சி செய்தி அலைவரிசைகள் பல பதற்றத்தைக் கட்டமைக்கத் தொடங்கின. மற்ற எல்லாச் செய்திகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய விவாதங்களை ஒளிபரப்பத் தொடங்கின. அமைச்சர்கள், முன்னணி அரசியல் கட்சிகளின் தலைவர்கள், செய்தித் தொடர்பாளர்கள், இதழியலாளர்கள், திரையுலகினர், அரசியல் விமர்சகர்கள் என யாரையும் விட்டு வைக்கவில்லை. ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் தலைகீழான மாற்றத்தை உருவாக்கிவிடும் என்னும் எதிர்பார்ப்பு பல ஊடகங்களுக்கு இருந்ததுபோல் தோன்றியது.

ஆனால், பொதுமக்கள் யாருமே பதற்றமடையவில்லை. தொடர்ச்சியான விவாத அரங்குகளை ஒளிபரப்பியபோதும் எதிர்பார்த்தது போன்ற அதிர்ச்சியைத் தமிழக அரசியல் களத்தில் உருவாக்க ஊடகங்களால் முடியவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் வெற்றிடமொன்று ஏற்பட்டிருப்பதாகவும் அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடியவராக ரஜினி திகழ்வார் என்னும் ஒரு கற்பனையை உருவாக்க முற்பட்ட ஊடகங்கள் தாம் ஒருங்கிணைத்த விவாத அரங்குகளின் மூலம் அதைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. அரசியல் கட்சித் தலைவர்களில் பலரும் பதற்றமடைவதற்கு மாறாக ஜனநாயகத்தை மதிப்பவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அந்த விவாத அரங்குகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். எல்லோருமே பொத்தாம் பொதுவாக ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்றார்கள். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என ஒற்றை வரியில் ஜனநாயகத்தின் மாண்பைப் புகழ்ந்து தள்ளிவிட்டு, ஒதுங்கிக் கொள்ள முற்பட்டார்கள். ஆன்மிக அரசியல் என்னும் ரஜினியின் அறிவிப்பும் செய்தியாளர்கள் சந்திப்புக்களின்போது ரஜினியின் முதுகுக்குப் பின்னால் தொங்கவிடப்பட்டிருந்த பேனர்களில் தென்பட்ட பாபா முத்திரையும் பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜனைத் தவிர வேறு யாருக்கும் பரவசத்தை மூட்டியதாகத் தெரியவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கிவரும் இருபத்தெட்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரஜினி மன்றங்கள்கூடக் கொண்டாட்டங்களில் திளைக்க முற்படவில்லை.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் கபாலி படம் திரையிடப்பட்டபோது ரஜினி மன்றங்கள் அதை ஒரு முக்கிய நிகழ்வாக மாற்ற முற்பட்டு அதில் ஓரளவு வெற்றியும் பெற்றன. அவரது ஒவ்வொரு திரைப்படமும் வெளியாகும்போது அதுதான் நடந்துகொண்டிருந்தது. அநேகமாக ஒவ்வொரு முறையும் தங்களுடைய நாயகன் தனது அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவரது ரசிகர்கள். கொடிகளையும் பேனர்களையும் கட்அவுட்களையும் தயாராக வைத்துக் கொண்டிருந்தார்கள். விருந்துகளுக்கும் கேளிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்தார்கள். திருமண மண்டபங்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. அப்போதெல்லாம் ரஜினி அவர்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார். படம் திரையிடப்பட்டவுடன் சொல்லாமல் கொள்ளாமல் இமயமலைக்குப் போய்த் தன் பாபாவுடன் ஆலோசனை நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஏமாற்றமடைந்த அவரது ரசிகர்கள், பாபா அனுமதியளிக்காததே அவர் அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பை வெளியிடாததற்குக் காரணம் எனத் தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொண்டு அவரது அடுத்த திரைப்படத்தின் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினார்கள். இப்போது பாபா அரசியல் பிரவேசத்துக்கான தனது ஆசிகளை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும். பாபாவின் ஆசியுடன் அரசியலில் பிரவேசித்திருக்கும் ரஜினி, இனி தமிழ்ச் சமூகத்தின் ஆசிகளைப் பெற்றாக வேண்டும். அதைப் பெறுவது அவ்வளவு எளிதானதல்ல என்பதைக் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக நடைபெற்றுவரும் அரசியல் விவாதங்களைக் கூர்ந்து கவனித்திருப்பவர்களால் உணர்ந்திருக்க முடியும்.

தொலைக்காட்சி அலைவரிசைகள் ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றிய அறிவிப்பை மையப் பொருளாக்கித் தாம் உருவாக்க விரும்பிய பதற்றத்தைத் தக்கவைத்துக் கொள்ள படாத பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. விவாத அரங்குகள் இப்போது தமிழ்த் தேசிய அரசியல் ஆர்வலர்களின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டதுபோல் தோன்றுகிறது.

பிம்பங்களின் மூலம் பெற்ற பிம்பங்கள்

தனது திரைப்படக் கதாபாத்திரங்களின் மூலம் அநீதிகளை எதிர்ப்பதற்காகவும் அறத்தை நிலைநாட்டுவதற்காகவும் மூர்க்கமாகப் போராடிக் கொண்டிருந்த ரஜினியின் பிம்பங்களோடு ஆன்மிக அரசியலையும் பாபா முத்திரையையும் தனது அரசியல் அடையாளமாக முன்வைக்கும் ரஜினி என்ற புதிய அரசியல் நாயகனைப் பொருத்திக்கொள்ள முடியாமல் அவரது ரசிகர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது. கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலான தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்ற திரைப்படத் துறையினரில் பலர் தங்கள் பிம்பங்களின் மூலம் பெற்ற பிம்பங்களின் வழியாகவே அரசியல் அடையாளத்தைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் வெற்றி பெற்றவர்கள் திராவிட இயக்க, இடதுசாரி அடையாளங்களோடு தங்கள் பிம்பங்களைக் கட்டமைத்துக் கொண்டவர்கள்.

எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகாந்த் உள்ளிட்ட அரசியலில் முக்கியத்துவம் பெற்றவர்களின் திரை பிம்பங்கள் ழுக்கற்றவை. ஒடுக்கக்கப்பட்ட, சுரண்டப்படும் எளிய மனிதர்களின் பிரதிநிதிகளாகத் தம்மை உருவாக்கிக்கொண்டவை. அவர்களுக்காகப் போராடுபவை. அநீதிகளை எதிர்ப்பவை. நீதியை நிலைநாட்டுவதற்காக எத்தகைய அதிகார பீடங்களையும் துணிவுடன் எதிர்த்து நின்று முறியடிப்பவை. தமிழ் இலக்கியம் முன்னிறுத்தும் காதலுக்கும் வீரத்துக்கும் இலக்கணம் வகுத்தவை. தவிர, திமுகவைப் போன்ற ஏதாவதொரு திராவிட, இடதுசாரி இயக்க அரசியலை வசனங்களின் வழியாக வெளிப்படையாகப் பிரசாரம் செய்பவை. அரிதான தருணங்களில் தியாகம் செய்யத் தயங்காதவை. விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துக்கள், சிறுபான்மையினரின் நலன்களின் மீது அக்கறை கொண்டவை. பெண்களின் அன்பையும் தியாகத்தையும் போற்றுபவை. அவர்களைப் பாதுகாப்பவை. பாலியல் வன்கொடுமைகளிலிருந்தும் நிராதரவான நிலையிலிருந்தும் அவர்களை மீட்டெடுக்கவல்ல காக்கும் கரங்களாக இருந்தவை.

மேற்குறிப்பிட்ட திரை நாயகர்கள் நிஜவாழ்வில் தங்களைத் தங்கள் திரை பிம்பங்கள் முன்னிறுத்திய அரசியலோடும் அரசியல் கட்சிளோடும் உயிர்த்துடிப்பு மிக்க தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள். பிரசாரகர்களாகவும் போராளிகளாகவும் அவர்களது அரசியலில் பங்கெடுத்தவர்கள். தலைவர்களோடு நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவர்கள். தனது திரை பிம்பங்களுக்கும் அரசியல் அடையாளங்களுக்கும் எவ்விதமான முரண்பாடுகளும் அற்றவராகத் தன்னை முன்னிறுத்திக்கொண்ட எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றி இதற்குச் சான்று.

எம்.ஜி.ஆரும் ரஜினியும்

அரசியலில் எம்.ஜி.ஆரைப் போல் வெற்றிபெறக்கூடியவர் என அவரது ரசிகர்களால் கருதப்படும் ரஜினி, எம்.ஜி.ஆருக்குப் பிறகு திரைநாயகனாக பெரிய வெற்றிகளைப் பெற்றிருப்பவர். எம்.ஜி.ஆரின் பாத்திரங்களைப் போன்றே ரஜினியின் பாத்திரங்களும் அநீதியை எதிர்த்துப் போராடுபவை. சமூக விரோத சக்திகளை வீழ்த்துபவை. தலித்துக்கள், சிறுபான்மையினர், பெண்கள் நலனில் அக்கறை கொண்டவை. அவர்களின் பாதுகாவலனாகத் திகழ்பவை. அதிகார மையத்துக்கு எதிரானவை.

இந்த எல்லையோடு எம்.ஜி.ஆருக்கும் ரஜினிக்கும் உள்ள ஒப்புமைகள் முற்றுப் பெற்றுவிடுகின்றன. ரஜினி வெற்றிகரமான திரை நாயகன். அவரது திரை பிம்பங்கள் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஆதர்சமாக அமைந்தவை. ஆனால், அவர் தமிழகத்தின் எந்தவோர் அரசியல் அமைப்போடும் நேரடியான தொடர்பு கொண்டவர் அல்ல. தமிழகத்தின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் எந்தவொரு செயல்பாட்டிலும் அவர் பங்கெடுத்துக் கொண்டதில்லை. காவிரி நீர்ப் பிரச்னைக்காக ஒருநாள் உண்ணாவிரதம் இருந்ததும் 1996 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது அப்போதைய ஜெயலலிதா அரசுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்ததும் தவிர, அரசியல் ரீதியில் அவரது செயல்பாடுகளை நினைவுகூர்வதற்குக் குறிப்பிடத்தக்கதாக எதுவுமே இல்லை. தனது பஞ்ச் டயலாக்குகளின் மூலம் அவ்வப்போதைய அரசியல் சூழலைப் பகடி செய்வது, எதிர்ப்புகளைக் கட்டமைப்பது போன்ற ரஜினியின் வினைகள் தமிழக அரசியல் களத்தில் எந்த எதிர்வினைகளையும் உருவாக்காமல் கடந்து சென்றுவிடுபவை.

ரஜினியின் இதுவரையான செயல்பாடுகளில் எதுவும் மக்களோடு நேரடியான பிணைப்புகளைக் கொண்டவை அல்ல. வருடத்துக்கொரு முறை தன் ரசிகர்களுக்கு அவர் தரும் தரிசனங்களுக்கு அரசியல் மதிப்பு இருக்கும் எனக் கருதுவது பேதமை.

அதிமுகவை உருவாக்குவதற்கு முன்பும் பின்பும் எம்.ஜி.ஆர். அரசியலோடு உயிர்ப்புள்ள தொடர்புகளைக் கொண்டிருந்தார். நிஜ வாழ்வில் அவர் கொடைவள்ளல் எனக் கருதப்பட்டார். ஒரு பிரசாரகராகத் தமிழக மக்களின் ஆதரவைப் பெற்ற திராவிட இயக்க அரசியலை முன்னெடுத்தார். 1977 அரசியல் அதிகாரம் கைக்கு வந்த பிறகு அவர் ஏழை, எளிய மக்களின் நலன்களைக் குறைந்தபட்சமாகவாவது பாதுகாக்கும் பல நடவடிக்கைகளை எடுத்தார். அவரது அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டம் முக்கியமான உதாரணம். இலவச பஸ் பாஸ், இலவச வேட்டி சேலை, இலவச சீருடைகள், காலணிகள் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் அறிவுஜீவிகளின் கடும் விமர்சனங்குள்ளானபோதும் அவை, சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஒடுக்கப்பட்டிருந்த பின்தங்கியிருந்த மக்களுக்குப் பெரிதும் துணை நின்றவை.

ரஜினியின் ஆன்மிக அரசியல்

ரஜினி தன் திரைப்படங்களில் பஞ்ச் டயலாக்குளின் மூலம் முன்வைத்த அரசியல், அவரே குறிப்பிடுவதுபோல் ஒருவகையான ஆன்மிக அரசியல்தான் (நல்லவங்களை ஆண்டவன் அதிகமா சோதிப்பான். ஆனா, கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு நெறைய கொடுப்பான். ஆனா, கைவிட்டுருவான்). தனது திரைப்படங்கள் மூலம் பெண்களைப் பற்றி ரஜினி உருவாக்கியுள்ள சித்திரங்கள் பிற்போக்கானவை. அடிப்படைவாதக் கண்ணோட்டங்கள் கொண்டவை. நவீனச் சிந்தனை மரபுகளுக்கு எதிரானவை. பெண்ணியவாதிகளின், முற்போக்காளர்களின் கடும் எதிர்ப்புகளுக்குள்ளானவை. அதனால்தான் ரஜினி முன்வைக்கும் ஆன்மிக அரசியல் தமிழக அரசியல் களத்தில் கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. தான் முன்னிறுத்தும் ஆன்மிக அரசியல் தமிழக அரசியல் பார்வையாளர்களால் முற்றாக நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களைப் பரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

தான் முன்வைக்கும் ஆன்மிக அரசியல் என்னும் கருத்தாக்கத்தின் மூலம் ரஜினி அரசியல் குறித்த மக்களின் மனநிலையில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறாரா? தான் பங்கெடுக்க விரும்பும் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அதைச் சாதித்துவிட முடியும் என்னும் நம்பிக்கை அவருக்கு இருக்கிறதா? இந்தியாவைப் பொறுத்தவரை ஆன்மிக அரசியல் என்பது ஏற்கெனவே அடிப்படைவாதத்தோடு இணைக்கப்பட்டுவிட்ட ஒரு கருத்தியல். ரஜினியால் அதை மாற்ற முடியுமா?

ரஜினியின் முன் இருக்கும் சவால்கள்

அதற்கு அவர் பல சவால்களைச் சந்தித்தாக வேண்டும். வலுவான அமைப்பு பலத்தைக்கொண்டுள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட மைய நீரோட்ட அரசியல் கட்சிகளின் அறவியல் அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும். அரசியலை வெறும் நல்லெண்ணம் சார்ந்த செயல்பாடாக நம்பிக்கொண்டிருக்கும் அப்பாவித்தனத்திலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். மாற்றத்தை சமூக, அரசியல், பொருளாதாரம் சார்ந்த அறிதல்களிலிருந்து தொடங்க வேண்டும். கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்களும் வளர்த்தெடுத்திருக்கும் அரசியல் பார்வைக்கு உண்மையான மாற்று அரசியல் பார்வையைக் கண்டறிந்து முன்வைக்க வேண்டும்.

கடந்த இருபதாண்டுகளில் தமிழக அரசியல் களத்தில் வலுவாக வேரூன்றியிருக்கும் தலித்திய அரசியல், பெண்ணிய அரசியல், தமிழ் தேசிய அரசியல் சார்ந்த கருத்தியல்களையும் நடைமுறைகளையும் எதிர்கொண்டாக வேண்டும். அதற்கான தொலைநோக்குப் பார்வை தனக்கு இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டியது அவசியம்.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு எனத் தனது வில்லன்களின் செவிகளில் கிசுகிசுத்து அவர்களை நடுநடுங்கச் செய்வதைப் போன்ற எளிய செயல்பாடு அல்ல, அரசியல் எதிரிகளை எதிர்கொள்வது என்பதை நம் சூப்பர் ஸ்டார் புரிந்துகொள்வது மற்ற எல்லாவற்றையும்விட முக்கியமானது.

- தேவிபாரதி

வெள்ளகோவில் 17, ஜனவரி, 2018

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதிவரும் தேவிபாரதி, மார்க்சிய, மார்க்சிய லெனினிய இயக்கங்களில் சிறிது காலம் செயல்பட்டவர். 1994இல் இளம் நாடக ஆசிரியருக்கான மத்திய சங்கீத நாடக அகாடமியின் பரிசு பெற்றார். இவரது சிறுகதைகளில் சில ஆங்கிலத்திலும் இந்தி, மலையாளம் உள்ளிட்ட சில இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘வீடென்ப’ என்னும் தலைப்பிலான இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து சிறுகதைகள் என்.கல்யாணராமன் மொழிபெயர்ப்பில் HorperPerinial வெளியீடாக Farewell Mahatma என்னும் தலைப்பில் வெளிவந்தது. காலச்சுவடின் பொறுப்பாசிரியராக ஆறாண்டுகள் பணியாற்றினார். மின்னஞ்சல் முகவரி: [email protected])

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 18 ஜன 2018