மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: ஜிக்னேஷ் மேவானி ரிபப்ளிக் டிவியைப் புறக்கணிக்கலாமா?

சிறப்புக் கட்டுரை: ஜிக்னேஷ் மேவானி ரிபப்ளிக் டிவியைப் புறக்கணிக்கலாமா?

த.நீதிராஜன்

ஜிக்னேஷ் மேவானியின் கலந்துரையாடலை காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியில் ஒருங்கிணைத்தவர்களில் நானும் ஒருவன்.

கலந்துரையாடலில் ஊடக நண்பர்களும் கலந்துகொண்டனர். அது முடிந்ததும் ஊடக நண்பர்கள் தனியே அவரை அழைத்தனர். மேவானியும் தனியறைக்குச் சென்று அமர்ந்து பேட்டிக்குத் தயாரானார். அப்போது அங்கே ரிபப்ளிக் டிவியும் இருப்பதைப் பார்த்தார். ரிபப்ளிக் டிவியிடம் பேச முடியாது என்று சொல்லிவிட்டுத் தனியறையிலிருந்து வெளியேறி கலந்துரையாடல் நடந்த அறைக்குத் திரும்பிவிட்டார்.

அவரது இந்த அணுகுமுறைக்கு டைம்ஸ் நவ் நண்பர் எதிர்ப்பு தெரிவித்தார். “திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக தலைவர் ஜெயலலிதாகூட இவ்வாறு நடந்துகொண்டதில்லை. சட்டப்பேரவை உறுப்பினர் ஆக ஆனதற்கே இப்படியா” என்ற வகையில் அவரது எதிர்ப்பு இருந்தது.

கவிஞர் சல்மாவும் பிரேமா ரேவதியும் அவரை சமாதானம் செய்தனர். “மேவானி பேசப் பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட வேண்டியதுதானே” என்ற பாணியில் அவர்கள் பேசினர். ஒருவருக்கொருவர் மிகவும் அறிமுகமானவர்கள் என்பதால் உணர்ச்சிபூர்வமான, நெருக்கமான, அதே நேரத்தில் தீவிரமான வாத, எதிர்வாதமாக அது இருந்தது.

அதன்பிறகு மதிய உணவுக்கு இன்னோர் அறைக்கு அவரை அழைத்துச் சென்றோம். அகாடமியின் வாசலில் ரிபப்ளிக் டிவி மட்டும் நேரலை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

கீழே சென்று காரில் ஏறும்போது அவரை மறித்துக் கேள்வி எழுப்ப ரிபப்ளிக் டிவி முயன்றது. அதைத் தடுத்து அவரை காரில் அனுப்பி வைத்தேன்.

இதுபோல குறிப்பிட்ட டிவியைக் புறக்கணிப்பது சரியா என்று அந்த டிவியின் நிருபர் எங்களைக் கேட்டார். இதே விவாதம் இணையத்திலும் நடக்கிறது.

மேவானி செய்தது சரியா?

தொடர்ந்த செல்போன் அழைப்புகள். இடைவிடாத கூட்டங்கள், அதன் விளைவான கடும் தலைவலி என்ற நிலையில் மேவானி இருந்தார். தான் பேசுவதைவிட, தமிழகத்திலிருந்து கற்றுக்கொள்ள வந்திருப்பதாக கலந்துரையாடலின் ஆரம்பத்திலும் இடையிலும் அவர் அடிக்கடி சொன்னார். ஆனாலும் ஏராளமான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும் வகையிலே கலந்துரையாடல் இருந்தது. மீடியாக்கள் அதையும் பதிவு செய்தன. சில மீடியாக்கள் கேள்விகளும் எழுப்பின.

தி இந்து உள்ளிட்ட செய்தியாளர்களுக்குத் தனிப்பட்ட பேட்டிகளும் அவர் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

ஆங்கிலத்தில் வெளியான சில ஆன்லைன் செய்திகள் மீடியாக்கள் அவரைப் புறக்கணித்தன என்றன. அது உண்மையல்ல.

தலைவர்களின் மீடியா அணுகுமுறைகள் வேறுபட்டவை. மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் அணுகுமுறை அதில் ஒன்று. அவர் பொதுக்கூட்டங்களில் மீடியாக்கள் தங்களின் பணியை ஓரளவு முடித்த பிறகு சொல்வார். “மீடியா நண்பர்கள் எங்களைப் பற்றி நல்ல விதமான செய்திகளை அனுப்பினாலும் உங்களின் உரிமையாளர்கள் அதைப் போட மாட்டார்கள். எனவே, உங்களின் பணி முடிந்ததும் தயவுசெய்து விலகி நில்லுங்கள். நான் மக்களிடம் நேரடியாகப் பேசிக்கொள்கிறேன்” என்று வேண்டுவார்.

திமுக தலைவர் கருணாநிதியின் அணுகுமுறையும் தனித்துவமானது. தனது குடும்பத்தினர் பற்றிய கடுமையான கேள்விகளை எதிர்கொள்ளும்போது அவர் நிதானம் தவறுவார்தான். ஆனால், அவர் பொதுவாக, எதிரி மீடியாவையைக்கூடப் பக்குவமாக கையாண்டுவிடுவார்.

நிருபர் கேள்வி கேட்டது போலவும் அதற்கு அவர் பதில் அளித்தது போலவும் கேள்வி - பதில் பாணியிலான அறிக்கையை அவர் பத்திரிகைகளுக்கு அனுப்புவார்.

கேரளத்தின் தேசாபிமானி இதழுக்காக நானும் அதன் நிருபரும் ஒரு முறை அணுகியபோது முன்கூட்டியே கேள்விகளைக் கொடுத்துவிட வேண்டும் என்று நிபந்தனை போடப்பட்டது. அதன்படியே நேர்காணல் எடுக்க முடிந்தது.

ஜோதிபாசு, கருணாநிதி போல மேவானியும் மீடியாக்களுடனான தனது அணுகுமுறையை மேம்படுத்த வேண்டியுள்ளது.

ஊடகங்களின் நிலை என்ன?

இன்னொரு பக்கத்தில் மீடியாக்களில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மெயின் ஸ்ட்ரீம் மீடியா என்று அழைக்க மாட்டோம்; வணிக மீடியா என்றுதான் அழைப்போம் என்று மீடியாக்கள் மீதான விமர்சனம் புதிய சொற்களைப் பிரசவித்து வருகிறது.

ஊடக தர்மத்தைக் கடைப்பிடிக்காத மீடியாக்களை என்ன செய்வது? மிகவும் வெளிப்படையாக அதிகார மையங்களை ஆதரிப்போரை என்ன செய்வது? மக்களில் மத்தியில் சேவைப் பணியாற்றுவோரை வேட்டையாடும் சில மீடியாக்களை எதிர்க்கிற உரிமை செயல்பாட்டாளர்களுக்கு இல்லையா?

மீடியாக்கள் ஊதிப் பெருக்க வைத்த ஆளுமைகள் எப்போதும் மீடியாக்களின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கிக் கிடக்கலாம். மக்களிடமிருந்து எழுகிற மேவானி போன்ற தலைவர்கள் தங்களின் விருப்பு வெறுப்பை மீடியாக்களிடம் காண்பிப்பதேகூட ஓர் அறச் சீற்றம்தான்.

கொங்கணவா முனிவர் காக்காவை முறைத்தார். அது எரிந்து சாம்பலானது. ஓர் இல்லத்தரசியை முறைத்தார். அவர் “கொக்கு என்று நினைத்தாயா கொங்கணவா” என்று திருப்பி முறைத்தார்.

அதுபோல சில வகை மீடியாக்களைச் சிலர் திருப்பி முறைக்கத்தான் செய்வார்கள். அதுவும் ஜனநாயகத்தின் உயிரோட்டம்தான். எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: த.நீதிராஜன், இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர். தீக்கதிர், தி இந்து தமிழ் ஆகிய இதழ்களில் பணிபுரிந்தவர். சமூக மாற்றத்துக்கான களப்பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். காயிதே மில்லத் சர்வதேச ஊடகவியல் கல்வி நிறுவனத்தின் தமிழ்த் துறை தலைவராகப் பணிபுரிகிறார். அணையா வெண்மணி என்னும் சமூக நீதிக்கான காலாண்டிதழின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றுள்ளார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 18 ஜன 2018