மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

நயினார் நாகேந்திரன் மிரட்டல் அறிவிப்பு!

நயினார் நாகேந்திரன் மிரட்டல் அறிவிப்பு!

‘ஆண்டாள் குறித்து தவறாகக் கருத்து தெரிவித்த வைரமுத்துவின் நாக்கை வெட்டுபவர்களுக்கு ரூ.10 கோடி வழங்க தயார்’ என்று தமிழக பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். வடஇந்தியாவில் மட்டுமே இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாகி வந்த நிலையில், தென் தமிழகத்தில் இருந்து வெளியான இந்த அறிவிப்பு, பரபரப்புக்கு வித்திட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், ஒரு தமிழ் நாளிதழின் சார்பில் ஜனவரி 7ஆம் தேதியன்று ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில் பங்கேற்றுப் பேசினார் கவிஞர் வைரமுத்து. ஆண்டாள் பற்றி பேசியவர், சில வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளை மேற்கோள்காட்டினார். இது சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு எதிராக, இந்து சமய அமைப்புகள் கருத்து தெரிவித்தன. இந்த அமைப்புகளைச் சேர்ந்த சிலர், இப்போது வரை போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள், கடந்த ஒரு வாரகாலமாக வைரமுத்துவுக்கு எதிரான தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று (ஜனவரி 17) திருநெல்வேலி ஜவகர் மைதானத்தில் ஆண்டாள் பக்த சபா சார்பில் வைரமுத்துவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது பலத்த அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

வருங்காலத்தில் இந்துகளைப் பழித்துப் பேசுபவர்களைக் கொலை செய்யவும் தயாராக வேண்டும் என்றும், கவிஞர் வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி தரவும் தொண்டர்கள் தயாராக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஆர்.கே.நகர் தோல்வியை மறக்கடிக்கவே, வைரமுத்து போன்றவர்களை திமுக தூண்டிவிடுகிறது. வைரமுத்து பற்றி பேசியதற்காக காவல் துறை என் மீது வழக்கு பதியும். இதேபோல, வைரமுத்து மீது காவல் துறை இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று கூறியுள்ளார் நயினார் நாகேந்திரன்.

ஏற்கெனவே வைரமுத்து பற்றி ஹெச்.ராஜா பேசியது குறித்தான சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், வைரமுத்துவின் நாக்குக்கு விலை வைத்து பேசி புதிய வம்பை வளர்த்துள்ளார் நயினார் நாகேந்திரன்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 18 ஜன 2018