கிச்சன் கீர்த்தனா: தக்காளித் தொக்கா?


கிண்டலுக்காகவும் வீம்புக்காகவும் சொல்லக்கூடிய வார்த்தைகளில் ஒன்று, ‘அப்ப நாங்கள்லாம் என்ன தக்காளித் தொக்கா?’
எந்தவிதத்தில் நாங்கள் குறைந்துவிட்டோம் எனக் கேட்டு அதற்கு நிகராக ஒரு செயலைச் செய்வதற்கு இப்படி பயன்படுத்துவார்கள்.
ஆனால், ஏன் தக்காளித் தொக்கை சொல்ல வேண்டும்?
‘அப்ப நாங்கள்லாம் என்ன பூண்டு துவையலா? அப்ப நாங்கள்லாம் என்ன மஷ்ரூம் மசாலாவா?’ என்று ஏன் கேட்கவில்லை? ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. இந்தியா வல்லரசாவதற்குள் அதை கண்டுபிடித்தே தீர வேண்டும்.
சரி வாருங்கள். என்னதான் அந்த தக்காளித் தொக்கில் உள்ளதென்பதை ஒருகை பார்த்துவிடலாம்.
தேவையானவை:
நாட்டுத் தக்காளி - 5
காரப்பொடி (மிளகாய்த்தூள்) - 1 தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. தக்காளியை அலம்பி நறுக்கிக்கொண்டு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகைத் தாளித்துக் கொள்ளவும்.
3. அரைத்த விழுதைத் தாளித்ததுடன் சேர்த்து பெருங்காயம், மிளகாய்த்தூள் சேர்த்துக் குறைந்த தீயில் வைக்கவும்.
4. ஒரு வாணலியில் வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து கொண்டு, அதில் ஒரு பாதியைக் கொதிக்கும் விழுதுடன் சேர்க்கவும்.
5. தக்காளித் தொக்கு தொக்கிவரும் வேளையில் மீதி வெந்தயத்தூளைப் போடவும்.
6. சுருள வரும் வேளையில் தனியே நல்லெண்ணெயைக் காய்ச்சித் தொக்குடன் இணைக்கவும்.
7. ஆறிய பின் கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
கீர்த்தனா சிந்தனைகள்:
பெரியார் விருதுக்கு நன்றி தெரிவித்து எடப்பாடிக்கு பா.வளர்மதி கடிதம்.
பெரியார் எடப்பாடிக்கு வருத்தம் தெரிவித்துக் கடிதம்.