ஜெ. இறந்தது டிசம்பர் 4ல்!

ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில் 4ம் தேதியே அவர் இறந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மன்னார்குடியில் தினகரன் அணி சார்பாக இன்று (ஜனவரி 17) நடைபெற்ற எம்ஜிஆர் 101வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் திவாகரன் கலந்துகொண்டு பேசுகையில், “ ஜெயலலிதா 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். இந்த தகவலை ஏன் வெளியிடவில்லை என அப்பல்லோ நிர்வாகத்திடம் கேட்டபோது, தமிழகத்தில் எங்களுக்கு ஏராளமான கிளைகள் உள்ளன. அவற்றின் பாதுகாப்பை முதலில் உறுதி செய்யுங்கள். அதன் பின்னர் தகவலை வெளியிடலாம் என பிரதாப் ரெட்டி தெரிவித்தார். மத்திய அரசின் ’கழுகு’ ஒன்றும் மருத்துவமனையில் இருந்தது. முதல்வர் பதவியை வாங்கி செல்லலாம் என்று அந்த கழுகு திட்டமிட்டிருந்தது.
தற்போது அந்த கழுகு உயர்ந்த பதவிக்கு போய்விட்டதால் அவரது பெயரை செல்ல கூடாது. ஜெயலலிதா எப்படிதான் இவர்களை நம்பினார் என்று தெரியவில்லை.
தம்பிதுரை எப்போதுமே ‘டில்லி’க்காக வேலை பார்ப்பாரே தவிர தமிழகத்தில் உள்ள அதிமுகவுக்காக வேலை செய்ய மாட்டார். அவருக்கும் முதல்வர் ஆக வேண்டும் என்று ஆசை. இன்றைக்கு முதல்வராக இருப்பவருக்கும் அன்றைக்கே முதல்வராக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. ஜெயலலிதாவின் உதவியாளர்களை வைத்து அவரும் முயற்சி செய்துகொண்டிருந்தார். பன்னீர் செல்வம் ஏற்கனவே இரண்டு முறை முதல்வராக இருந்தவர் என்பதால் அவரையே முதல்வாராக்கினோம்
ஒரு வாரம் வரை அவர் நல்லாதான் இருந்தார். டில்லிக்கு சென்ற பின்னர் மிரட்டல்களுக்கு பயந்து அவர் மாறிவிட்டார். காலில் விழுந்து கும்புடுவதற்கு பன்னீரிடம்தான் பிஎச்டி வாங்க வேண்டும். டில்லியில் இருந்த வந்த பிறகு அமைச்சர்கள் உட்பட எம் எல் ஏக்களின் பட்டியல்களை டில்லிக்கு அவர் தெரிவித்துக்கொண்டே இருந்தார். சசிகலா முதல்வராக வேண்டும் என்று முதலில் கூறியவர் பின்னர் தியானம் இருக்க சென்றுவிட்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினோம். பதவியேற்றதும் என்னிடம் வந்து நான் இன்னொரு ஓபிஎஸாக இருக்க மாட்டேன் என்று தெரிவித்தார். இப்போதுதான் தெரிகிறது அவர் ஓபிஎஸுக்கு மேலாக இருக்கிறார் என்று.
இதற்கெல்லாம் சேர்த்து ஆர்கேநகரில் மக்கள் முற்று புள்ளியை வைத்து விட்டார்கள்” என்று பேசியுள்ளார்.
ஜெயலலிதா எப்போது மரணம் அடைந்தார் என்பது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ள நிலையில், 2016ம் தேதி டிசம்பர் 4ம் தேதியே அவர் இறந்துவிட்டார் என திவாகரன் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் சார்பில் திவாரனின் கருத்து தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.