வேளாண் ஏற்றுமதி 18% உயர்வு!


நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி 18 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வர்த்தக அமைச்சகத்தின் இணைச் செயலாளரான சந்தோஷ் சாரங்கி பேசுகையில், “பிரதமரின் கொள்கைப் படி விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக வேண்டுமானால் வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி மதிப்பு 2020ஆம் ஆண்டுக்குள் 60 பில்லியன் டாலரை எட்ட வேண்டும். மதிப்பு கூட்டல் மற்றும் அறுவடைக்கு முன்பும் பின்புமான கழிவுகளைக் குறைத்தல் மூலமாக வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். ஏப்ரல் - அக்டோபர் மாதங்களில் 18 சதவிகித உயர்வுடன் ரூ.1,34,107.05 கோடி மதிப்பிலான வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. விவசாய ஏற்றுமதிக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் புதிய சந்தை வாய்ப்புகளை அடைதல் உள்ளிட்ட அம்சங்கள் வாயிலாக ஏற்றுமதியை இன்னும் மேம்படுத்த முடியும்” என்றார்.