எம்.ஜி.ஆர் படதொடக்க விழா: ரஜினி, கமல் பங்கேற்பு!


எம்.ஜி.ஆரின் 101ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அனிமேஷன் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக கொண்டு உருவாகும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தின் பூஜை இன்று (ஜனவரி 17) நடைபெற்றது. இதில் ரஜினி, கமல் இருவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
1973ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கிய படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்தின் இறுதியில் ‘எங்களது அடுத்த படைப்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து, அதில் நடிக்க திட்டமிட்டிருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் அது நிறைவேறாமல் போக தற்போது அதே பெயரில் ஐசரி கணேஷ் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார்.
இந்த படத்தின் பூஜை இன்று சென்னை- சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். ரஜினி, கமல் அடுத்தடுத்து அரசியல் நுழைவை பற்றி பேசிவரும் நிலையில் இருவரும் ஒரே மேடையில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். ரஜினி கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தார். மேலும் எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகர், நடிகைகள், பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் உட்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.