மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

பிப்.21இல் கட்சிப் பெயர்: மக்களைச் சந்திக்கும் கமல்

பிப்.21இல் கட்சிப் பெயர்: மக்களைச் சந்திக்கும் கமல்

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21ஆம் தேதி ராமநாதபுரத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசுக்கு எதிராக ட்விட்டரில் அவ்வப்போது விமர்சனத்தை முன்வைத்து வந்த நிலையில், தான் அரசியலில் ஈடுபடப்போவதாக சில மாதங்களுக்கு முன் அவர் அறிவித்திருந்தார். பின்னர் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் பட வேலைகளில் அவர் ‘பிஸி’ ஆனார்.

இதற்கிடைய, கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதாகவும் தனிக் கட்சி தொடங்கப்போவதாகவும் அறிவித்தார். கட்சி தொடர்பான வேலைகளிலும் அவர் ஈடுபட்டுவருகிறார். அவருக்கு முன்பாகவே அரசியல் அறிவிப்பை வெளியிட்ட கமல், தொடர்ந்து மவுனம் காப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்குப் பதிலளிக்கும் விதமாக முக்கிய அறிக்கையை கமல் நேற்று (ஜனவரி 16) நள்ளிரவு வெளியிட்டுள்ளார்.

அதில், ”என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. அக்கடமைகளின் துவக்கமாக எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்திலிருந்து வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி துவக்க இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப கட்டச் சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இது நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருந்த பயணம் என்று தெரிவித்துள்ள கமல், “மக்களுடனான இந்தச் சந்திப்பு, புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல். எனக்கான கல்வி. இதை மக்களோடு மக்களாக நின்று, தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக இருக்கும் ராமநாதபுரம் மண்ணில் பிப்ரவரி 21ஆம் தேதி என் கட்சியின் பெயரை அறிவித்து என் அரசியல் பயணத்தைத் துவக்க இருக்கிறேன்” என்றும் அறிவித்துள்ளார்.

“இது என் நாடு, இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு மாத்திரம் இருந்தால் போதாது. இங்கு தலைவன் என்பவன் வழிநடத்த மாத்திரமன்று, பின்பற்றவே தலைவன் இருக்க வேண்டும். பின் தொடர்வதற்கே ஒரு தலைமைப் பொறுப்பு இருக்க வேண்டும்” என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், அனைவரும் சேர்ந்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். அந்த நாயகர்களைச் சந்திக்கத்தான் சென்றுகொண்டிருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“இது ஆட்சியைப் பிடிப்பதற்கான திட்டமா? என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா? யாரின் ஆட்சி, யாரின் அரசு, குடியின் அரசு. அப்படியென்றால் முதலில் அவர்களை உயர்த்த வேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்த வேண்டும். அதை நோக்கிய பயணம்தான் இது” என்று தனது சுற்றுப்பயணம் குறித்து விளக்கமளித்துள்ள அவர், அனைவரின் ஆதரவோடு இந்தப் பயணத்தைத் தொடங்குகிறேன். கரம் கோர்த்திடுங்கள். களத்தில் சந்திப்போம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 17 ஜன 2018