மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

மகாராஷ்டிரா அரசு விவரங்கள் அளிக்க உத்தரவு!

மகாராஷ்டிரா அரசு விவரங்கள் அளிக்க உத்தரவு!

நீதிபதி லோயா மரணம் தொடர்பான தகவல்களை மகாராஷ்டிரா மாநில அரசு மனுதாரர்களுக்கு அளிக்க வேண்டுமென நேற்று (ஜனவரி 16) உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதோடு, அடுத்த வாரத்துக்கு இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளது.

சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கை, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.ஹெச்.லோயா விசாரித்து வந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதியன்று நாக்பூரில் நடந்த ஒரு திருமண விழாவின்போது அவர் மரணமடைந்தார். மாரடைப்பினால் லோயா இறந்ததாகத் தடயவியல் ஆய்வுகள் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டனர் நாக்பூர் காவல்துறை அதிகாரிகள். ஆனால், அவரது உறவினர்கள் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தெரிவித்தனர்.

லோயா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென அனிதா ஷெனாய், ஷெஹ்ஷாத் பூனாவாலா, பி.ஆர்.லோனே ஆகியோர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த, நீதிபதி அருண் மிஸ்ரா, சந்தானகவுடர் கொண்ட இரு நபர் அமர்வு நியமிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை குறித்து, கடந்த ஜனவரி 12ஆம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதிருப்தி தெரிவித்திருந்தனர் செலமேஸ்வர் உள்ளிட்ட நான்கு நீதிபதிகள். இரண்டு நாள்களுக்கு முன்பு, தந்தையின் மரணத்தில் தங்கள் குடும்பத்தினருக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை எனத் தெரிவித்திருந்தார் நீதிபதி லோயாவின் மகன் அனுஜ். இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.

லோயா மரணம் தொடர்பான தங்களிடமிருந்த தகவல்களை எல்லாம் அறிக்கையாகத் தாக்கல் செய்தது மகாராஷ்டிரா மாநில அரசு. இந்தத் தகவல்களைத் தங்களுக்கும் தர வேண்டுமென, மனுதாரர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. ஆனால், இதற்கு மகாராஷ்டிரா மாநிலம் சார்பான ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஒப்புக்கொள்ளவில்லை. மாநில அரசின் தகவல்களை மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் பார்வையிடலாம் என்றும், அதை ரகசியமாகக் கருதி யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது என்றும் கூறினார். ஆனால், மனுதாரர்கள் தரப்பு இதை ஏற்கவில்லை.

லோயா மரணம் குறித்த தகவல்கள், இந்த வழக்கில் வாதாடுவதற்கு தேவைப்படும் என அவர்களது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதையடுத்து, மனுதாரர்களுக்குத் தேவையான தகவல்களை ஒரு வாரத்துக்குள் மகாராஷ்டிரா மாநில அரசு வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் ஒரு வாரம் கழித்து இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நீதிபதி லோயா மரணத்தை விசாரிக்கத் தேவையில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார் நாக்பூர் காவல் துறை இணை ஆணையர் சிவாஜி போட்கே. “லோயா மரணம் குறித்து நாக்பூர் காவல் துறை முழு விசாரணை நடத்திவிட்டது. திருமணத்துக்காக வந்த இடத்தில், நீதிபதி லோயா மாரடைப்பால் மரணமடைந்தார். இதை தடயவியல் துறை ஆய்வுகளும் உறுதிப்படுத்தியிருக்கின்றன” என்று கூறியுள்ளார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதன் 17 ஜன 2018