மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

விரைவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவுவிழா!

விரைவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவுவிழா!

பிரதமர் நரேந்திர மோடி நேரம் ஒதுக்கியவுடன், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவுவிழாவுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாகத் தெரிவித்தனர். அப்போது, ஹஜ் மானியத்தை ரத்து செய்யும் அறிவிப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தப்படும் என்று அறிவித்தனர்.

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளை, இன்று (ஜனவரி 17) அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி, சென்னை கிண்டியிலுள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைகழகத்தில் அமைந்திருக்கும் எம்ஜிஆர் சிலைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். இதில், அந்த கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதன்பின்னர், சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின்பு, இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது, விரைவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

”எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாட, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் பங்குபெறும் தேதி முடிவானவுடன், விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கும்” என்றனர். ஹஜ் பயணத்திற்கான மானியம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுகவின் நிலை என்னவென்ற கேள்விக்கு, ”ஹஜ் பயணத்துக்கு அளித்து வந்த மானியத்தை ரத்து செய்யும் அறிவிப்பை, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று அதிமுக கட்சி சார்பில் வலியுறுத்தவுள்ளோம்” என்று தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

அதன்பிறகு, தமிழகத்திலுள்ள பல்வேறு பிரச்சனைகள் மற்றும் நடப்புகள் குறித்து இருவரும் தங்களது கருத்துகளைக் கூறினர்.

”தினகரன் புதுக்கட்சி ஆரம்பித்தால், அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது .10 ஆண்டுகள் அவர் கட்சியில் இல்லாமல் இருந்தபோது, எந்த பாதிப்பும் வரவில்லையே? ஊடகங்களும் பத்திரிகைகளும் தான் அவரைப் பெரிதுபடுத்துகின்றன. மக்கள் யாரும் அவரை பெரிதாக கருதவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் மேலாண்மைக்குழு அமைக்க வேண்டும் என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கவிருக்கிறது. பருவமழை சரியாகப் பெய்யாததால், விவசாயிகளுக்கு நீர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம். அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல கர்நாடக முதலமைச்சருக்கும் கடிதம் எழுதினோம். அதற்கும் உரிய பதில் கிடைக்கவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு இருப்பதால், புதிய மனுவை ஏற்கவியலாது என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில், மனிதாபிமான அடிப்படையில் கர்நாடக அரசுக்கு கடிதம் அனுப்பினோம். அதற்கு என்ன பதில் கிடைத்தது என்று எல்லோருக்கும் தெரியும்.

தமிழக அரசை பொறுத்தவரை, இருக்கின்ற நீரை முழுமையாகப் பயன்படுத்தி விளைச்சலை பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில், நீர் திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.

பட்டாசுத் தொழிலாளர் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருதுநகரில் பெருவாரியாகச் செயல்படும் பட்டாசுத் தொழிலைக் காப்பாற்ற வேண்டுமென்று, தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நடக்கவுள்ள அந்த வழக்கில், தமிழக அரசின் சார்பில் வாதாட வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அந்த தொழிலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்” என்று ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் தெரிவித்தனர்.

மேலும், இலங்கை அரசு கைதுசெய்த தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டுமென விரைவில் மத்திய அரசுக்கு கடிதம் எழுத இருப்பதாகவும், தமிழகத்திலிருந்து வெளி மாநிலம் சென்று உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாநில அரசின் சார்பில் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அதிமுக தலைமைக்கழகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம் பற்றிய கேள்விக்கு,

”எம்ஜிஆரின் 101வது பிறந்தநாள்விழா தலைமைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் கட்சியினருடன் கலந்துரையாடல் நடந்தது. முக்கிய விஷயங்கள் எதுவும் பேசவில்லை” என்று தெரிவித்தனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 17 ஜன 2018