மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: பைரஸி உலகம் இயங்குவது யாரால்?

சிறப்புக் கட்டுரை: பைரஸி உலகம் இயங்குவது யாரால்?

கேபிள் சங்கர்

தமிழ் சினிமாவின் பைரஸி உலகம் பற்றிய பல விஷயங்களைப் பார்த்துவந்தோம். இடையில் அன்புச்செழியன் விவகாரத்தால் கந்து வட்டி பற்றிய விவாதத்துக்குள் தவிர்க்க முடியாமல் நுழைந்து விட்டோம். தமிழ் சினிமாவின் பெரிய பகைவனான பைரஸி எங்கிருந்து தொடங்குகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

சந்தேகமே வேண்டாம். தமிழ் சினிமாவின் பைரஸி உலகம் இலங்கை தமிழர்களால்தான் நடத்தப்படுகிறது. அதன்கீழ் இருக்கும் நாமெல்லாம் அவர்களது அடிப்பொடிகள் மட்டுமே. எந்த தமிழ் சினிமாவின் மார்க்கெட் உலகளாவிய வகையில் வளர உதவினார்களோ, அவர்களேதான் உலகளாவிய பைரஸிக்கும் காரணம். இந்த உண்மையைச் சொன்னதால் இயக்குநர் சேரனைக் கழுவி ஊற்றினார்கள் நம் தமிழ்ப் பற்றாளர்கள். இவர்கள் எல்லாரும் எங்கே இருந்துதான் வருவார்கள் என்று தெரியவில்லை. இலங்கை தமிழர்கள் என்றாலே கிளம்பி விடுகிறார்கள். இப்போது உலகமெங்கும் இருக்கும் இலங்கை தமிழர்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையினர். அவர்களைப் பொறுத்தவரை தமிழ்த் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் உள்ள வரவேற்பு காரணமாக நல்ல வியாபாரம் இருக்கிறது என்பது மட்டுமே தெரியும். அதற்கு இணையம் மிகப் பெரிய காரணம்.

எப்படி நடக்கிறது இது?

பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள சிறு திரையரங்குகளில் தமிழ்த் திரைப்படங்களை வாடகைக்கு வாங்கித் திரையிடுகிறவர்கள் இந்த இரண்டாம் / மூன்றாம் தலைமுறை இலங்கை தமிழர்களே. வாடகைக்கு வாங்கி, அவர்களே பைரஸியும் எடுத்து அவர்களது வெப் சைட்டில் போட்டால் அதனால் வரும் வருமானம் பல கோடி. உலகமெங்கும் சர்வர்களை வைத்து நடத்தும் அளவுக்குப் பிரபலமான சைட்டுகளை, அதிலும் குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களுக்கான சைட்டுகளை நடத்துவது இவர்கள்தான்.

சில வருடங்களுக்கு முன்னால் நண்பன் ஒருவரை திடீரென கேரள போலீஸ் கைது செய்ய வந்தது. அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது என்னவென்றால் அவரது அக்கவுன்ட்டுக்கு ஒரு குறிப்பிட்ட பைரஸி இணையதளத்திலிருந்து பணம் பெறப்பட்டிருக்கிறது என்பதாகும். எனவே, அந்த பைரஸி சைட்டுக்கும் இவருக்கும் சம்பந்தம் இருப்பதாகக் குற்றம்சாட்டினர். நிஜத்தில் இவரது அக்கவுன்ட்டுக்கு சுமார் 120 ரூபாய் மட்டுமே அந்த இணையதளத்திலிருந்து வந்திருந்தது. நண்பரோ பேச்சிலர். ஏதோ பேங்கிலிருந்து பணம் போட்டிருக்கிறார்கள் என்று நினைத்து அன்றைய தினப்படி செலவுகளுக்காக எடுத்து செலவும் செய்திருக்கிறார். பின்புதான் தெரிந்தது. கேரளாவில் பைரஸிக்கெனத் தனி உயரதிகாரியின் கீழ் பெரிய டீம் அமைத்திருப்பதும், டெக்னிக்கலாய் அவர்கள் ஸ்ட்ராங்கான டீம் அமைத்து, இப்படி ஆன்லைனில் பார்ப்பவர்களில் ஆரம்பித்து, அப்லோட் செய்கிறவர்கள் வரை கண்காணிக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த வெப் சைட்டில் அப்லோட் செய்யப்பட்டது ஒரு மொக்கை மலையாளப் படம்.

தெலுங்குப் படங்களோ, மலையாளப் படங்களோ, படம் வெளியான அன்றைக்கே பைரஸி வந்ததில்லை. இத்தனைக்கும் தெலுங்குப் படங்கள் ஐரோப்பிய மார்க்கெட்டுகளிலும், அமெரிக்க, கனடிய மார்க்கெட்டுகளிலும் பெரும் அளவில் வரவேற்பு பெற்றுக்கொண்டிருக்கிறது. மலையாளப் படங்களுக்கு ஏற்கெனவே இருக்கிற வளைகுடா மார்க்கெட் போதும். ஆனாலும் இவர்களது படங்கள் இணையத்தில் குறைந்தது மூன்று மாதங்களுக்காகவாவது வெளிவருவதில்லை. மக்களிடமும் பெரிய ஆதரவில்லாதது ஒரு முக்கிய விஷயம். ஏனென்றால் தமிழ்நாட்டைப் போல தியேட்டர்களின் நிலை மோசமாகவில்லை. அநியாய டிக்கெட் விலையும், அதிகப்படியான திரைப்படங்களின் வெளியீடும் தமிழ் சினிமாவின் பைரஸி வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது.

இது லாபகரமானதுதானா?

சரி, இத்தனை ரிஸ்க் எடுத்து நடத்தும் தொழிலில் அவ்வளவு பணம் கிடைக்குமா என்று கேட்டீர்களானால் நிச்சயம் உண்டு. இவர்களது சைட்டுகளின் ட்ராபிக் காரணமாக அதில் வரும் விளம்பரங்கள். வழக்கமான கூகுள் விளம்பரங்கள் இதில் வராது என்றாலும், இம்மாதிரியான வெப் சைட்டுகளில் விளம்பரம் செய்யவென்றே நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன. குறிப்பாக போர்ன் மற்றும் போரக்ஸ் பற்றிய விளம்பரங்கள் அதிகமாக இருக்கும். கூகுள் தருவதை விட அதிகப் பணம் இவர்களது விளம்பரதாரர்களிடமிருந்து கொடுக்கப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் டொனேஷன் செய்யுங்கள் என்று ஒரு பட்டன் இருக்கும். பேபால் மூலமாகப் பணம் பெறக்கூடிய வசதி என உலகம் முழுவதும் படங்களைப் பார்க்கும் பல பேர் ஏதோ இவ்வளவு கஷ்டப்பட்டு வீட்டிலிருந்தபடியே படம் பார்க்க வைக்க இப்படி உழைக்கிறானே என்று பரிதாபப்பட்டு, பத்து டாலரோ, ஐந்து ஈரோவோ டிரான்ஸ்பர் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இவர்களது சைட்டுகள் மட்டுமில்லாமல் மற்ற சைட்டுகளின் மூலம் வரும் வருமானம், அவர்களது விளம்பரங்கள் என வருமானம் பல வகைகளில்.

இது மட்டுமில்லாமல் போட்டித் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என லோக்கல் பாலிடிக்ஸ் போல ஐரோப்பிய லோக்கல் பாலிடிக்ஸ் மூலம் அவன் படம் வாங்கினா, நீ உடனே ரிலீஸ் பண்ணு என்று பணம் கொடுத்துக் கோத்துவிடும் தொழில் போட்டி எனப் பல வகைகளில் இவர்களது நெட்வொர்க் ஸ்ட்ராங்க். இத்தனை நிறுவனங்களையும் நடத்துவது பெரும்பாலும் இலங்கை தமிழர்கள்தான்.

பல கோடி ரூபாய் செலவு செய்து தயாரிக்கப்படும் படத்தை ஒரு சில கோடி கொடுத்து வாங்கி, உலகெங்கும் சர்வர்களுக்காக மட்டுமே ஒரு சில கோடிகளைச் செலவு செய்து, சம்பாதிக்கும் அளவுக்கான தொழிலாக இந்த பைரஸி தொழில் வளர்ந்திருக்கிறது என்றால் அதன் வருமானத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த பைரஸி வெளியான பின் டிவிடி போட்டு விற்பதால் வரும் வருமானமெல்லாம் இவர்களது வியாபாரத்தில் ஒரு சதவிகிதம்கூட இருக்காது. ஆனால், அதைத் தடுக்கவில்லை என்றால் நிச்சயம் பைரஸி வளர்ந்துகொண்டேயிருக்கும். இதைத் தடுக்க அரசு மனது வைக்காமல் எதுவும் முடியாது.

ஏன், அமெரிக்க ஹாலிவுட் படங்கள்கூட இணையத்தில் திருட்டுத்தனமாகப் பதிவேற்றப்படுகின்றன. நம்மூர் தமிழ் ராக்கர்ஸ் போல பல சைட்டுகள் வாரம் ஒரு டொமைன் என மாறிக்கொண்டே இதையெல்லாம் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இவர்களது திறமையெல்லாம் ஆசிய மார்க்கெட்டுகளில்தான். இவர்கள் தளத்தை நடத்துவதே அமெரிக்க மார்க்கெட்டுக்காக அல்ல. ஏனென்றால் அங்கே இம்மாதிரியான சைட்டுகளை நீங்கள் தொடர்ந்து பார்க்கிறவராக இருந்தால் உங்களுக்கு காப்பிரைட்படி நோட்டீஸ் வந்து முப்பாட்டன் சொத்தையும் சேர்த்து எழுத வேண்டுமளவுக்குச் சட்டம் வலுவானது. நம்மூரில் அப்படியில்லை. காப்பிரைட் என்பதற்கான அர்த்தம் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவே தெரியாது. அதைச் சரியான முறையில் அமல்படுத்தி, அதற்குரிய சட்டதிட்டங்களைக் கடுமையாக வகுத்து, பார்க்கிறவர்களையும் தடை செய்தால்தான் பைரஸி முழுவதும் ஒழியும். ஆனால், அதற்கு முதலில் முன் நிற்க வேண்டியது அரசு. அரசினால் மட்டுமே இது சாத்தியப்படும்.

சட்டபூர்வமாகப் பணம் கட்டிப்பார்க்கும் ஸ்ட்ரீமிங் சைட்டுகளில் பார்க்கிறவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகியிருக்கிறார்கள். அது ஒருவிதத்தில் நல்லது என்றாலும், நல்ல சப்டைட்டில் ஹெச்.டி. பிரின்ட்டை இந்த சைட்டுகளிலிருந்து டவுன்லோட் செய்து பைரஸி சைட்டுகளில் அப்லோட் செய்யும் வேலையும் ஆரம்பித்திருக்கிறது. இது தொடர்ந்தால் அந்த ஸ்ட்ரீமிங் வியாபாரமும் படுத்துப்போகும்.

எனவே மக்களே, உங்களுக்கான சந்தோஷத்துக்காகத்தான் எல்லாமே. ஆனால், அது மற்றவர்களின் சோகத்தில் கொண்டாடப்படுவது அல்ல. ஒவ்வொரு முறை நீங்கள் பைரஸியை சப்போர்ட் செய்யும்போதும், நீங்கள் தீவிரவாதச் செயலுக்கோ, அல்லது உலகின் மோசமான விஷயங்களுக்குப் பயன்படும் விதமாகத் துரோகச் செயலில் ஈடுபடுகிறவர்களுக்கோ நீங்கள் மறைமுகமாக ஆதரவு கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கேபிள் சங்கர் எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். ‘சினிமா வியாபாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ‘தொட்டால் தொடரும்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 17 ஜன 2018