மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

விருது சர்ச்சை: விளக்கிய வளர்மதி

விருது சர்ச்சை: விளக்கிய வளர்மதி

‘கடவுள் மறுப்பு மட்டும்தான் பெரியாரின் கொள்கையா? பெண் உரிமையும் பெரியாரின் கொள்கைதான்’ என்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறியுள்ளார்.

தமிழக அரசு சார்பாக 2017ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு பிறகு, ‘தினமும் கோயிலுக்குப் போகும் வளர்மதிக்கு பெரியார் விருதா?’ என்று பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வளர்மதியைக் கிண்டல் செய்து பதிவுகள் வெளியாகின.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 16) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் முதல்வர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு பெரியார் விருதும் ரூபாய் 1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கினார்.

விருது பெற்ற பிறகு பேசிய வளர்மதி, “எனக்கு பெரியார் விருது வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியானபோது நான் சமூக வலைதளங்களைப் பார்த்தேன். அதில் தினமும் கோயிலுக்குப் போகும் வளர்மதிக்கு பெரியார் விருதா என்று கேலிச்சித்திரங்கள் வரைந்து கிண்டல் செய்திருந்தனர். அதை பார்த்து சிரித்துக்கொண்டேன். சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்பவர்கள் யார் என்று எனக்குத் தெரியும். அதை யார் பரப்புகிறார்கள் என்பதும் எனக்கு தெரியும். நான் அந்த அரசியலுக்குள் போக விரும்பவில்லை. ஆனால், நான் ஒன்பது வயது சிறுமியாக இருந்தபோது தந்தை பெரியார் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் மேடை பேச்சை தொடங்கியவள். இன்று அவர் பெயரால் விருதை பெற்றதைப் பெருமையாகக் கருதுகிறேன். கடவுள் மறுப்பு மட்டும்தான் பெரியாரின் கொள்கையா? பெண் உரிமை மற்றும் பெண் விடுதலை உள்ளிட்டவையும் பெரியாரின் கொள்கைகள்தான். பெண் உரிமை கொள்கையை மையப்படுத்தியே ஒரு பெண்ணுக்குப் பெரியார் விருது கொடுத்துள்ளார் முதல்வர்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசும்போது, “நான் கலப்பு திருமணம் செய்து கொண்டேன். என் பிள்ளைகள் இருவருக்கும் கலப்பு திருமணம் செய்து வைத்துள்ளேன். நான் பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவள் இல்லையா?” என்றும் வளர்மதி கேள்வி எழுப்பினார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 17 ஜன 2018