மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: பருவநிலையை எதிர்கொள்ள கியூபாவின் நூற்றாண்டு திட்டம்

சிறப்புக் கட்டுரை: பருவநிலையை எதிர்கொள்ள கியூபாவின் நூற்றாண்டு திட்டம்

சைபர் சிம்மன்

நமக்கெல்லாம் ஐந்தாண்டு திட்டம்தான் பரிச்சயம். ஆனால், கியூபாவோ நூற்றாண்டு திட்டத்தைச் செயல்படுத்த தொடங்கியிருப்பதாக அறிய முடிகிறது. கியூபாவின் இந்த முயற்சி பற்றி விவரிக்கும், ’சயின்ஸ்’ பத்திரிகை கட்டுரையின் தலைப்பே, இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் தேவையை உணர்த்துகிறது. ‘பருவ நிலை மாற்றத்தில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள கியூபா நூற்றாண்டு திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது’. இதுதான் அந்தக் கட்டுரையின் தலைப்பு.

பருவநிலை மாற்றத்தின் பாதிப்பு வரும் ஆண்டுகளில் மிக கடுமையாக இருக்கலாம் என்பதால், அதிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கைத் திட்டமிடலை கியூபா மேற்கொண்டிருக்கிறது. கடலோரப் பகுதிகளில் புதிய கட்டடங்கள் கட்டத் தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளன.

பருவநிலை மாற்றம் பற்றி விஞ்ஞானிகளும் வல்லுநர்களும் தொடர்ச்சியாகக் கவலை பொங்கப் பேசிவருகின்றனர். இதன் பாதிப்பைப் புரிந்துகொண்டு மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால், எதிர்காலத்தில் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்து வந்தாலும், பல நாடுகள் இதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. பருவநிலை பாதிப்பை உணர்ந்திருக்கும் நாடுகளின் மத்தியில்கூட, அதை எதிர்கொள்வது தொடர்பாகக் கருத்து வேறுபாடு நீடிக்கிறது.

வழிகாட்டும் கியூபா

இந்தச் சூழலில் கியூபா மற்ற நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் செயலில் இறங்கியிருக்கிறது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் கியூபா முன் நிற்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதல் காரணம், அந்நாடு இதன் தாக்கத்தை நேரடியாக உணர்ந்திருக்கிறது. அண்மைக் காலங்களில் கியூபா அமைந்துள்ள கடல் பகுதியில் ஏற்பட்டுவரும் சூறாவளிகள் வழக்கத்தைவிட அதிக தீவிரத்துடன் தாக்கிப் பேரழிவை உண்டாக்கி வருகின்றன.

தீவுகள் கூட்டமான கியூபா சூறாவளிகள் தாண்டவமாடும் பாதையில்தான் அமைந்திருக்கிறது என்றாலும், 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு மோசமான பாதிப்பைச் சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலுக்கிய இர்மா சூறாவளி கியூபாவைப் போகிறபோக்கில் தாக்கியது என்றாலும், பத்து மீட்டர் உயர அலைகள் கடலோரப் பகுதிக்குள் புகுந்து பெரும் நாசத்தை உண்டாக்கிச் சென்றது. சூறாவளியின் இந்த மிதமிஞ்சிய சீற்றத்துக்குப் பருவநிலை மாற்றமே காரணம் என்றும், வருங்காலத்தில் இது இன்னும் மோசமாகும் அபாயம் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

கியூபா தாழ்வான கடலோரப் பகுதியை அதிகம் கொண்ட நாடு என்பதால் இந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்யாமல் விழித்துக்கொண்டிருக்கிறது. பேரிடர் திட்டமிடலில் கியூபா எப்போதுமே முன்னேச்சரிக்கையுடன் செயல்படும் நாடாக இருக்கிறது. சூறாவளிக்கு முன்னதாகப் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கச்சிதமாக மேற்கொள்வதன் மூலம், அந்நாட்டில் பாதிப்பு பெருமளவு குறைக்கப்படுகிறது. குறிப்பாக உயிர்ச் சேதம் இல்லாத அளவுக்குப் பார்த்துக்கொள்வதில் அரசு கவனமாக இருக்கிறது. பேரிடர் நிர்வாகத்தில் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக கியூபா திகழ்வதாகவும் பாராட்டப்படுகிறது.

இர்மா தந்த எச்சரிக்கை

இந்த தன்மைக்கேற்பவே கியூபா தற்போது பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை எதிர்கொள்ள நூற்றாண்டு திட்டத்தை வகுத்திருக்கிறது. பிராஜக்ட் லைப் எனும் பெயரில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளாகவே இந்தத் திட்டம் விவாதிக்கப்பட்டு வந்தாலும் இர்மா சூறாவளிதான் இதை உடனடியாகச் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்திச் சென்றுள்ளது. அதற்கேற்ப கியூபா அமைச்சரவை இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து முடுக்கிவிட்டுள்ளது. நிதி ஆதாரம் இதற்குப் பெரிய முட்டுக்கட்டையாக இருந்தாலும், இனியும் தாமதிக்க முடியாது எனும் புரிதலோடு கியூபா அரசு முதல்கட்ட நிதியை ஒதுக்கியிருப்பதோடு, வெளிநாடுகளிடமிருந்தும் உதவி கோரியுள்ளது.

பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டத்தின் அளவு உயர்ந்து வருவதாகவும் அஞ்சப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் கடல் மட்டம் ஏழு செ.மீ. அளவு உயர்ந்துள்ள நிலையில், 2100ஆம் ஆண்டில் இது 85 செ.மீ அளவு உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் தாழ்வான கடலோரப் பகுதிகள் காணாமல் போகலாம்.

இந்த நிலைக்கு அஞ்சியே கியூபா முன்னெச்சரிக்கை வியூகங்களை வகுத்திருக்கிறது. இதற்கான நூற்றாண்டு திட்டப்படி, தாழ்வான கடலோரப் பகுதியில் புதிய கட்டடங்கள் கட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் அலைகளுக்கு எதிராக முதல் கட்டத் தற்காப்பாகக் கருதப்படும் சதுப்புநிலக் காடுகளை வலுவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சதுப்புநிலக் காடுகள் வேகமாக மறைந்துவரும் நிலையில், அவற்றை மீட்டு பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்பட உள்ளது. இதே போல கடலுக்கு அடியில் உள்ள பவளப் பாறைகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தப்பட உள்ளது.

கடலோரப் பகுதியைப் பாதுகாக்கும் வகையில் கடலோரப் பொறியியலில் நிபுணத்துவம் மிக்க நெதர்லாந்து நாட்டின் உதவியையும் கியூபா கோரியுள்ளது. மிகவும் தாழ்வான பகுதிகளில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களை வேறிடத்துக்குக் குடிபெயரச் செய்யும் நடவடிக்கைகளையும் படிப்படியாக மேற்கொண்டு வருகிறது.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் செஷல்ஸ் போன்ற நாடுகளும் ஆர்வம்காட்டி வருகின்றன. எனினும், கியூபா போல வேறு எந்த நாடும் இந்தப் பிரச்னையைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு முழு வீச்சிலான திட்டத்தை வகுக்கவில்லை என வல்லுநர்கள் கருதுகின்றனர். விஞ்ஞானிகள் சொல்வதை மதித்து நடக்கும் விதிவிலக்கான நாடாக கியூபா இருப்பதே இதற்கு முக்கியக் காரணம் என்று அமெரிக்காவில் உள்ள கடல்சார் விஞ்ஞான அமைப்பான ஓஷன் டாக்டர் அமைப்பின் தலைவரான டேவிட் ககன்ஹியம் (David Guggenheim) கூறுகிறார்.

பருவநிலை மாற்றம் என்பது ஒட்டுமொத்த மனித குலத்துக்கான அச்சுறுத்தலாக விளங்கும் நிலையில், இந்தப் பிரச்னையை எதிர்கொள்வதில் காட்ட வேண்டிய தீவிரத்தை கியூபா உணர்ந்துள்ளது. மற்ற நாடுகளும் இதே வேகத்தைக் காட்ட வேண்டும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

மூலக் கட்டுரை: http://www.sciencemag.org/news/2018/01/cuba-embarks-100-year-plan-protect-itself-climate-change

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சைபர் சிம்மன் அறிவியல், தொழில்நுட்பம் குறித்துத் தமிழில் தொடர்ந்து எழுதிவருபவர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected]; இவருடைய வலைதளம்: www.cybersimman.com)

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 17 ஜன 2018