மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: குப்பைகளை வளமாக்கும் மைசூர்!

சிறப்புக் கட்டுரை: குப்பைகளை வளமாக்கும் மைசூர்!

பிபுதத்தா பிரதான்

நேரம் அப்போது சரியாக காலை 6.30 மணி. மைசூர் நகரின் வீதிக்களில் விசில் ஒலி எழுப்பிக்கொண்டு கைகளில் ரப்பர் உறை அணிந்துகொண்டு ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று சேகரித்துக் கொண்டிருந்தனர். ஆலிவ் பச்சை மேல் அங்கியும் அணிந்திருந்தனர். இவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய குறையாத செல்வமான குப்பையைத் தான் சேகரித்துக் கொண்டிருந்தனர்.

தென்னிந்தியாவின் முக்கிய நகரமான மைசூரில் 10 லட்சம் பேர் வாழ்கின்றனர். பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு முன்னோடி நகரமாகவும் மைசூர் விளங்குகிறது. இந்த நகரம் குப்பைகளை மக்களிடமிருந்து பெற்றுப் அவற்றைப் பிரித்து மறுசுழற்சி செய்து ரப்பர் பொருள்கள் தயாரிப்புக்கும், உரங்கள் தயாரிப்புக்கும் பயன்படுத்துகிறது. பாரம்பர்ய முறைகளைக் கொண்டு, குறைந்த ஊழியர்களைப் பயன்படுத்தி, நவீன ஆலைகளில் இந்தப் பணியை மேற்கொள்கின்றனர்.

இந்திய நகரங்கள்தான் உலகிலேயே அதிகளவிலான குப்பையை உற்பத்தி செய்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் இந்திய நகரங்கள் 62 மில்லியன் டன் குப்பையை உற்பத்தி செய்கின்றன. அதில் 82 சதவிகிதம் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. 28 சதவிகிதம் மட்டும்தான் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மீதமெல்லாம் மண்ணுக்குத்தான் செல்கிறது. இவை ஆற்று நீரிலும், நீர்நிலைகளிலும் சென்று கலக்கின்றன.

இந்தியாவின் பொருளாதாரம் வளர வளர துப்புரவு மோசமடைந்து வருகிறது. வீதிகள் மிகவும் மாசடைந்து வருகின்றன. செல்வம் அதிகரிப்பு மற்றும் நுகர்வு அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாகவும், வேகமாக அதிகரித்துவரும் நகரமயமாதல் காரணமாகவும் நகரங்களின் கழிவுகளின் அளவு 2051ஆம் ஆண்டுக்குள் 5 மடங்கு அதிகரிக்கும் என்று புதுடெல்லியைச் சேர்ந்த ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் 2016ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வறிக்கைக் கூறுகிறது.

பொருளாதார வளத்துக்கு வழியைக் காண்கிற நகரங்கள், வளமான சமூகத்தை உருவாக்க இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண இதற்கும் முதலீடு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. “குப்பைகள் வீணாக வேண்டுமென்றும் நாங்கள் நினைக்கவில்லை. அதன்மூலம் செல்வத்தைப் பெற வேண்டும் என்று கருதினோம்” என்கிறார் மைசூரைச் சேர்ந்த சுகாதார அலுவலர். குப்பைகளை நிலத்தில் தேங்கவிடுவதை முற்றிலுமாக ஒழிப்பதே எங்கள் நோக்கமென்றும் அவர் தெரிவித்தார்.

விசில் சத்தம் கேட்டதுமே, மைசூர் நகரில் குடியிருப்பவர்கள் இரண்டு பைகளில் குப்பைகளை எடுத்து வருகின்றனர். ஒன்றும் மக்கும் குப்பை, மற்றொன்று மக்காத குப்பை. 400 கட்டை வண்டிகள் மற்றும் 170 ஆட்டோ டிப்பர்கள் ஆகியவற்றில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அங்குள்ள ஒன்பது மறுசுழற்சி மையங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த மையங்களில் குப்பைகள் பிரிக்கப்படுகிறது. பாட்டில்கள், மெட்டல்கள், காலணிகள் மற்றும் பிளாஸ்டிக் கப்கள் ஆகியவை தனியாகப் பிரிக்கப்பட்டு குப்பைகளை மறுசுழற்சி செய்யும் டீலர்களுக்கு விற்கப்படுகிறது. மீதமுள்ளவை உரமாக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது.

“குப்பைக் கழிவுகளால் பிரச்னையல்ல. இதை வைத்துப் பணமாக்கலாம்” என்கிறார் மாதேகவுடா. 75 வயதான இவர் கிரேவ்யார்டில் உள்ள கும்பூர் கொப்பலுவில் குப்பைகள் மறுசுழற்சி மையத்தை வைத்துள்ளார். இந்தக் கழிவுகளை மறுசுழற்சி செய்து ரப்பர் பொருள்கள் தயாரிக்க அனுப்புகிறார். உள்ளூர் அரசாங்கம் நன்கு ஒத்துழைப்பு அளித்ததால் இதைச் செய்ய முடிந்தது. மைசூர் நகரில் அரண்மனை உள்ளது. இங்கு ஒருகாலத்தில் மன்னர்களும், மகாராஜாக்களும் வாழ்ந்தனர். வானொலிகளிலும், வாட்ஸ்அப் வழியாகவும், தெரு விளம்பரங்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழியாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரசு ஊழியர்கள் வீடு வீடாகச் சென்றும் மக்களுக்கு விழிப்புணர்வு அளித்தனர்.

மறுசுழற்சி மையங்களைப் பொறுத்தவரையில் உள்ளூர் மக்களோ அல்லது அரசு சாராத நிறுவனங்களோ நடத்துகின்றன. மைசூர் நகரில் ஒரு நாளைக்கு 402 டன் குப்பைக் கழிவுகள் உருவாகின்றன. இதில் கால் மடங்கு மறு சுழற்சி செய்யப்படுகிறது. அரை மடங்கு உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

குப்பைக் கழிவு உர ஆலைகளிடமிருந்து மைசூர் ஆண்டு கட்டணம் வசூலிக்கிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தையும் மைசூர் செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்துக்கு மானிய உதவியும் வழங்கப்படுகிறது.

“பிரித்தெடுத்தல் என்பது இந்தத் திட்டத்தில் மிக முக்கியமானது. ஆனால், அது இதில் ஒரு பகுதி மட்டுமே” என்கிறார் சுவாதி. இவர் புதுடெல்லியில், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் திட்ட இயக்குநராக உள்ளார். பெரும்பாலான இந்திய நகராட்சிகளில் மனித ஆற்றலோ, வாகனங்களோ அல்லது உள்கட்டமைப்பு வசதியோ அல்லது போதிய வருவாயோ இல்லை.

மிகவும் பழைமையான மறுசுழற்சி மையங்களைப் போல, மைசூர் மறுசுழற்சி மையங்களும் அரசு உதவியைச் சார்ந்தே இயங்குகின்றன. “குப்பைக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உரங்களின் அளவு தற்போது 1.31 மில்லியன் டன்னாக உள்ளது. 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இதன் அளவு 0.15 மில்லியனாக மட்டுமே இருந்தது. குப்பைக் கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் துறைக்கான முதலீடுகள் 2027ஆம் ஆண்டில் 3 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது” என்று அசோசெம் 2015ஆம் ஆண்டு நடத்திய ஆய்வறிக்கை கூறுகிறது.

“குப்பைகள் மறுசுழற்சித் துறையில் இயங்கத் தனியார் நிறுவனங்கள் மிகவும் தயக்கம் காட்டி வருகின்றன. இத்துறையில் இயங்க அதிகமாக முதலீடு செய்ய வேண்டியுள்ளதே இதற்குக் காரணமாகும். அரசு உதவியுடன்தான் இத்துறையில் முதலீடு செய்ய இயலும்” என்கிறார் மும்பையைச் சேர்ந்த தேசிய திடக் கழிவு கூட்டமைப்பின் தலைவர் அமியா குமார் சாஹு. இந்த நிறுவனங்களுக்குக் கழிவுகள் விநியோகம் நகராட்சி நிர்வாகம் மூலமாகவே கிடைக்கிறது. உயர் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பங்களும் இதற்குத் தேவைப்படுகின்றன.

நாட்டில் உள்ள ஏழு முக்கிய மறுசுழற்சி ஆலைகளுக்கு மோடி அரசு இடைவிடாத மின்சார வசதி அளித்து வருகிறது. மேலும் 56 ஆலைகள் கட்டமைப்பில் உள்ளன. மைசூரில் சிறிய ஆலை இயங்கி வருகிறது. மைசூர் மக்களின் ஆதரவு சிறப்பாக உள்ளது. இதனால் மறுசுழற்சி சிறப்பாக நடைபெறுகிறது. சுத்தமான நகரமாகவும் மைசூர் விளங்குகிறது. அரண்மனை இருப்பதால் மட்டும் தொடக்க காலத்திலிருந்து சுத்தமாக இருக்கிறது என்று கூறி விட முடியாது. 1903ஆம் ஆண்டிலேயே இங்கு நகர்ப்புற திட்டமிடல் அமைப்பு உருவாக்கப்பட்டது. 1908ஆம் ஆண்டிலேயே தெரு விளக்குகள் அமைக்கப்பட்டது. 1910ஆம் ஆண்டிலேயே வடிகால் அமைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

“சுத்திகரிப்பு திட்டம் பற்றி மேலும் பல மக்களிடம் எடுத்துச் செல்ல வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் பல சுத்திகரிப்பு மையங்களை உருவாக்க வேண்டும்” என்கிறார் நாகராஜ். “இந்தச் செயல்பாடு மிகவும் மெதுவாக நடைபெறுகிறது. ஆனால், எல்லோருக்கும் பயனளிக்கும்” என்கிறார் அல்மித்ரா படேல். மேலும், “நாட்டின் முதல் நகராட்சி திடக் கழிவு மேலாண்மை சட்டம் 2000ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தில் மாநகராட்சி மேயர், உள்ளூர் பிரதிநிதிகள், ஆணையர் ஆகியோர் பணியாற்றுவர்” என்றார்.

நன்றி: பிசினஸ் ஸ்டாண்டர்டு

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

புதன் 17 ஜன 2018