மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

வெற்றிக்காகப் போராடும் இந்திய அணி!

வெற்றிக்காகப் போராடும் இந்திய அணி!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதன் தொடர்ச்சியாக தற்போது செஞ்சூரியன் மைதானத்தின் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது.

கடந்த சனிக்கிழமை (ஜனவரி 13) தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 335 ரன்களைச் சேர்த்தது. அதன் தொடர்ச்சியாக களமிறங்கிய இந்திய அணி விராட் கோலியின் சதத்தால் 307 ரன்கள் சேர்த்தது. அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி தொடக்க வீரர்களைக் குறைந்த ரன்களுக்குள் இழந்தது. ஆனால், அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஏபி டிவிலியர்ஸ் மற்றும் எல்கர் இருவரும் நிலைத்து நின்று விளையாடி 138 ரன்களைச் சேர்த்தனர். இது இந்திய அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் எடுத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோர் ஆகும்.

அவர்கள் விக்கெட்டுகளை மொஹமது ஷமி கைப்பற்றினார். அதன் பின் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனால், நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் ஃப்ரான்ஸ்வா டூ ப்ளஸிஸ் 48 ரன்களைச் சேர்த்தார். தென்னாப்பிரிக்க அணி 258 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் முரளி விஜய் (9) மற்றும் கே.எல். ராகுல் (4) இருவரும் குறைந்த ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கோலியும் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். நான்காம் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. புஜாரா (11), பார்த்திவ் படேல் (5) இருவரும் களத்தில் உள்ளனர்.

இன்று (ஜனவரி 17) ஐந்தாவது நாள் இந்திய அணி 252 ரன்களை சேர்த்தால் வெற்றி எனும் நிலையில், தென்னாப்பிரிக்க பந்து வீச்சைச் சமாளித்து அத்தகைய இலக்கை அடைவது கடினம். எனவே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை டிரா செய்ய இந்திய அணி முயற்சி செய்தால் தொடரை சமன் செய்ய அதிக வாய்ப்புள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவினால் தென்னாப்பிரிக்க அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விடும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 17 ஜன 2018