மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: ஊதியம் இல்லா ஊழியர்களா பெண்கள்!

சிறப்புக் கட்டுரை: ஊதியம் இல்லா ஊழியர்களா பெண்கள்!

அக்சய் கோஹ்லி & சந்த்ரிமா தாஸ்

கீதாதேவி அவருடைய குடும்பத்தில் உள்ள ஏழு பேருடன் கர்கராவில் வசிக்கிறார். இது மிகச் சிறிய மற்றும் நகரிலிருந்து மிக தொலைவில் இருக்கிற அடிப்படை வசதிகள் கிடைக்காத பின்தங்கிய கிராமமாகும். இந்தக் கிராமம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ளது. அதிகாலையில் நேரமாக எழுந்து விறகு எடுத்துவந்துதான் கீதாதேவி உணவு சமைக்க வேண்டும். விறகு கிடைக்கும் காட்டுப்பகுதிக்குச் செல்ல நான்கு கிலோமீட்டர் நடக்க வேண்டும்.

காடுகளும் சமீப ஆண்டுகளில் சுருங்கிவிட்டது. இதனால் சமைப்பதற்குப் போதுமான விறகு கிடைப்பதில்லை. ஒரு மணி நேரத்துக்கு மேலாகத் தேடியும் சமைப்பதற்குப் போதுமான விறகு கிடைக்காமல் கீதா வீடு திரும்பியுள்ளார். இரண்டு நாள்களாகச் சமைப்பதற்குப் போதுமான விறகு இல்லாமல் கீதா தடுமாறுகிறார். இதையடுத்து களிமண் அடுப்பைப் பயன்படுத்தி மணிக்கணக்கில் செலவழித்துச் சமைத்து வருகிறார். இந்த அடுப்புகளில் சாணக் கட்டிகளை எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர். சமைத்து முடித்த பின்னர் பாத்திரங்களைச் சுத்தம் செய்யும் பணியை இவரே மேற்கொள்கிறார். பிறகு மதியத்துக்கு மேல் அடுத்த நாள் உணவு சமைக்கத் தேவையான சாணக் கட்டிகளைத் தயார் செய்யும் பணியில் ஈடுபடுகிறார்.

மீதமுள்ள நேரத்தில் தண்ணீர் சேமிக்கவும், அடுத்த நாள் உணவு சமைக்கத் தேவையான மற்ற பணிகளையும் மேற்கொள்கிறார். கீதாவின் ஆறு வயதான மகள் மிகவும் அரிதாகவே தன்னுடைய சகோதரர்களுடன் பள்ளிக்குச் செல்கிறார். வீட்டிலேயே அம்மாவுடன் இருந்து அவருக்கு உதவி புரிந்துவருகிறார். மேலும், அவரது நோய்வாய்ப்பட்ட பாட்டியையும் கவனித்துக்கொள்கிறார்.

கீதாவின் கதை இந்தியாவின் பல கிராமப்புறப் பெண்களின் நிலையைப் பிரதிபலிக்கிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஓ.பி.சி.டி. ஆய்வில், இந்தியப் பெண்கள் ஒரு நாளைக்குத் தோராயமாக 9 மணி நேரம் வேலை செய்கிறார்கள். ஆனால், இந்திய ஆண்கள் ஒரு நாளைக்குத் தோராயமாக 7 மணி நேரம்தான் வேலை செய்கின்றனர். ஆனால் பெரும்பாலான பெண்கள் மேற்கொள்ளும் பணிகள் ஊதியமற்றப் பணியாகவே உள்ளது. வீட்டு வேலைகள், பாதுகாப்பு வேலைகள், குழந்தைகளை கவனித்துக் கொள்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். மற்ற நேரங்களில் ஊதியம் வழங்கும் வேலைக்குச் செல்கின்றனர். அல்லது சமூகப் பணிகளிலோ, ஓய்வாகவோ இருக்கின்றனர். இப்படிப்பட்ட காலப் பற்றாக்குறையை ‘நேர வறுமை’ என்று பொதுவாக குறிப்பிடுகின்றனர்.

இப்படிப்பட்ட ஊதியமற்ற பணியை உலகம் முழுவதுமே பெண்கள்தான் பெரும்பாலும் மேற்கொண்டுள்ளனர். ஆனால் இந்தியாவில் இந்தப் பிரச்னை மிகவும் தீவிரமாக உள்ளது. சர்வதேச அளவில் ஊதியமல்லாத பணியை அதிக நேரம் பெண்கள் மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியா கஜகஸ்தானுக்கு அடுத்த நிலையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தண்ணீர் எடுத்துவருவதற்கும், விறகு எடுத்துவருவதற்கும் கடினமான உழைப்பைப் பெண்கள் செலுத்துகின்றனர்.

பெண்களிடம் நிலவும் இத்தகைய நேர வறுமைக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது கிராமப்புறங்களில் நிலவும் பாலின சமத்துவமின்மையே. பெண்களின் நேர வறுமையும், அவர்களின் நிலையும் ஒன்றாகப் பிணைந்துள்ளது. இந்த மிகப்பெரும் சுமைக்கு காரணமாக உள்ள கிராமப்புறங்களில் நிலவும் பாலினப் பாகுபாடு, அவர்களின் மீது கட்டாயமாகத் திணிக்கப்படும் பாலினத் திணிப்புகளில் அடங்கியுள்ளது.

சமைத்தல், எரிபொருள் சேகரித்தல், பாத்திரங்கள் சுத்தம் செய்தல் இந்த மூன்று பணியும் ஊதியம் பெறாமல் வேலை செய்யும் பெண்களின் தொடர்ச்சியான பணியாக இருக்கிறது. கிராமப்புறப் பெண்களைப் பொறுத்தவரையில் ஒரு நாளைக்கு 4.30 மணி நேரம் சமையல் மற்றும் அதைச் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர். அதாவது தூங்கும் நேரம் போக மீதி நேரத்தில் இந்தப் பெண்கள் பாதி நேரத்தைச் சமையல் தொடர்பான வேலைகளில் மட்டுமே ஈடுபடுகின்றனர்.

அதேபோல 80 சதவிகித இந்திய கிராமப்புறப் பெண்கள் இலவசமாகக் கிடைக்கும் எரிபொருள்களையே சமைக்க பயன்படுத்துகின்றனர். குறிப்பாக விறகு, சாணக் கட்டி, வேளாண் கழிவு போன்றவற்றையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இவற்றைக்கொண்டு சமைக்க கூடுதல் நேரம் எடுத்துக்கொள்கிறது.

இதற்கான தீர்வு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத சுத்தமான எரிசக்தியைச் சமையலுக்குப் பயன்படுத்துவதுதான். உதாரணமாக எல்.பி.ஜி., எலெக்ட்ரிக் அடுப்பு, சோலார் அடுப்பு போன்றவற்றை பயன்படுத்தலாம். இவை கிராமப்புறப் பெண்களின் சமையல் நேரத்தைக் குறைத்து அவர்களின் ‘நேர வறுமை’யைக் குறைக்கும். சுத்தமான ஆற்றலைப் பயன்படுத்துவதால் ‘நேர வறுமை’ ஒழிப்பு சாத்தியமாகுமா என்ற கேள்வியும் எழுகிறது.

எல்.பி.ஜி. எரிசக்தியைப் பயன்படுத்தும்போது மற்ற விறகு, சாணம் போன்ற எரிபொருள்களைப் பயன்படுத்தும்போது சமைக்க ஆகும் நேரத்தை விட 3 மணி நேரம் குறைவாகவே செலவாகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் நேரம் எப்படிக் குறைகிறது என்று ஒப்பிட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளோம். அதேபோல எல்.பி.ஜி. பயன்படுத்தும்போது பாத்திரங்கள் சுத்தம் செய்ய ஆகும் நேரமும் பெண்களுக்குக் குறைவாகவே ஆகிறது.

தெற்காசியாவில் நடத்தப்பட்ட ஆய்வில், “சமைக்கப் பெண்கள் பயன்படுத்த விரும்பும் எரிபொருள்களின் பட்டியலில் முதல் பொருளாக எல்.பி.ஜி. தான் உள்ளது. இருப்பினும் அதன் இருப்பு, அதிக விலை, பாரம்பர்ய உணவுப் பொருள்களைச் சமைப்பதில் உள்ள மாறுபாடு, அதன் பாதுகாப்பு குறித்த கவலைகளும் உள்ளன. ஆனாலும், எல்.பி.ஜி. இணைப்புகளின் எண்ணிக்கை கடந்த மூன்றாண்டுகளில் அதிகளவில் அதிகரித்துள்ளது” என்று எஃப்.எஸ்.ஜி. ஆய்வறிக்கை கூறுகிறது.

மத்திய அரசு உஜ்வாலா திட்டத்தில்தான் இந்த இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், இதில் இணைப்பு பெற்றவர்களில் பலர் ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தவேயில்லை. இவர்களிடம் சோலார் அடுப்பு பற்றிய விழிப்புணர்வு சிறிதளவில் மட்டுமேயுள்ளது. எலெக்ட்ரிக் அடுப்பு சில கிராமப்புற வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தடையில்லாத மின்சாரம் இவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதால் இது அவர்களுக்குச் சாத்தியப்படுவதில்லை.

சுத்தமான எரிசக்தியைக் கிராமப்புறப் பெண்களுக்கு வழங்க வேண்டியது அவசியமானதாக உள்ளது. இது பாலின பிரச்னையுடன் தொடர்புடையதாக உள்ளது. அதேசமயம் சுகாதாரம் மற்றும் வீட்டுக்குள் ஏற்படும் மாசுபாட்டிலிருந்தும் காக்க வேண்டியுள்ளது. இந்த ஆய்வுநேர வறுமையைக் குறைப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது கிராமப்புறப் பெண்களின் சோர்வு, அசௌகரியம் ஆகியவற்றிலிருந்து கிராமப்புறப் பெண்களைக் காக்கிறது.

கிராமப்புறப் பெண்களுக்குச் சுத்தமான எரிசக்தியைப் பயன்படுத்த விழிப்புணர்வு, போதிய இருப்பு, குறைவான செலவு ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும். அப்போதுதான் கிராமப்புறப் பெண்களின் நேர வறுமை ஒழியும்.

நன்றி: இந்தியா டெவலப்மென்ட் ரிவ்யூ

படங்கள்: எஃப்.எஸ்.ஜி & ஸ்கிரால்

தமிழில்: பிரகாசு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 16 ஜன 2018