மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

இனி ஹஜ் மானியம் கிடையாது!

இனி ஹஜ் மானியம் கிடையாது!

ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள இஸ்லாமியர்களுக்கு அளித்து வந்த மானியத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்குச் செல்வது என்பது இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் மத்திய அரசின் மானியத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். அதிகபட்சமாக இந்த ஆண்டு 1.75 இந்தியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

ஹஜ் பயணிகளுக்கு அளிக்கப்படும் மானியத்தை ரத்து செய்துவிட்டு இஸ்லாமியர்கள் மற்ற முன்னேற்றங்களுக்கு இத்தொகையைச் செலவிட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்துவந்தது. இது தொடர்பாக, 2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கூட ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதில், ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை 2022ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, இது தொடர்பாகப் புதிய கொள்கையை உருவாக்க முன்னாள் செயலாளர் அப்சல் அமானுல்லா தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழுவின் வரைவு பரிந்துரை, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விடம் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஹஜ் மானியத்தை இந்த ஆண்டு முதல் ரத்து செய்வதாக மத்திய அரசு இன்று (ஜனவரி 16 ) அறிவித்துள்ளது. இது தொடர்பாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், “ஹஜ் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் மானியம் ரத்து செய்யப்படுகிறது. சிறுபான்மையினரைக் கண்ணியமான முறையில் முன்னேற்றும் எங்களின் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை.

இதுவரை ஹஜ் பயணம் மேற்கொள்வோர் விமான மார்க்கமாகப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது மத்திய அரசானது சவுதி அரேபிய அரசுடன் ஒப்பந்தம் ஒன்றினைச் செய்துள்ளது. அதன்படி ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கையினை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதுடன், கடல்வழிப் போக்குவரத்தினை மேற்கொள்ளவும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணச் செலவானது வெகுவாகக் குறையும்

இந்த ஆண்டு மட்டும் 1.75 லட்சம் பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மானியமாக மட்டும் குறைந்த பட்சம் ரூ.500 கோடி செலவாகிறது. இனி இந்த மானியத் தொகையானது இஸ்லாமியப் பெண் குழந்தைகளின் கல்விக்குப் பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

செவ்வாய் 16 ஜன 2018