மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

கெட்ட வார்த்தையும் கேட்ட வார்த்தையும்: சூர்யாக்களின் கவனத்துக்கு!

கெட்ட வார்த்தையும் கேட்ட வார்த்தையும்: சூர்யாக்களின் கவனத்துக்கு!

ஹரி

சூர்யாவின் படங்களுக்குக் குடும்பம் சகிதமாக மக்கள் வர, 'மாஸ் ஹீரோ' என்பதையும் தாண்டி நல்ல படங்களைத் தேர்வுசெய்து நடிப்பவர் என்பதும் ஒரு முக்கியக் காரணம். படத்தில் சூர்யா போலீஸோ, ரவுடியோ, முகம் சுளிக்கும் காட்சிகள் ஏதுமின்றி குழந்தைகளுடன் அவர் படங்களைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கையைத் தாய்குலங்களின் மனதில் இதுவரை நிறுவியிருந்தார். 'தானா சேர்ந்த கூட்டம்' அந்த நம்பிக்கையைச் சுக்கு நூறாக உடைத்தெறிந்திருக்கிறது.

எதிர்பார்த்தது போலவே தானா சேர்ந்த கூட்டத்திற்காக மட்டும் போரம் மாலில் இளைஞர் கூட்டம் ஒன்று தனியாகச் சேர்ந்திருந்தது. அரங்கம் நிரம்பி வழிந்தது, பார்வையாளர்களில் ஒவ்வொரு வரிசையிலும் குறைந்தபட்சம் ஐந்து குழந்தைகள் மூன்று முதியவர்கள் என பாப்கார்ன், பர்கர் சகிதம் அமர்ந்திருந்தனர். லஞ்சம் கேட்ட போலீசை சூர்யா 'பொளேர்' என்று அப்பிவிட்டு 'சொடக்கு மேலே சொடக்கு போடுது' என்று ஆட்டத்தை ஆரம்பிக்க, குழந்தைகளிடத்தில் உற்சாகம் பொங்கிக் களை கட்டியது. பக்கத்துக்கு சீட்டு சிறுவன் பாட்டு முழுக்க வரி தவறாமல் கூடவே பாடிக்கொண்டிருந்தான்.

தன் குடும்பத்தினரிடம் கரை புரண்ட உற்சாகத்தை கண்டு ஆயிரம் ரூபா செலவு செஞ்சது வீண் போகாது என்ற ஒரு அவசர நம்பிக்கை குடும்பத் தலைவர்கள் மனதில் துளிர்க்க ஆரம்பித்த நொடியில், 'புடுங்கலாம் புடுங்கலாம்' என இன்டர்வியூ காட்சியில் சூர்யாவும் வில்லனும் மாறி மாறிப் புடுங்க ஆரம்பித்தனர். பிள்ளைகளுக்கு கேட்கக் கூடாது என்பதற்காகவே பலத்த சத்தமாக கையை தட்டி இக்காட்சியை கடந்தார்கள் சிலர்.

தரங்கெட்ட சொற்கள்

இது வெறும் ஆரம்பம்தான், காமெடி என்ற பெயரில் விக்னேஷ் சிவன் நிகழ்த்த இருக்கும் தரங்கெட்ட கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்கள் இனிமே தாண்டா இருக்கு என்பது அப்போதைக்கு இவர்களுக்கு தெரிந்திருக்காது. படத்தின் முக்கியக் காட்சி ஒன்றில், 'வாயில வச்சிருங்க' என சிபிஐ அதிகாரி கார்த்திக் சொல்ல, வாயில தானே, வச்சிரேன் சார் என்கிறார் வில்லன். அதிர்ச்சியாகும் போலீஸ் , பக்கத்திலிருக்கும் பெண் போலீசைச் சற்றுத் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு மெதுவாக வில்லனிடம் கேட்கிறார். "சார், வாயில வைக்கிறதுனா புரியலையே சார் என மூன்றாம் முறை கேட்க, ‘அடப்பாவிகளா’ என அப்பன்கள் எல்லாம் அவமானத்தால் சீட்டிற்குள் தலையை புதைத்து கொள்ள, ஏதோ ஒரு சீட்டிலிருந்து ஒரு சிறுமி மெல்லிய குரலில், "தாத்தா, வாயில வைக்கிறதுன்னா என்ன தாத்தா ? " எனக் கேட்டாள். பார்வையாளர்களிடத்தில் மயான அமைதி. பல அம்மாக்கள் தலையைக் கவிழ்ந்துகொண்டனர். செருப்பைத் தேடியிருப்பார்கள் என நினைக்கிறேன்.

அந்தச் சிறுமியின் தாத்தாவை ஒரு நொடி நினைத்துப் பார்த்தேன். அக்கேள்வியை அவர் எப்படி கடந்திருப்பார்? ஒருவேளை அதிர்ச்சியில் அழுதிருப்பாரோ ? நிச்சயம் கோபத்தில் மனதிற்குள் குமுறியிருப்பார், என்னடா படம் எடுக்கிறீங்க! போனை ஒட்டு கேட்கிறதுக்கு தேவையே இல்லாம இவ்வளவு கீழ்த்தரமாவாடா வசனம் எழுதுவீங்க, ‘தூ’ என்று துப்பியிருக்கலாம். இருட்டில் இவை எதுவுமே யாருக்கும் தெரியவில்லை.

இது போன்ற வசனங்களை தொடர்ந்து தன் படங்களில் வைக்கும் விக்னேஷ் சிவனுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. யூத் ஆடியன்ஸைக் கவர்கிறேன் என்ற பெயரில் , “கோத்தா கொம்மாளே” என்று விஜய் சேதுபதியைச் சொல்லவைத்து நயன்தாராவை “ரோஜாபூமாலை” என்று ‘மொழிபெயர்க்க’ வைத்தவர் அவர். இறுதிக் காட்சியில் “உன்ன போடணும்” என நயன்தாராவை சொல்லவைத்து, “எது, என்ன போடணுமா, ஐயம் ரெடி” என பார்த்திபனைக் கிளர்ச்சியடைய வைத்தவர் விக்னேஷ்.

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக சூர்யா வையே இதில் ஒரு வசனத்தைச் சொல்ல வைத்திருக்கிறார். துப்பாக்கியை நீட்டும் போலீசிடம், “வயசானதுக்கப்புறம் இன்னும் என்ன சார் கைல புடிச்சி அசிங்கமா ஆட்டிட்டு இருக்கீங்க?” என்கிறார் சூர்யா.

சூர்யாவா இப்படி?

'தட்ஸ் இட்', படம் நல்லாருக்கா மொக்கையா என்பதெல்லாம் மறந்துபோய், சூர்யாவா இவ்வளவு கீழ்த்தரமான வசனங்களை பேசுகிறார் என்ற கவலை ஏற்பட்டது. “குழந்தைகள் கெட்ட வார்த்தை பேச மாட்டாங்க, கேட்ட வார்த்தைதான் பேசுவாங்க” என உபதேசம் செய்தவர் நீங்கள். உங்கள் பிள்ளைகளை இதுபோன்ற கீழ்த்தரமான வசனங்கள் நிரம்பிய படத்திற்கு அழைத்துச் செல்வீர்களா? ச்சை… காசைக் குடுத்து இந்தக் கருமங்களைக் கேட்க வேண்டியதிருக்கு என சூர்யாவை வெகுவாக அர்ச்சிக்கத் தொடங்குகிறார்கள் மக்கள்.

உண்மையில் இது பெரும் அதிர்ச்சிதான். உச்ச நட்சத்திரங்களின் வாயால் இந்த மாதிரி லுச்சாத்தனமான வசனங்கள் வரும்போது மிக எளிதாக அது குழந்தைகளின் மூளையில் பதிந்துவிடும். இது கிட்டத்தட்ட ஐஸ்க்ரீமில் விஷம் தடவிக் கொடுப்பது போலத்தான். பிள்ளைகள் வெள்ளந்தியாக உள்ளெடுத்துக்கொள்கிறார்கள். இரட்டை அர்த்த வசனங்கள் என்ற பெயரில் வரைமுறையே இல்லாமல் வழிந்தோடும் இவை எல்லாம் simply an act of pervertism.

எந்த விதக் காட்சி அவசியமும் இன்றி வலிந்து இம்மாதிரியான வசனங்களைத் தொடர்ந்து தன் படங்களில் வெளிப்படுத்தும் விக்னேஷ் சிவன் ஒரு நல்ல இயக்குநரா என்ற கேள்வி இருக்கட்டும். நயன்தாரா, சூர்யா போன்ற உச்ச நட்சத்திரங்கள்கூடக் கேள்வியே கேட்காமல் மனதில் ஒரு சிறு குற்ற உணர்ச்சியும் இன்றி எப்படி இந்த வசனங்களுக்கு டப்பிங் பேசுகிறார்கள்? நீங்களே இதை மறுக்காத போது பிறகு யார் தான் இதை மறுப்பார் ?

உண்மையில் இந்தப் பதிவு மன வலியின் உச்சமே. இந்த மாதிரி வசனங்கள் வைத்தால்தான் இன்றைய இளைஞர்கள் கை தட்டுவார்கள் என எந்தக் கேனக் கூட்டம் உங்களை நம்ப வைத்தது. இப்படியெல்லாம் தரங்கெட்ட வசனங்கள் பேசித்தான் உங்கள் படம் வெற்றி பெற வேண்டும் என்ற பரிதாப நிலை உங்களுக்கு இல்லை. நீங்கள் ஒரு திறமையாளர். எது அறம் என உங்களுக்குத் தெரியாதது இல்லை!

நல்லது செய்கிறீர்கள் சூர்யா, தயவுசெய்து நல்லதை மட்டும் செய்யுங்கள்.

தானா_சேர்ந்த_கூட்டம்

நன்றி: ஹரிகிருஷ்ணன் தங்கவேலுவின் (Hariharasuthan Thangavelu) ஃபேஸ்புக் பதிவு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

செவ்வாய் 16 ஜன 2018