அலங்காநல்லூர்: பரிசு மழையில் வீரர்கள்!


அலங்காநல்லூரில் இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை பரிசளிப்புடன் நிறைவு பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு கார் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
காணும் பொங்கலான இன்று (ஜனவரி 16) மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக உலக முழுவதிலும் இருந்து பார்வையாளர் வந்திருந்தனர். வெளிநாட்டு பார்வையாளர்கள், விஐபிகள் போன்றவர்களுக்கு தனித்தனி காலரிகள் அமைக்கப்பட்டிருந்தன.
முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டதும் மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு பிடித்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கொம்பன் என்ற காளையை பலரும் பிடிக்க முயன்று தோற்றுப்போனார்கள். இறுதியில் அந்தக் காளைக்கு நான்கு தங்க காசுகளும், பத்தாயிரம் ரூபாய் பணமும் பரிசாக வழங்கப்பட்டது.
மொத்தம் 8 சுற்றுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாலை 5 மணிக்குப் போட்டி நிறைவு பெற்றது. மொத்தம் 700 மாடுபிடி வீரர்களும், 520 காளைகளும் பங்கேற்றன. இதில் எட்டு காளைகளை பிடித்த அலங்காநல்லூரை சேர்ந்த அஜய் என்பவர் மாடுபிடி வீரர்களில் முதலிடத்தையும், ஆறு காளைகளை பிடித்த இரண்டு இளைஞர்கள் இரண்டாமிடத்தைப் பெற்றதாகவும், மொத்தம் ஒன்பது காளைகள் சிறந்த காளைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அஜய்க்கு ஹுண்டாய் கார் பரிசாக வழங்கப்பட்டது.
இதேபோல், காளையைச் சிறப்பாக பராமரித்த பொன்னமராவதி மலையாண்டி என்பவருக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு இரு சக்கர வாகனம் போன்றவை பரிசாக வழங்கப்பட்டது.