தலைமை நீதிபதி- நீதிபதிகள் பேச்சுவார்த்தை!


செய்தியாளர்களைச் சந்தித்த உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளுடன், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப் மற்றும் மதன் பி லோகூர் ஆகிய நால்வரும் கடந்த 12 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தனர். வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும், உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வையும், பலத்த விவாதத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து தலைமை நீதிபதி- நீதிபதிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாட்டை சரிசெய்ய இந்திய பார் கவுன்சில் சார்பில் 7பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் அலுவல் நேற்று மீண்டும் ஆரம்பித்த நிலையில், தலைமை நீதிபதி மற்றும் நான்கு நீதிபதிகளும் நீதிமன்றத்துக்கு வருகை தந்து தங்களது அன்றாடப் பணிகளை கவனித்தனர். நீதிபதிகளுக்கு இடையேயான பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டதாக பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ராவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆனால் புகார் கூறிய நான்கு மூத்த நீதிபதிகளுக்கும் இடம் அளிக்கப்படவில்லை. இதனால் பிரச்னை தீர்ந்ததா என்ற கேள்வியும் எழுந்தது.
அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறுகையில், நீதிபதிகளுக்கு இடையேயான பிரச்னை இன்னும் முடிவடையவில்லை என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் பிரச்னை சரிசெய்யப்பட்டுவிடும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.