உள்துறை அமைச்சருடன் கிரண்பேடி சந்திப்பு!

புதுவை அரசின் நிதிநெருக்கடி குறித்து விவாதிக்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சந்தித்துள்ளார்.
புதுவை ஆளுகின்ற நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே பல்வேறு பிரச்னைகள் எழுந்து வந்தன. குறிப்பாக ஆளுநர் கிரண்பேடி அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் பாஜகவை சார்ந்த மூவரை நியமன எம்.எல்.ஏக்களாக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இது நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதலை உருவாக்கியது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆளுநர்கள் வரம்பை மீறி செயல்படுகிறார்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று டெல்லி சென்றுள்ள புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறார். நேற்று (ஜனவரி 15) மத்திய தனிநபர் விவகாரம் மற்றும் ஓய்வூதியத்துறை அமைச்சர் ஜிதேந்திரசிங்கை சந்தித்து பேசினார். அவரைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து பேசியுள்ளார்.