மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

ஞாநி உயிரோடு இருக்கும்போதே ஏன் இதைச் சொல்லவில்லை?

ஞாநி உயிரோடு இருக்கும்போதே ஏன் இதைச் சொல்லவில்லை?

அபிலாஷ் சந்திரன்

ஞாநியின் மறைவை ஒட்டி நூற்றுக்கணக்கான அஞ்சலிக் குறிப்புகள் நம் பேஸ்புக் டைம்லைனில் தோன்றிக் கண்ணீர் சிந்தின, மெல்ல அழுதன, கையைப் பற்றி அழுத்தின. நான் ஒரு நண்பரிடம் ஞாநி ஏற்படுத்தியுள்ள சமூகத் தாக்கத்தை, அபாரமான நட்பு வலையை, அவர் சம்பாதித்த நற்பெயரைப் பற்றி வியந்து பேசிக்கொண்டிருந்தேன்.

அந்நண்பர் சில நொடிகள் அமைதியாகிவிட்டுச் சட்டெனக் கேட்டார்: “இவ்வளவு நாளும் இந்த அஞ்சலிக் குறிப்பாளர்கள் எங்கிருந்தார்கள்? அவர் உயிருடன் இருந்தபோது அவரைப் பற்றி மிகக் குறைவான பாராட்டுரைகளே எழுதப்பட்டன. அதிகமும் அவரை விமர்சித்தும் கண்டித்தும் எதிர்த்துமே எழுதினோம். அவர் இல்லாமல் ஆன பின் எவ்வளவு ஆயிரமாயிரம் சொற்களை மாலை மாலையாய் அவர் பிம்பத்தின் மேல் சூட்டுகிறோம். ஏன் இந்தப் பாசாங்கு? ஏன் மரணத்தில் மட்டுமே ஒரு மனிதன் மதிப்பு பெறுகிறானா?”

எனக்கு சட்டென விக்கித்துவிட்டது. நானும் இப்பட்டியலில் சேர்வேன். ஒரு மனிதர் மறைந்த பின்னர் எல்லாக் கசப்புகளையும் அல்லது தயக்கங்களையும் கடந்து அவரை பாராட்டி அன்பைப் பொழிவது எளிதாகிறது. தமிழில் வாழ்ந்து மறைந்த அத்தனை ஆளுமைகளுக்கும் இது பொருந்தும். ஒருவர் இறந்ததும் அவரைப் பற்றிச் சொற்களை உருவாக்க நம் விரல்கள் கீபோர்டில் நர்த்தனமிடத் தொடங்குகின்றன. இது ஏன்?

நண்பர் போனைத் துண்டித்த பின்னரும் வெகுநேரம் இதைப் பற்றியே சிந்தித்தபடி இருந்தேன். இதற்கு இரு காரணங்கள் தோன்றின. அஞ்சலிக் குறிப்பெழுதும் நம் மனநிலையை நான் இரு விதங்களில் புரிந்துகொள்கிறேன்.

அஞ்சலிக் குறிப்புகளும் அன்றாட அமைதியும்

ஒருவர் இருக்கும் காலத்தைவிட இறந்த பின்னரே அவரைப் பற்றிப் பேசுவதற்கான தேவை நமக்கு அதிகமாகிறது. இதில் பாசாங்கு ஏதும் இல்லை. அஞ்சலிக் குறிப்புகள் நமது அன்றாட அமைதிக்கு அவசியமானவை. எப்படி எனச் சொல்கிறேன்.

1) மனிதர்கள் எப்படி நம் வாழ்வில் இடம் பெறுகிறார்கள்? புனைவின் வழி. ஒவ்வொரு மனிதனும் பொதுவாழ்விலோ அந்தரங்க உலகிலோ தனது உரையாடல்கள் வழி தன்னை ஒரு பாத்திரமாக உருவாக்கிக்கொள்கிறான். அவனது அடிப்படையான குணாதசியம், அவனது உடல் மொழி, கையசைவு, குரல், நம்பிக்கைகள், உணர்வு நிலை என ஒவ்வொன்றாய் நம் நினைவடுக்குகளில் சேர்ந்த பின் அவன் நம் வாழ்வில் நீங்கா இடம் பிடிக்கிறான். அப்போது அவன் தன்னைப் பற்றி ஒரு கதையை உருவாக்கிக்கொண்டிருப்பான் (இதைக் கோட்பாடுகளில் கதையாடல் என்கிறார்கள்).

அதாவது நமது அன்றாட வாழ்வு பல் வேறு சினிமாக்களின் தொகுப்பே. டிவியில் பார்க்கும் மனிதர்கள், பண்பலை வானொலியில் நாம் கேட்பவர்கள், சாலையில் எதிர்வருபவர்கள், அலுவலகத்து நண்பர்கள், உயரதிகாரி ஆகிய ஒவ்வொன்றும் ஒருவித சினிமா. நம் குடும்பம் நாமும் பங்கு பெறும் நாம் மட்டுமே பார்க்க முடிகிற ஒரு அந்தரங்க சினிமா. நம் மனம் இப்படித்தான் மனிதர்களையும் அவர்கள் தொடர்பான அன்றாட நிகழ்வுகளையும் புரிந்துகொள்கிறது.

ஞாநியைப் போன்று ஒருவர் இறக்கும்போது என்னவாகிறது? ஒரு படத்தில் சட்டென ஒரு காட்சியில் ஒரு பாத்திரம் மட்டும் மறைந்துபோனால் என்னவாகும்? அவருடன் பேசும் மற்ற பாத்திரங்கள் காட்சியில் தம் பாட்டுக்கு இயங்குகிறார்கள். ஆனால் இவரை மட்டும் காணவில்லை. எவ்வளவு அபத்தம்! இதை எப்படி எதிர்கொள்வது?

நான் சிறுவனாய் இருக்கும்போது விசிஆர் எனப்படும் வீடியோ காசெட்டைப் போட்டு படம் பார்க்கும் கருவி இருந்தது. ஏதாவது ஒரு விடுமுறையின்போது அதை வாடகைக்கு எடுத்து நாங்கள் படம் பார்போம். ஒருமுறை கேப்டன் பிரபாகரன் பார்த்துக்கொண்டிருந்தோம். நான் அப்போது தீவிர கேப்டன் விசிறி. என்னுடன் படம் பார்த்துக்கொண்டிருந்த அண்டை வீட்டுப் பையன்களும்தாம். படம் பாதியில் இருக்கும்போது மின்சாரம் போய்விட்டது. இரண்டு நாட்கள் மின்சாரம் வரவில்லை. நாங்களும் வாடகைக் காலம் முடிந்ததால் காசெட்டையும் வி.சி.ஆரையும் திரும்பக் கொடுத்துவிட்டோம். படத்தின் மிச்சக் கதை என்ன, அடுத்து என்ன ஆகியிருக்கும் எனும் கேள்வி எங்களை அலைகழித்தது. பரபரப்பு தாங்காமல் நாங்கள் பையன்கள் சேர்ந்து மிச்சப் படத்தின் கதையை ஊகித்து ஒரு விளையாட்டாக மாற்றினோம். ஆளாளுக்கு ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு மிச்சக் கதையை நாங்களே பேசி நடித்து விளையாடினோம். உண்மையில் அது படத்தை விட சுவாரஸ்யமான நல்ல அனுபவமாய் இருந்தது. மின்சாரம் இருந்திருந்தால் நிச்சயம் இப்படி விளையாடியிருக்க மாட்டோம்.

ஒவ்வொரு ஆளுமையும் நம் புலன்களின் வெளியிலிருந்து மறையும்போது நாமும் இப்படியே கற்பனை செய்து விளையாடுகிறோம். அந்த விளையாட்டுதான் அஞ்சலிக் குறிப்புகள் எழுதுவது. இதன் வழியே இல்லாமல் போன ஞாநியை மீட்டுக் கொணர்கிறோம். அவரது குரலை அவருக்கு மீள அளிக்கிறோம். அவரை நம் கண்முன் நிகழ்த்திப் பார்க்கிறோம். எழுத்தின் அபாரமான ஆற்றல், அது நிறுத்தாமல் கனவுகளை உற்பத்தி செய்யக்கூடியது என்பது. லூப்பில் ஒரு காட்சியைப் பார்ப்பது போன்றது இது.

எழுத்தின் பதிவாகும் நினைவுகள், கனவுகள், நம்பிக்கைச் சித்திரங்கள் ஆகியவை மரணமுறாது.

ஆக, அஞ்சலிக் குறிப்பின் வழி நாம் ஞாநியை மரணமற்றவராய் மாற்றி நம் அருகே வைத்துக்கொள்கிறோம். அவர் சட்டெனப் போய்விட்டாரே எனும் அதிர்ச்சி தரும் பதற்றத்தை இப்படிப் போக்குகிறோம். இந்த வாழ்வு அநிச்சயமானது என எந்த ஆளுமையின், பிரியமான நபரின் மறைவும் நமக்கு உணர்த்தும். அஞ்சலிக் கட்டுரையும் நிச்சயம் அதை உறுதிப்படுத்துகிறது. அதேவேளை முரணாய் இவ்வாழ்வு நிச்சயமானது என்பதையும் அஞ்சலிக் குறிப்பு உணர்த்துகிறது. அஞ்சலிக் குறிப்பு ஒருவிதத்தில் கர்த்தர் கல்லறையை திறந்து “லாசரஸ்! வெளியே வா” என அழைத்ததைப் போன்றது.

2) அடுத்த காரணம் பண்பாட்டு ரீதியானது. நமது நாட்டுப்புற தெய்வங்கள் பெரும்பாலும் உண்மையாய் வாழ்ந்து மறைந்த மனிதர்களே. இம்மனிதர்கள் எப்படி தெய்வமாகிறார்கள்? தொன்மக் கதைகள், அவற்றை ஒட்டின சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் வழி. மனிதர்களை இப்படி தெய்வமாக்குவது நமது தொன்றுதொட்டு இருக்கிற பழக்கம்.

கையில் அமரும் பட்டாம்பூச்சி

இதில் ஆர்வமூட்டும் விஷயம் இத்தொல் கதைகள் நேற்று உருவாகி உறைந்துபோகிறவை அல்ல. எங்கள் ஊரில் உள்ள பூதத்தான், மாடன் ஆகிய சாமிகளின் தோற்றம் பற்றி உள்ள கதைகளை விட அச்சாமிகள் தம் வாழ்வில் எதிர்ப்பட்டதைப் பற்றி எளிய மக்கள் கூறும் நடுங்கச் செய்யும் கதைகளே அதிகம். என் நண்பன், பூதத்தான் சாமியின் சலங்கை ஒலியை ஓரிரவு கேட்டதாய் என்னிடம் உணர்ச்சிபூர்வமாய் விவரித்தபோது நானும் நம்பினேன். இன்னொரு நண்பன் மாடசாமி தன்னை முதுகில் அறைந்து அழைத்ததைச் சொல்லி, சட்டையை அவிழ்த்து சிவந்து தடித்த தடம் ஒன்றையும் காட்டினான். இவர்கள் யாரும் மனம் பிறழ்ந்தவர்கள் அல்ல. சாமிகள் இப்படித்தான் நம் வாழ்வில் நீடிக்கிறார்கள்; இப்படித்தான் நம் கை பிடித்து அவர்கள் உலவுகிறார்கள். அஞ்சலிக் குறிப்பெழுதுவதும் இந்தத் தொல்மரபின் ஒரு நீட்சியாக இருக்கலாம். நாம் ஓரளவுக்கு மேல் தோளில் கையிட்டு அணுக்கமாய் பழக முடியாத ஆளுமைகளை நம் கையில் அமரும் பட்டாம்பூச்சியாய் மாற்றி வைத்துக்கொள்ள அஞ்சலிகள் உதவுகின்றன.

ஆகையால் அஞ்சலிக் குறிப்பு நம் பாசாங்கின், போலித்தனத்தின் வெளிப்பாடு அல்ல. மரணத்தை ஏற்கவும் நிராகரிக்கவும் செய்வதற்கு நம்மிடம் உள்ள ஒரு அற்புதக் கருவியே அஞ்சலி!

நன்றி: மின்னற் பொழுதே தூரம் (அபிலாஷ் சந்திரனின் வலைப்பூ: http://thiruttusavi.blogspot.in/?m=1)

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 16 ஜன 2018