மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ரூ. 1 கோடிக்கு பரிசுகள்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ரூ. 1 கோடிக்கு பரிசுகள்!

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் இன்று(ஜனவரி 16) தொடங்கிவைத்தனர். மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் காளைகளை பிடித்துவருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டுகளில் தடை காரணமாக ஜல்லிக்கட்டு களையிழந்த நிலையில், இந்த ஆண்டு மிகச் சிறப்பாகப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. அவனியாபுரத்திலும் பாலமேட்டிலும் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டனர். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லாரில் இன்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி உரையை வாசித்து போட்டியைத் தொடங்கிவைத்தார்.

“ஜல்லிக்கட்டைக் கொண்டாடுவோம், நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணிக் காப்போம், விளையாட்டில் சீறி வரும் காளைகளுக்கும் எவ்வித ஊறும் செய்ய மாட்டோம் இவ்விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் சிறிதும் தீங்கு நேராமல் அரசு விதிமுறையைப் பின்பற்றி விளையாடுவோம் என்று உறுதி மொழிகிறோம்” என முதல்வர் வாசிக்க உடன் இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, “ஜல்லிக்கட்டு விளையாட்டை தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக நாம் கருதுகிறோம். இந்த விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படுவதில்லை. காளைகளை குழந்தைகள் போன்று அதன் உரிமையாளர்கள் வளர்க்கிறார்கள். இந்த வீர விளையாட்டு உலகமே போற்றும் அளவுக்கு சிறக்க வேண்டும்” என்றார்.

பன்னீர்செல்வம் பேசுகையில், தடைகளை உடைத்து சட்டப் போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருவதாக கூறினார். மேலும், ஜல்லிக்கட்டு இருக்கும் வரை ஜெயலலிதாவின் புகழ் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர் அவர்கள் இருவரும் வாடிவாசலில் கொடியசைத்து ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டுப் போட்டியை முன்னிட்டுப் புகைப்படக் கண்காட்சியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்க 1,241 மாடுபிடி வீரர்களுக்கும் 1000 காளைகளுக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்கள் உற்சாகமாகக் களத்தில் இறங்கி காளைகளைப் பிடித்துவருகின்றனர். போட்டியில் அதிக மாடுகளைப் பிடிக்கும் வீரர்களுக்கு முதல்வரும் துணை முதல்வரும் கார் பரிசாக வழங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் ஆகியோரும் பரிசுகளை அறிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு விழா குழுவினர் சார்பில், இரு சக்கர வாகனம், டிவி, பிரிட்ஜ், தங்க நகைகள் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ. 1 கோடி மதிப்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் கொம்பன் என்ற காளைக்கு நான்கு தங்கக் காசுகளும், பத்தாயிரம் ரூபாய் பணமும் பரிசாக வழங்கப்பட்டது.

போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில், போட்டியை கூடுதல் நேரம் நடத்த அனுமதிக்கும்படி மாடுபிடி வீரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற முதல்வர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படும் என அறிவித்தார்.

ஜல்லிக்கட்டை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்குத் தனி காலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. விஐபிகள், பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கவும் தனித்தனி காலரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 16 ஜன 2018