மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

ரூ 100 -ஐ தொடும் டீசல், பெட்ரோல் விலை!

ரூ 100 -ஐ  தொடும் டீசல், பெட்ரோல் விலை!

சில மாதங்களாகவே தேசிய அளவில் பல்வேறு பிரச்னைகள் பொது வெளியிலும் ஊடகங்களிலும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் நிலையில்... அதைப் பயன்படுத்திக் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் சத்தமின்றி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டிருக்கின்றன.

இந்த சிறிது சிறிதான விலை ஏற்றத்தால் பெட்ரோ, டீசல் விலை லிட்டர் 100 ரூபாயைத் தொடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று எச்சரித்திருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

சென்னையில் இன்று( ஜனவரி 16) பெட்ரோல் விலை லிட்டருக்கு 09 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.73.89க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து ரூ.65.23 ஆக அதிகரித்துள்ளது.

“கடந்த ஜூன் 16-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைக்கும் முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் தான் பெட்ரோல், டீசல் விலைகள் மக்களுக்கே தெரியாமல் தினமும் உயர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை ஒன்றாம் தேதி நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.65.46 ஆக இருந்தது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.73.89 ஆகும். அதாவது கடந்த ஆறு மாதங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.8.45 உயர்ந்திருக்கிறது. இதேகாலகட்டத்தில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.56.13 என்ற அளவிலிருந்து ரூ.65.23 ஆக அதாவது ரூ.9.10 உயர்ந்துள்ளது. இதை சாதாரண மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது’’ என்று கடந்த ஆறு மாத கால விலையேற்றத்தை சுட்டிக் காட்டியுள்ள ராமதாஸ்,

“பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மை அறவே இல்லை என்பது ஒருபுறமிருக்க, எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கும் தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன. உதாரணமாக, பெட்ரோல் விலை நிர்ணயம் தொடர்பான புள்ளி விவரத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் அடக்கவிலை 76.26 அமெரிக்க டாலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் டீசல் நிர்ணயம் தொடர்பான புள்ளி விவரத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 81.57 டாலர் என குறிப்பிடப் பட்டுள்ளது. ஒரே மாதிரியான கச்சா எண்ணெய்க்கு இரு விலைகளா?’’ என்று கேட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோ, டீசல் ஆகிய இரு எரிபொருட்களுக்கும் இடையிலான விலை வித்தியாசம் கடந்த செப்டம்பர் மாதம் ரூ.11.10 ஆக இருந்தது. ஆனால், இப்போது ரூ.08.66 ஆக குறைந்து விட்டது.

பெட்ரோல் என்பது தனிநபர் போக்குவரத்துக்கான எரிபொருள். ஆனால், டீசல் என்பது பொதுப்போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, விவசாயம், மீன்பிடித் தொழில், தொழிற்சாலை பயன்பாடு என நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பயன்படக்கூடிய ஒன்றாகும். அவ்வாறு இருக்கும் போது பெட்ரோல் விலையை விட டீசல் விலையை அதிகமாக உயர்த்துவதை ஏற்க முடியாது என்பதை எடுத்துக் காட்டியுள்ள டாக்டர் ராமதாஸ்,

“இதேநிலை நீடித்தால் அடுத்த சில வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100 என்ற அளவைத் தாண்டி விடும். அவ்வாறு உயர்ந்தால் மக்கள் மட்டுமின்றி, அனைத்து தொழில்களும் பாதிக்கப்படும்; விலைவாசி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து விடும். பெட்ரோல், டீசலின் அடக்கவிலை ரூ.30க்கும் குறைவாக உள்ள நிலையில் அதை விட இரு மடங்குக்கும் கூடுதலான விலைக்கு விற்பனை செய்வதை ஏற்க முடியாது. எனவே, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையின் கீழ் கொண்டுவந்து விலையைக் கட்டுப் படுத்த வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 16 ஜன 2018