நீதிபதிகள் மீது ஆர்எஸ்எஸ் புகார்: காங்கிரஸ் கண்டனம்!


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்த விவகாரம் அரசியல் புயலை கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நான்கு நீதிபதிகள் மீது ஆர்.எஸ்.எஸ். மூலமாக பாஜக தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
புகார் கிளப்பிய நீதிபதி செல்லமேஸ்வரை கம்யூனிஸ்டு தலைவர் ராஜா சந்திக்க, புகாருக்கு உள்ளான தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பங்களாவுக்கு பிரதமரின் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா செல்ல இந்த விவகாரம் ஆளும், எதிர்தரப்பு அரசியல்வாதிகளால் சர்ச்சை ஆக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் புகார் கொடுத்த நான்கு நீதிபதிகளை ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகத் தாக்கியிருக்கிறது. இதுகுறித்து ஆங்கில நாளேடான இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ்.எஸ். முக்கிய தலைவர்களில் ஒருவரான நந்தகுமார்,
‘’நான்கு நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு எதிராக நடத்திய பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பின்னால் அரசியல் சதி இருக்கிறது. அந்த நான்கு நீதிபதிகளின் செய்கை மன்னிக்க முடியாதது. நீதித்துறை மீது நாட்டு மக்கள் வைத்திருக்கும் நிபந்தனையற்ற நம்பிக்கை மீது இந்த நான்கு நீதிபதிகளும் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இப்போது இதனால் அவர்களுக்கு என்ன ஆகிவிட்டது? நாளையே இதுபோல உயர் நீதிமன்றங்களிலும் நடக்கலாம். நீதித்துறை என்ற உயர்ந்த அமைப்பினைப் பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார் ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர்.
இந்த கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மத்திய அரசும் பாஜகவும் நேரடியாக களத்தில் இறங்காமல், பத்திரிகையாளர்களை சந்தித்த நீதிபதிகள் மீது ஆர்.எஸ்.எஸ். மூலமாக தாக்குதல் நடத்துகிறது என்று காங்கிரஸ் பிரமுகர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார் .