ஆஸ்திரேலிய ஓபன் தொடக்கம்!


ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் தகுதிச் சுற்றுகள் முடிவடைந்து முதல் லீக் சுற்றுப் போட்டிகள் தொடங்கி உள்ளன.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெற்றுவரும் இந்தத் தொடரில் இன்று (ஜனவரி 16) நடைபெறவிருக்கும் போட்டியில் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள வீரரான சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் ஃபெடரர், 45 ஆவது இடத்தில் உள்ள அல்ஜாஸ் பேடன் உடன் மோத உள்ளார்.
தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் நாளை (ஜனவரி 17), 21ஆவது இடத்தில் உள்ள லியோநார்டோ மேயர் உடன் பலபரீட்சை நடத்துகிறார். இந்திய வீரர் யூகி பாம்ரி தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்று இன்று முதல் சுற்றுப் போட்டியில் கலந்துகொண்டார். இந்தியா சார்பில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய அவர் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி ஏமாற்றமளித்தார்.
யூகி பாம்ரி, சைப்ரஸ் நாட்டு வீரர் மார்கோஸ் பாக்தடிஸ் உடன் மோதினார். முதல் செட்டில் நீண்ட நேரம் போராடிய இருவரும் சரிசமமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் 7-6 என்ற செட் கணக்கில் யூகி முதல் செட்டினைக் கைப்பற்றினார். அதன் பிறகு மார்கோஸ் பாக்தடிஸ் அதிரடியாக விளையாடி 6-4, 6-3 என்ற கணக்கில் போட்டியைக் கைப்பற்றினார். இந்தத் தோல்வியால் யூகி ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார்.