ஆப்கானில் இந்திய தூதரகம் மீது குண்டு வீச்சு!


ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மீது ராக்கெட் குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் நேற்று (ஜனவரி 15) ராக்கெட் குண்டு விழுந்துள்ளது. இந்திய தூதரகத்தின் மிக அருகே உள்ள வேலியில் இந்தக் குண்டு விழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. குண்டு விழுந்த இடத்திற்கு அருகில் கனடா தூதரகம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், இந்திய தூதரகம் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டுள்ளதாகவும், இந்தத் தாக்குதலால் இந்திய ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து வெளியுறவு செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் டுவிட்டர் பதிவில், தூதரக கட்டிடத்தில் சேதங்கள் இல்லை ராக்கெட் குண்டு வீசப்பட்டதா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை எனப் பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர், இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேர் மற்றும் ஆப்கான் கார் ஓட்டுநர் ஆகியோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.