சிஐடி இல்லத்தில் கருணாநிதி


ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதி சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்துக்கு நேற்று சென்றார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த ஓராண்டு காலமாக வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முரசொலி பவள விழா காட்சியைக் காண பவள விழா அரங்குக்கு வருகை தந்தார். அறிவாலயத்துக்கும் வருகை தந்து பார்வையிட்டுச் சென்றார்.
2ஜி வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் கருணாநிதியிடம் ஆசிபெற்ற கனிமொழி, ‘நாம் ஜெயித்துவிட்டோம்’ என்று கூறினார். அதற்கு கருணாநிதி, ‘நாம ஜெயிச்சிட்டோமா’ என்று மகிழ்ச்சியுடன் திரும்பக் கூறினார். தன் கண் கண்ணாடியையும் தானே சரி செய்தார். இந்தக் காட்சிகள் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. அப்போதே கோபாலபுரம் இல்ல வாசலில் தொண்டர்களையும் சந்தித்தார்.
தொடர்ந்து வருடந்தோறும் பொங்கலன்று தொண்டர்களைச் சந்திப்பதை கருணாநிதி வழக்கமாக வைத்திருந்தார். பொங்கலன்று அவர் தரும் 10 ரூபாய் பணத்தை மூத்த நிர்வாகிகள் பலரும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்துள்ளனர். கடந்த வருடம் உடல்நலக்குறைவால் தொண்டர்களைச் சந்திக்காத கருணாநிதி, நேற்று முன்தினம் (ஜனவரி 14) தொண்டர்களைச் சந்தித்தார். அவர்களை நோக்கி கையசைத்ததுடன் சிரிப்பையும் உதிர்த்து தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். அவரைப் பார்த்ததும் தொண்டர்கள் உற்சாக முழக்கம் எழுப்பினர்.
இந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தனது சிஐடி காலனி இல்லத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை தந்தார். அவரது துணைவியார் ராஜாத்தியம்மாள் மற்றும் மகள் கனிமொழி ஆகியோர் உற்சாகம் பொங்க வரவேற்றனர். கருணாநிதியின் வருகையையொட்டி சிஐடி நகர் இல்லம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
திமுக தலைவர் கருணாநிதி தினமும் அண்ணா அறிவாலயம் சென்றுவிட்டு அதன்பிறகு சிஐடி இல்லத்துக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என ராஜாத்தி அம்மாளும் கனிமொழியும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கருணாநிதி வருகை தந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.