மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: உச்ச நீதிமன்றத்தின் ஆன்மாவைக் காக்கும் போராட்டம்!

சிறப்புக் கட்டுரை: உச்ச நீதிமன்றத்தின் ஆன்மாவைக் காக்கும் போராட்டம்!

ஆலோக் பிரசன்ன குமார்

முன்னெப்போதும் இல்லாத வகையிலான நடவடிக்கையாக ஜே.சேலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.வி.லோகுர் மற்றும் குரியன் ஜோஸப் ஆகியோர் அடங்கிய நான்கு நீதிபதிகள் பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தி, “உச்ச நீதிமன்ற நிர்வாகம் சில நேரங்களில் ஒழுங்காக இல்லை” என்றும், “அவற்றில் பல மிகவும் விரும்பத்தகாத விஷயங்கள் நடைபெற்றுள்ளன” என்றும் கூறினார்கள். நீதிபதி சேலமேஸ்வர், “இந்த அமைப்பைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தலைமை நீதிபதியை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான எங்கள் முயற்சிகள் தோற்றுவிட்டன” என்று கூறினார். இந்தக் கேள்விகள், குற்றச்சாட்டுகள், அவற்றின் தாக்கங்கள் குறித்த கட்டுரை இது.)

உச்ச நீதிமன்றத்தின் நான்கு மிக மூத்த நீதிபதிகள் நடத்திய செய்தியாளர் கூட்டம், உச்ச நீதிமன்றத்தை எதிர்க்கும் ஒரு செயல்பாடு. வழக்குகளை ஒதுக்கீடு செய்வதிலும் அவற்றுக்கான நீதிபதிகளை நியமிப்பதிலும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் நடவடிக்கைகள் குறித்த நீதிபதிகளிடையே அதிகரித்துவரும் அதிருப்தி தொடர்பான விஷயங்களை, இந்தக் கடிதம் வெளிப்படுத்தியுள்ளது. இது இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்படாவிட்டாலும்கூட, எம்.சி.ஐ. லஞ்ச வழக்கு முறையாகக் கையாளப்படவில்லை என்பதையும் நீதிபதி லோயா மரணம் குறித்த வழக்கு விசாரணையை நீதிபதி அருண்குமார் மிஸ்ரா (பத்தாவது மிக மூத்த நீதிபதி) தலைமையிலான பெஞ்சுக்குப் பட்டியலிட்டதையும் இந்தக் கடிதம் சுட்டிக்காட்டுவதை யாராலும் ஊகிக்க முடியும். இப்படிப் பட்டியலிட்ட விவகாரத்தை பத்திரிகையாளர் சந்திப்பில் நீதிபதி கோகாய் உறுதிப்படுத்தினார்.

வெளிப்படையான எந்தக் காரணத்தின் அடிப்படையிலும் இல்லாமல், தலைமை நீதிபதி, பெஞ்சுகளில் இடம்பெறும் நீதிபதிகளைத் தெரிவு செய்வதும் அந்த பெஞ்சுகளை அமைப்பதும் அவரது நோக்கங்கள் குறித்த சந்தேகங்களை எழுப்புகின்றன.

இந்தக் கடிதத்தின் இரண்டாவது பகுதியில், நியமன விவகாரங்களில் நீதித்துறையைப் புறக்கணித்துவிட்டு, நிர்வாகம் செயல்படுவது குறித்த விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. 2015 டிசம்பரில், உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்குப் பிறப்பித்த உத்தரவில் நியமனங்கள் குறித்த சீர்திருத்த நடைமுறைகளை உருவாக்கும்படி அறிவுறுத்தி இருந்தது. ஆனால், அப்படிப்பட்ட விதிமுறைகள் அறிக்கை எதையும் மத்திய அரசு தயாரிக்கவில்லை. நீதிபதிகள் நியமனத்துக்கான கூட்டமைப்பு ஒப்புதல் அளித்த வரைவறிக்கை 2017 மார்ச்சிலிருந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் பட்டியலிடப்பட்ட புகார்கள் எந்த விதத்திலும் தனிப்பட்ட நபர் குறித்தவை அல்ல, முற்றிலுமாக நிர்வாகம் குறித்தவை. நீதித்துறையின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அவை அடித்தளமானவை. உச்ச நீதிமன்றம் நியாயமாகவும் வெளிப்படையாகவும் செயல்படுகிறதா? சுதந்திரமாகவும் பாரபட்சமற்றும் செயல்படுவதற்கு நீதிபதிகள் அனுமதிக்கப்படுகிறார்களா? பதில் சொல்லும் பொறுப்பை அரசை ஏற்கவைப்பதில் முறையாக செயல்பட அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்களா?

இந்தப் பிரச்னைகள் உச்ச நீதிமன்றம் மட்டுமே தொடர்பானவை இல்லை. இந்தியத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் தலைவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் மிக உயர்ந்த நிலையை வகிக்கும் நீதிபதி அவர். அவரது செயலும் சொல்லும் ஒட்டுமொத்த நீதித் துறையையும் பிரதிபலிக்கும் மிக முக்கியமான விஷயம்.

ஒரு குறிப்பிட்ட வழக்கில், தனிப்பட்ட முறையில் பழிதீர்க்கும் நடவடிக்கை என்ற எந்த குற்றச்சாட்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நான்கு மூத்த நீதிபதிகளும் செயல்பட்டுள்ளனர். அவர்கள் கூறியுள்ள புகார், தனிப்பட்ட முறையிலானது அல்ல. நீதிபதி சேலமேஷ்வர் பாதிக்கப்பட்டவர் என்பதற்கு காரணங்கள் உள்ளன என்று சொன்னாலும்கூட, மற்ற மூன்று நீதிபதிகளை இப்படி சொல்ல முடியாது. ரஞ்சன் கோகாய் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் வரிசையில் உள்ளார். இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி தனது நடவடிக்கைக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதில் சேலமேஷ்வரைப் போன்றே இவரும் வலுவான குரல் கொடுத்துள்ளார். எது நடந்தாலும் அவற்றை அதன் போக்கிலேயே விட்டுவிட்டுப் பதவி ஓய்வுடன் சென்றுவிடுவது மிக மூத்த நான்கு நீதிபதிகளுக்கும் வெகு சுலபமானதாக இருந்திருக்கும். ஆனாலும், தங்களது பணி வாழ்க்கையையும் நற்பெயரையும் பணயம் வைத்து அவர்கள் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

அரசுத் தலையீடும் நீதிமன்றத்தின் செயல்பாடும்: வரலாறு காட்டும் சான்று

1973 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு விவகாரம் நினைவுக்கு வரலாம். இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எம்.சிக்ரியின் அறிவுரையை நிராகரித்துவிட்டு நீதிபதி ஏ.என்.ராயை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமித்தது. பணிமூப்பு அடிப்படை என்ற விதிமுறை பின்பற்றப்பட்டிருந்தால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கக்கூடிய நீதிபதிகள் ஏ.என்.ஷேலட், கே.எஸ்.ஹெக்டே, ஏ.என்.குரோவர் ஆகியோர் பின்தள்ளப்பட்டனர். இவர்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட ஏ.என்.ராய் பதவிக் காலம் முழுவதும், நிரந்தரமாக அரசின் கைப்பாவையாகச் செயல்படுவார் என்ற எண்ணத்தை இவர்களின் ராஜினாமா உணர்த்தியது. ஏ.டி.எம்.ஜபல்பூர் எதிர் ஷிவ்காந்த் சுக்லா வழக்கு விசாரணையின்போது, நெருக்கடி நிலையின்போது இந்திய மக்களுக்கு எந்தவிதமான சிவில் உரிமைகளும் கிடையாது எனத் தலைமை நீதிபதி ராய் குறிப்பிட்டது, தலையாட்டி பொம்மை என்ற எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது.

இந்த இரண்டு நிகழ்வுகளும் முற்றிலுமாக ஒரே மாதிரியானவை அல்லதான். இப்போதைய விவகாரத்தில் கவலைக்கான அடிப்படைக் காரணம் நீதித் துறைக்கு வெளியே நடக்கவில்லை. அது உள்ளுக்குள்ளே ஏற்பட்டுள்ள தோல்விகள் குறித்தது. நீதித் துறை அமைப்பைத் தலைமை நீதிபதி ஆட்சேபகரமான முறையில் நடத்தி வருவதும், தலைமை நீதிபதி பதவி என்ற பொறுப்பை அவர் எப்படி நிறைவேற்றி வருகிறார் என்பதும்தான் கவலை ஏற்படுத்துகின்றன. நீதித் துறையின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை என்பது ஒற்றுமை அல்லது கண்மூடித்தனமான நம்பிக்கை என்ற ஒரு மாயையை அடிப்படையாகக் கொண்டதல்ல. நீதிபதிகளின் செயல்பாடுகள் மூலம் திரும்பத் திரும்ப நீதித் துறை வலுவடைந்து வர வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம். உச்ச நீதிமன்றமும் நீதித் துறையும் மிகவும் தீவிரமான பொது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ள நிலையில், மக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்காக நீதித் துறை வாய்மூடி மவுனம் காக்க வேண்டும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பையும் அந்தக் கடிதத்தைப் பகிரங்கமாக வெளியிட்டதையும் புரட்சி என்றோ, கிளர்ச்சி என்றோ கொந்தளிப்பு என்றோ எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், நீதித் துறைக்குள் ஒரு மோதல் உருவாகியுள்ளது. அது இப்போது வெடித்துள்ளது என்பதை மட்டும் மறுக்க முடியாது.

உச்ச நீதிமன்றத்தின் ஆன்மாவைக் காக்கும் போராட்டத்தின் தொடக்கக் கட்டம்தான் இது.

கட்டுரையாளர்: சட்டக் கொள்கைகளுக்கான விதி மையத்தின் சீனியர் ரெசிடென்ட்.

நன்றி: https://theprint.in/2018/01/12/talk-point-are-the-checks-and-balances-in-the-indian-judiciary-failing/

தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

செவ்வாய் 16 ஜன 2018