மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் 29: வின்ஸ்டன் சர்ச்சில்

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் 29: வின்ஸ்டன் சர்ச்சில்

நித்யா ராமதாஸ்

வெகு சில தலைவர்கள் மட்டுமே, வரலாற்றில் நீங்காத இடம்பிடித்துள்ளனர். தங்களது ஆளுமை திறன், மக்களிடம் இருந்த செல்வாக்கு போன்ற காரணங்கள் அவர்கள் பெயரை நிலைபெற செய்திருக்கும். பிரிட்டன் வரலாற்றைப் பொறுத்தவரை, இக்கட்டான சூழலில் தக்க நடவடிக்கைகளை எடுத்த சரியான தலைவர் என்று வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு இன்றும் பெயருண்டு என்றுதான் சொல்ல வேண்டும். இவரைப் பற்றின புத்தகங்கள் பல உள்ளன. சர்ச்சிலின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு ஹாலிவுட் திரைப்படங்கள் வெளியாவதையும் அவ்வப்போது பார்க்க முடிகிறது. பல பரிமாணங்களில் இன்றும் மக்களிடையே பேசப்படும் வின்ஸ்டன் சர்ச்சிலைப் பற்றி இந்த வாரம் தெரிந்துகொள்வோம்.

படிப்பில் கவனமில்லாத பருவம்

வின்ஸ்டன் லினார்ட் ஸ்பென்சர் சர்ச்சில், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட்ஷைர் என்ற இடத்தில் நவம்பர் மாதம் 1874ஆம் ஆண்டில் பிறந்தார். ட்யூக் ஆஃப் மார்ல்பரோ என்ற செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர் இவர். வின்ஸ்டனின் தந்தை ராண்டால்ப் சர்ச்சில், தாயார் ஜீனி இருவரும் பணக்காரக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். குறிப்பாக வின்ஸ்டனின் தந்தை கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகச் சில காலம் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. அரசியல் பின்புலம் கொண்ட தந்தை, பணக்கார வம்சத்தை சேர்ந்த தாய் என்று பொருளவில் பெரிய குடும்பமாக இருந்தாலும், வின்ஸ்டன் சிறுவனாக இருந்த காலத்தில், தாய், தந்தையர் இருவருமே அடிக்கடி வெளியே சென்றுவிடுவதுண்டு.

இதனால், தனது குழந்தைப் பருவத்தை பணியாட்கள் சூழ கழிக்க நேரிட்டது. அதிகமாகப் பணியாட்களுடைய பார்வையில் வின்ஸ்டன் வளர்ந்தார். தந்தையிடம் அவருக்கு அவ்வளவாக நட்பும் உறவும் கிடைக்கவில்லை என்றும், தநதையிடம் மிகுந்த கோபமாகத் தான் பல காலம் இருந்ததாகவும் பின்னாளில் பல சந்தர்ப்பங்களில் வின்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.

போர்டிங் பள்ளியில் சேர்க்கப்பட்ட வின்ஸ்டன், பள்ளி பாடங்களில் அதிக கவனமில்லாமல், சரியான மதிப்பெண்ணும் எடுக்காமல் இருந்த காலங்கள் பல உண்டு. தேர்வு தாளில், பதில் எழுதாமல், தனது பெயரை மட்டுமே எழுதிவிட்டு வந்ததாகத் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். படிப்பில் சிரத்தை இல்லாமல் இருந்தாலும், விளையாட்டு, கவிதை எழுதுவது, வரலாற்று புத்தகங்களைப் படிப்பது போன்ற பழக்கங்கள் சிறு வயதிலேயே வின்ஸ்டனுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. தனது அரசியல் பயணத்தைத் தொடங்க பெரும் காரணமாக இவரது படிக்கும் பழக்கங்கள் விளங்கியது என்றே சொல்லலாம். பள்ளிப்படிப்பை முடித்த பின், இங்கிலாந்தில் உள்ள ராயல் மிலிட்டரி கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி படிப்பின்போது போர் மற்றும் வெளிநாட்டு தொடர்பு சம்பந்தப்பட்ட நுணுக்கங்களை நேரடியாக கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை தாமாகவே அமைத்தும் கொண்டார் வின்ஸடன்.

ராணுவப் பணியும் போர் செய்தியும்

கல்லுரிப் படிப்பை தொடர்ந்து, வின்ஸ்டன் போர் சூழ்ந்த இடங்களுக்குப் பயணித்து, போர் அதிகாரியாகவும் அதேசமயத்தில் போர் பற்றின கட்டுரைகளையும் செய்திகளையும் எழுதித் தரும் பணியில் ஈடுபட்டார். அந்த காலத்தில் கல்லூரிப் படிப்பு மட்டுமே முடிந்த இளைய வயதினருக்கு அத்தகைய பிரச்னை கொண்ட சூழலில் பணி செய்ய அனுமதி அவ்வளவு எளிதில் தரப்பட மாட்டாது. இருப்பினும், தனது தாயாரின் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் மூலம், கியூபா மற்றும் வடஇந்தியாவுக்கு மாற்றங்கள் பெற்று, அங்கு நிலவிய சூழலைப் பற்றித் தொடர் கட்டுரைகள் மற்றும் குறிப்புகளைப் பத்திரிகைகளுக்காக எழுதினார் வின்ஸ்டன்.

சில ஆண்டுகளுக்குப் பின், 1899ஆம் ஆண்டில் ராணுவப் பணியிலிருந்து விலகி, போர் செய்தியாளர் பணியை மட்டும் தொடர்ந்தார். இதன்மூலம், தென்னாப்பிரிக்காவில் அப்போது போரில் பங்குபெற்று, வீர சாகசங்களைச் செய்தது மட்டுமின்றி, இங்கிலாந்துப் படையினருக்குப் பெருமளவில் உதவியும் புரிந்தார். வெறும் செய்தி சேகரிப்பு மட்டுமல்லாமல், போர் முனையிலும் தன்னுடைய பங்கை அளித்தார் வின்ஸ்டன். தென்னாப்பிரிக்காவில் சிறிது காலம் பணிபுரிந்த வின்ஸ்டன் 1900ஆம் ஆண்டில் மீண்டும் இங்கிலாந்து திரும்பினார். தன்னுடைய மூதாதையர் வழியில், தானும் அரசியலில் இறங்க முடிவு செய்தது மட்டுமின்றி, நாடாளுமன்றத் தேர்தலிலும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாகப் போட்டியிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற வின்ஸ்டன், மக்களிடையே தனக்கான பெயரை உருவாக்கலானார். கணிதம், அறிவியல் போன்ற பாடங்கள் மீது ஈர்ப்பு இல்லாதிருந்தால், ஆங்கிலம், இலக்கியம் மற்றும் எழுத்துகளில் சர்ச்சிலுக்கு அளவுக்கு அதிகமான ஆர்வம் இருக்கவே செய்தது. அந்த ஆர்வத்தைப் பேச்சாக மாற்றி, நாடெங்கும் பேச்சு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இருப்பினும், சில காரணங்களால், கன்சர்வேட்டிவ் கட்சியை விட்டு, லிபரல் கட்சியில் சேர்ந்தார். லிபரல் கட்சியில் தனது இடத்தைப் படிப்படியாக உயர்த்திக்கொண்டது மட்டுமின்றி, நிதிக் கூட்டுக் குழு போன்ற பல முக்கிய முடிவெடுக்கும் கூட்டங்களில் ஈடுபட்டு, பல திட்டங்களையும் வகுக்கும் அளவுக்கு உயர்ந்தார்.

முதல் உலகப் போர் முதல் பிரதமர் பதவி வரை

1911ஆம் ஆண்டில் வின்ஸ்டன் முதல் ராணுவத் தலைவராக பொறுப்பேற்றார் (Lord of Admirality). இந்தப் பொறுப்பு முதல் உலக போரிலும் இவர் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. 1914ஆம் ஆண்டில் தொடங்கிய போரில், பிரிட்டன் கட்டாயமாகப் பங்கேற்க வேண்டும் என்ற கொள்கையை வலுவாக முன்வைத்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட பெருமை இவரையே சேரும். அதன்படி, போருக்குத் தேவையான பொருட்செலவு மற்றும் யுக்திகளைச் சேகரித்து உபயோகிக்கும் பிரத்யேக பொறுப்பையும் வின்ஸ்டன் சேர்த்து எடுத்துக்கொண்டார். பெல்ஜியத்தில் இருந்த இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா படைகளைச் சேகரித்து, பல போர் யுக்திகளை நேரடியாக கூறி, போர் முனையில் முனைப்பாக வின்ஸ்டன் பணிபுரிந்தார். போர் களத்தில் பணிபுரிந்து மட்டுமின்றி, 1915ஆம் ஆண்டில், துருக்கி நாட்டை வெளியேற்றும் ஒரு முகாமில் வின்ஸ்டன் ஈடுபட்டது, பல படைகளை இழந்தது மட்டுமின்றி, பல பொருட்செலவையும் ஐரோப்பியப் படைகளுக்கு ஏற்படுத்தியது. இது பலரால் பெருமளவில் விமர்சிக்கப்பட்டதால், வின்ஸ்டன் இந்த பொறுப்பிலிருந்து விலகி கொண்டார். இருப்பினும், பிரான்ஸ் சென்று இங்கிலாந்து படையில் சேர்ந்து போரில் ஈடுபட்டார்.

1917ஆம் ஆண்டில் மீண்டும் லண்டன் திரும்பிய வின்ஸ்டன், நாடாளுமன்றத்தின் எதிரணியில் அமர்ந்தார். அப்போது அமைந்த கூட்டு அரசில், அமைச்சராகப் பொறுப்பேற்றார். போர்க் காலத்தில் இருக்கும் தேவையான பொருள்களைச் சரியாக உபயோகிக்க வேண்டி ஏற்படுத்தப்பட்ட துறையின் தலைவராக இவர் விளங்கினார். இந்தக் குறிப்பிட்ட காலத்தில் மிகவும் திறம்படச் செயல்பட்டது மட்டுமல்லாது, இக்கட்டான சூழலிலும் நல்ல தலைவராக அனைவரது மனதிலும் இடம்பிடித்தார். முதல் உலகப் போருக்குப் பின், சர்ச்சில் போர் மீண்டும் எழுவதற்கான வாய்ப்புகளை குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசினார். ஹிட்லரின் எழுச்சி மற்றும் பிரிட்டன் தயாராக இருக்க வேண்டும் என்ற கருத்துகளை முன்வைத்துப் பேசினாலும், இவருடைய பேச்சுகளுக்கு அதிகமான ஆதரவு அப்போது கிடைக்கவில்லை.

ஆனால், வின்ஸ்டன் எச்சரித்தது போல, இரண்டாம் உலகப் போர் தொடங்கியபின், பிரிட்டனின் நிலையைச் சரியாக எடுத்தியம்பும் வகையில், வின்ஸ்டனைத் தலைவராக அமைத்தனர். ஏழு ஆண்டுகள் வரை தொடர்ந்து இரண்டாம் உலகப் போரின்போது, சரியாக அனைத்து படைகளையும் திரட்டியது மட்டுமின்றி, தன்னுடைய பேச்சாற்றல் மூலம் பிரிட்டன் மக்களின் மனதிலும் தைரியத்தைப் பிறக்கச் செய்து நம்பிக்கையை வளர்த்தார். குறிப்பாக இந்தக் காலத்தில், வின்ஸ்டன் நடத்திய ஆட்சியே இன்று வரை பரவலாகப் பேசப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரில் வெற்றியைத் தட்டி எடுத்தாலும், அடுத்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சர்ச்சில் லேபர் கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். எதிர்க்கட்சித் தலைவராக ஐந்தாண்டு காலம் பணியாற்றிய சர்ச்சில் அடுத்த தேத்தலில் வெற்றி பெற்று, மீண்டும் பிரிட்டனை சிறப்பான நாடாக மாற்றும் பெரும் பொறுப்பை எடுத்துக்கொண்டு அதைக் கச்சிதமாக முடிக்கவும் செய்தார்.

ஒரு நாட்டின் இக்கட்டான காலத்தில், மக்களுக்கு நம்பிக்கை அளித்து, சிக்கலையும் சமாளிக்க வேண்டும் என்ற பாடத்தை இன்றைய பல தலைவர்களுக்கு அன்றே வின்ஸ்டன் சர்ச்சில் கற்றுத் தந்துள்ளார். தனது சிறப்பு பேச்சு மற்றும் கருத்துகளை எழுத்தின் மூலம் எடுத்தியம்பியதற்காக இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1953ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. 1955ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பொறுப்பேற்ற இவர், அதன்பின் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகி இருந்தார். கடைசிக் காலத்தை ஓவியம், எழுத்து என்று செலவிட்டாலும், மன அழுத்தம் வின்ஸ்டனுக்கு இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

கட்டுரையாளர்: நித்யா ராமதாஸ்

இவர் குமுதம் சிநேகிதி மாதமிருமுறை இதழில் முழு நேர நிருபராகப் பணியாற்றியவர். புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் தினகரன் நாளிதழில் பயிற்சி நிருபராக இருந்தவர். லைஃப் ஸ்டைல், ஃபேஷன், கலை மற்றும் மியூசிக் சார்ந்த கட்டுரைகளை எழுதிவதில் தேர்ந்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். தற்போது கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 16 ஜன 2018