மோடியின் கட்டிப்பிடி: காங்கிரஸ் கிண்டல்!


வெளிநாட்டுத் தலைவர்களை பிரதமர் மோடி கட்டிப்பிடித்து வரவேற்பது தொடர்பாக கிண்டல் செய்யும் வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி மற்ற நாட்டுத் தலைவர்களை சந்திக்கும்போது அவர்களை ஆரத் தழுவி வரவேற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனைக் கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் மோடியிடம் கைகுலுக்காமல் சென்றது, பிரஞ்ச் பிரதமருடன் மோடி கட்டிப்பிடித்தபடி இருந்தது போன்றவற்றை கிண்டல் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்திய வருகையின் போதும் இத்தழுவலை எதிர்பார்க்கலாம் எனவும் காங்., பதிவு செய்துள்ளது. இந்தியாவின் பிரதான கட்சியான காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் பிரதமரை கிண்டல் செய்து வெளியிட்டுள்ள இந்த வீடியோ பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், “ காங்கிரஸின் இந்தச் செயல் அவர்களது முதிர்ச்சியற்ற மற்றும் அரசியல் உணர்வற்ற நிலையை காட்டுகிறது. விவாதிக்க முக்கிய பிரச்னைகள் எதுவும் இல்லாததால் இது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நமது பிரதமர் மட்டுமல்ல நமது விருந்தாளிக்கும் இது அவமானம்தான்” என்று தெரிவித்துள்ளார்.