மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

பத்திரிகையாளர் ஞாநி மறைவு : தலைவர்கள் இரங்கல்!

பத்திரிகையாளர் ஞாநி மறைவு : தலைவர்கள் இரங்கல்!

பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், நாடக இயக்குநர் என பன்முகத்திறமை கொண்ட ஞாநி இன்று (ஜனவரி 15) அதிகாலை மறைந்தார். அவருக்கு வயது 64.

1954ஆம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்த ஞாநியின் இயற்பெயர் சங்கரன். இவரது தந்தை வேம்புசாமி பத்திரிகை துறையில் பணியாற்றியவர். தந்தையின் வழியில் ஞாநியும் பத்திரிகை துறைக்கு வந்தார். வெளிப்படையான தனது அரசியல் விமர்சனங்களை முன்வைக்கும் ஞாநி பரிக்‌ஷா என்ற நாடக்குழுவை நிறுவினார்.

கடந்த சில காலமாகவே அவர் சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டுவந்தார். இருப்பினும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு தனது விமர்சனத்தை முன்வைத்து வந்தார். சென்னை புத்தக கண்காட்சிக்கு நேற்று முன்தினம் சென்று வந்தார்.

முகநூல் வழியாகவும் தனது விமர்சனத்தை பதிவிடும் ஞாநி நேற்று இரவு 8.30மணிக்கு துக்ளக் நிகழ்ச்சி குறித்து பதிவிட்டிருந்தார். அதில், “துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பி.ஜே.பி நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக செய்ய மாட்டார். பி.ஜே.பியையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி முழுக்க முழுக்க பி.ஜே.பி சங்கப் பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது. முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு பத்மா என்ற மனைவியும் மனுஷ் நந்தன் என்ற மகனும் உள்ளனர்.

ஞாநியின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிட கழகத்தலைவர் கீ.வீரமணி, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

பத்திரிகையாளர் ஞாநியின் மறைவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. தனித்துவமான அரசியல் மற்றும் சமூகப் பார்வையுடன் கட்டுரைகள் பலவற்றைப் படைத்திருக்கும் ஞாநி, பத்திரிகை, நாடகம், தொலைக்காட்சி, இணையதளம் உள்பட ஊடகத்துறையின் பல்வேறு தளங்களில் கவனம் செலுத்தியவர். மேலும், கருணாநிதியிடமும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனிடமும் மிகுந்த நட்பு பாராட்டி வந்த ஞாநி, முரசொலி நாளேட்டில் ‘புதையல்’ எனும் சிறப்புப் பகுதியை, சக பத்திரிகையாளர்களான சின்னகுத்தூசி, க.திருநாவுக்கரசு ஆகியோருடன் இணைந்து வழங்கியவர்.

தனிப்பட்ட முறையில் என் மீதும் அன்பு செலுத்தி, ஒரு பத்திரிகையாளராக தனது கருத்துகளை வெளிப்படையாக பரிமாறிக் கொண்டவர். அரசியல் களத்தில் மாறுபட்ட கருத்துகள் இருப்பினும், எப்போதும் சுயசார்புடன் இயங்கி வந்த ஞாநியின் மறைவு, தமிழ்ப் பத்திரிகையுலகிற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன்

பத்திரிக்கையாளர் திரு.ஞாநி சங்கரன் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனையும் வருத்தமும் அடைந்தேன். அவரை பிரிந்துவாடும் குடும்பத்தினருக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா நற்கதியடைய அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.

நடிகர் ரஜினிகாந்த்

அவர் மனதுக்கு எது சரியெனப்படுகிறதோ அதை யாருக்கும் பயப்படாமல் எழுதக்கூடியவர்; பேசக்கூடியவர். அவரது அகால மரணம் மிகுந்த வருத்தத்தை தருகிறது. அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆன்மா சாந்தியடையட்டும்.

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

தமிழகத்தின் மூத்த இதழாளர்களில் ஒருவரும், அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

இதழாளரின் மகனாகப் பிறந்து இதழாளராக உருவானதுடன் தம்மைப் போலவே ஏராளமான இதழாளர்களை உருவாக்கியது ஞாநியின் சிறப்பு ஆகும். இதழாளர், அரசியல் விமர்சகர் என்பதைத் தாண்டி சிறந்த நாடக ஆசிரியராகவும், குறும்பட இயக்குநராகவும் சிறப்பாக செயல்பட்டவர். எண்ணற்ற ஊடகங்களில் பணியாற்றினாலும் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாதவர்; தனித்தன்மையை இழக்காதவர்; தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் ஏராளமான அரசியல் தலைவர்களுடன் பழகினாலும் அதை தன்னலனுக்காக பயன்படுத்திக் கொள்ளாதவர் என்பது அவரது சிறப்புகளில் சில.

சமகால அரசியல் குறித்தும், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் குறித்தும் என்னுடன் நீண்ட விவாதங்களை நடத்தியுள்ளார். அரசியல் களத்திலும் கால் நனைத்துப் பார்த்தவர். பன்முகம் கொண்ட ஞாநி இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து சமூகத்திற்காக உழைத்திருக்க வேண்டும். ஆனால், 64 வயதில் அவர் மறைந்தது அவர் சார்ந்த அனைத்துத் துறைகளுக்கும் இழப்பு தான். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், இதழாளர்கள், அவரது மாணவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் டிடிவி.தினகரன்

பிரபல எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான திரு ஞானி சங்கரன் காலமானார் என்ற செய்தியைக் கேட்டு வருத்தமுற்றேன். அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், நாடக கலைஞர், அரசியல்வாதி என பன்முகத் திறனுள்ளவர் அவர். அன்னாரது மறைவு பத்திரிக்கையுலகில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். திரு ஞானி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று மாலை வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் ஞாநியின் உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்படவுள்ளது.

ஞாநி இல்ல முகவரி:

எண் 39, அழகிரிசாமி சாலை,

கே.கே.நகர், சென்னை -78

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 15 ஜன 2018