மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

குட்கா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்!

குட்கா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்!

குட்கா ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று(ஜனவரி 15) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் குட்கா மற்றும் போதைப் பாக்குக்கு தடை விதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் போதிலும், அதன் சட்டவிரோத விற்பனை மட்டும் இன்னும் குறையவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. குட்கா விற்பனை ஊழலால் இந்திய அரங்கில் தமிழகத்தின் பெயர் சீர்கெட்டுப் போயிருக்கும் நிலையில், அதன் விற்பனையை ஆட்சியாளர்களும், காவல்துறையினரும் தடுக்காமல் உள்ளனர்” என தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மூலம் நேற்று ஆய்வு செய்ததில் சென்னை மாநகர எல்லையில் மட்டும் குறைந்தபட்சம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் குட்கா போன்ற போதைப்பாக்குகள் விற்பனை செய்யப்படுவதை அறிய முடிந்தது என குறிப்பிட்டுள்ள அவர், “ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் ஆதரவின்றி போதைப்பாக்குகளை விற்பனை செய்வது சாத்தியமல்ல. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பாக்குகளை விற்பனை செய்ய அனுமதிப்பதற்காக 01.04.2016 முதல் 15.06.2016 வரையிலான இரண்டரை மாதங்களில் மட்டும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு குட்கா நிறுவனம் ரூ.56 லட்சம் கையூட்டு கொடுத்ததாக அந்த நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் வருமானவரித் துறை அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்” எனவும் கூறியுள்ளார்.

குட்கா குறித்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது? என்று உயர்நீதிமன்றம் வினா எழுப்பும் அளவுக்கு குட்கா ஊழல் பெரும் சர்ச்சையாகியிருக்கிறது என்று தெரிவித்துள்ள அவர், “இதற்குப் பிறகும் தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை தடையின்றி நடக்கிறது என்றால், அதை அனுமதிப்பதற்கான ஊழலும் தொடருவதாகத் தான் பொருள்” என குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் 35 லட்சம் பேர் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக கூறியுள்ள அவர், இவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களையொத்த வயதினர் என்று குறிப்பிட்டுள்ளார்.

“குட்காவும், புகையிலையும் சமூகத்தை இந்த அளவுக்கு சீரழிப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில், அதை தடுக்க வேண்டிய சுகாதார அமைச்சரும், காவல்துறை அதிகாரிகளும் குட்கா விற்பனைக்கு அப்பட்டமாக துணை போவது மன்னிக்க முடியாத குற்றமாகும்” என்று தனது கண்டனத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

“ஒருபுறம் மது சமூகத்தை சீரழிக்கும் நிலையில் மற்றொருபுறம் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களும் சமூகத்தை சிதைக்கத் தொடங்கியிருக்கின்றன. இதே நிலை நீடித்தால், வீரத்தின் விளைநிலமாக திகழ்ந்த தமிழகம் நோய்களின் கூடாரமாக மாறிவிடும் ஆபத்து உள்ளது” என்றும் அன்புமணி எச்சரித்துள்ளார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 15 ஜன 2018