மாடுகளுக்கு நன்றி சொல்லும் பொங்கல்!

தைப்பொங்கல் நாளின் மறுநாளான இன்று (ஜனவரி 15) மாட்டுப் பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பண்டிகையை முன்னிட்டு கிராமங்களில் வீடுகள்தோறும் உள்ள மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பூவால் அலங்கரித்து, வழிபடுகின்றனர். அவற்றுக்குப் பொங்கலும், பழங்களும் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றனர். 'பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
அதுபோன்று மாட்டுடன் தொடர்புடைய உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். பொங்கல் பண்டிகையுடன் சம்பந்தப்பட்ட மற்றொரு விஷயம்‘ஜல்லிக்கட்டு’. இன்றைய நாளில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். ஜல்லிக்கட்டு பல இடங்களில் நடத்தப்பட்டாலும், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டே உலகப் புகழ்பெற்று விளங்குகிறது. அதுபோன்று, பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிவிட்டது.
தொழில்நுட்ப யுகத்தில் விவசாய உற்பத்தில் பலவிதமான இயந்திரங்கள் வந்துள்ளதால் மாடுகளின் தேவை குறைந்துள்ள போதிலும் நம் மூதாதையினர் செய்து வந்த மாட்டுப் பொங்கல் விழா கிராமப்புறங்களில் மட்டுமே கொண்டாடப் பெற்று வருகின்றது.