குருமூர்த்தி சொல்வது நடக்காது!

குருமூர்த்தி சொன்னதெல்லாம் நடக்க அவர் என்ன தேவதூதரா என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்குப் பிறகு தினகரன் ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். இதுகுறித்து ஆடிட்டர் குருமூர்த்தி முதல்வர், துணை முதல்வரை ஆண்மையற்றவர்கள் (impotent leaders) என்று பொருள்படும் வார்த்தை கொண்டு விமர்சனம் செய்தார். இதற்கு எதிர்வினையாற்றிய முதல்வர் தரப்பு, நாங்கள் காங்கேயம் காளைகள் என்றும், ஆண்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறோம் என்று குறிப்பிட்டனர்.
இந்நிலையில் நேற்று துக்ளக் இதழின் 48வது ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, கழகங்களுடன் தொடர்பு வைத்தால் தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக வளர முடியாது என்றும், தமிழக அரசியலில் ரஜினிக்குச் சிறந்த வாய்ப்பு உள்ளது. பாஜகவும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்றும் பேசினார்.
சென்னையில் இன்று ( ஜனவரி 15) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு "குருமூர்த்தியின் கருத்து அவருடைய சொந்தக் கருத்தாக இருக்கலாம், ஆனால் தமிழக மக்களின் விருப்பம் அதிமுக அரசு தொடர வேண்டும் என்பதுதான். அதனை வரும் தேர்தல்களில் நிரூபிப்போம். குருமூர்த்தி என்ன தேவதூதரா, அவர் சாதாரண மனிதன்தான். அவர் சொல்வதையெல்லாம் தேவதூதர் வாக்குபோல சொல்கிறீர்களே, அவர் சொல்வது எதுவும் நடக்காது" என்று பதிலளித்தார்.