உத்திரப்பிரதேசத்தில் வெளியாகும் பத்மாவத்

நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகி இருக்கும் வரலாற்றுப் படமான ‘பத்மாவத்’ படத்தை உத்திரப்பிரதேசத்தில் ரிலீஸ் செய்ய அனுமதி கிடைத்திருக்கிறது.
ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மாவதியின் வரலாற்றைச் சித்தரிக்கும் பத்மாவதி படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாவதாக இருந்தது நிறுத்தப்பட்டது. இதையடுத்து படத்தின் பெயர் ‘பத்மாவத்’ என்று மாற்றப்பட்டு, காட்சிகளிலும் சில மாற்றங்கள் செய்தபின் சென்சார் போர்டு அனுமதி வழங்கியது. வருகிற ஜனவரி 25ஆம் தேதி பத்மாவத் படம் திரைக்கு வருகிறது.
பெயர் மாற்றம், காட்சிகளில் மாற்றம் செய்யப்பட்ட பின்பும் பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு குறையவில்லை. சென்சார் போர்டில் மொத்தம் 26 இடங்களில் இந்தப் படம் வெட்டு வாங்கியது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில அரசு இந்தப்படம் ராஜபுத்திரர்களின் மனம் புண்படும்படி இருப்பதால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பத்மாவத் படத்துக்கு தடை விதித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதேபோல் குஜராத் மாநில அரசும் பத்மாவத் படத்துக்கு தடை விதித்துள்ளது.
மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், “இந்த விவகாரத்தில் ஏற்கனவே நான் என்ன கருத்து தெரிவித்து இருந்தேனோ அதுதான் நடக்கும்” என சூசகமாக மத்தியபிரதேசத்திலும் பத்மாவத் படத்துக்கு தடை விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
கோவாவில் சுற்றுலா சீசன் வருவதால் போலீசார் பாதுகாப்பு பணிக்குச் சென்று விடுவார்கள். இதனால் பத்மாவத் படத்துக்கு எதிரான போராட்டத்துக்குப் பாதுகாப்பு வழங்க இயலாது, எனவே பத்மாவத் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.