மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: பொங்கலுக்கு எதையெல்லாம் தொலைத்திருக்கிறோம் தெரியுமா?

சிறப்புக் கட்டுரை: பொங்கலுக்கு எதையெல்லாம் தொலைத்திருக்கிறோம் தெரியுமா?

பா.நரேஷ்

தமிழ்ப் பாரம்பர்யத்தில் விழாக்களுக்குப் பஞ்சமில்லை. அந்த விழாக்களால் வாழும் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் ஏராளம். இன்று நவீனத்தின் மோகத்தில் நாம் பாரம்பர்யத்தை மட்டுமல்ல; இவ்வாறான பல தொழிலாளர்களையும் இழந்திருக்கிறோம். அந்தத் தொழிலாளர்களை மதிக்காமல் இருந்ததாலோ என்னவோ, ஆரோக்கியத்தையும் நாம் இழந்திருக்கிறோம். அதுவும் மிக மோசமாக.

அந்த அதிர்ச்சியை எதிர்கொள்ளும் முன் ஒரு சில தகவல்களைத் தெரிந்துகொண்டு அடுத்துச் செல்லுங்கள். ஒரு சமூகமாக வாழும்போது, நாமும் தற்சார்பாக இருந்தோம். நம்மைச் சுற்றி வாழ்பவர்களையும் தற்சார்பாக வாழவைத்தோம். இன்று சுயநல வெறி காரணமாகவும், பணம் மற்றும் நுகர்வின் பின் சென்றதாலும் நாம் இழந்த பாரம்பர்யத் தொழில்கள் ஏராளம். சொல்லப்போனால், நாம் அவற்றை மீட்டெடுக்க முடியாத வகையில் தொலைத்துவிட்டோம்.

மீட்டெடுக்க முடியாத தொழில்கள்

அவற்றில் சிலவற்றின் தற்போதைய நிலைமையைப் பார்ப்போம். பொங்கலுக்கு வெள்ளையடிக்கும் சுண்ணாம்புத் தொழில், கரும்பு வியாபாரம், வீடுகளில் காப்புக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் பூளைப்பூ விற்பனையாளர்கள், மாட்டு வண்டி தயாரிப்பாளர்கள், ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பர்ய விளையாட்டுகளில் ஈடுபடும் காளைகளுக்கு லாடம் கட்டும் தொழிலாளர்கள், கோலப்பொடி விற்பனையாளார்கள், அலங்காரிகள், பூசாரிகள் என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்தத் தொழில்களுக்கும் நம் ஆரோக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்?

முதலில் சுண்ணாம்புத் தொழிலை எடுத்துக்கொள்வோம். பாரம்பர்ய குடிசைத் தொழிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தச் சுண்ணாம்பு தொழிலாளர்கள் இருந்தார்கள். தரிசு நிலங்களில் கிடைக்கும் வெள்ளை நிறக் கற்களையும், பாறைக்குழிகள், குன்றுகளிலிருந்து எடுக்கப்படும் கற்களையும் நெருப்பு மூட்டி வேகவைத்து சுண்ணாம்புக் கல் தயாரிக்கப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தச் சுண்ணாம்பு இயற்கையான பொருள்களிலிருந்து எடுக்கப்பட்டு எந்த ரசாயனக் கலவையும் பயன்படுத்தாமல் நேரடியாக நமக்குக் கொடுக்கப்படுவதால், அதிலிருக்கும் கால்சியம் தெரிந்தும் தெரியாமலும் நம்மைச் சுற்றி நிறைந்துவிடுகிறது. விசேஷ நாள்களில் வெற்றிலைப் பாக்குடன் கொடுக்கப்படும் சுண்ணாம்புக்கும், நாம் சுவர்களில் பூசும் சுண்ணாம்புக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. ஆம், நாம் உண்ணக்கூடியதைதான் சுவர்களில் பூசியுள்ளோம். இன்று நவீனம் வழங்கும் பெயின்ட்களை நாம் அதிகமாக நுகர்ந்துவிட்டால், நம் நுரையீரல் பாதிப்புக்குள்ளாகிவிடும்.

உங்களுக்கு ஓர் ஆச்சர்யமான சேதி சொல்கிறேன். இன்றும் கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்குக் கால்சியம் குறைபாடு இருக்கிறதெனில் அவற்றை சரி செய்ய, சுவர்களுக்குப் பூசப்படும் சுண்ணாம்புக் கற்களை வாங்கிவந்து தண்ணீரில் கலந்து மாடுகளுக்கு வழங்குவர். இது ஏதோ மூடச் செயல் அல்ல. நவீன கால்நடை மருத்துவர்கள்கூட கால்சியம் குறைபாட்டுக்கு இந்த முறையைத்தான் கடைப்பிடிக்கச் சொல்கின்றனர். நம் குழந்தைகள், சுவர்களில் பூசப்படும் இந்த சுண்ணாம்பை நுகர்ந்தால் அல்ல, சுவைத்தாலும் அவர்களின் உடல்நலனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மாறாக அவர்களின் குறைபாடுகள் நீங்கும்.

இன்று காற்று மாசுபாட்டைக் குறைக்கிறேன், சுவர்களைப் பாதுகாக்கிறேன் என்ற பெயர்களில் விளம்பரம் செய்யப்படும் சுவர்ப் பூச்சுகள் நம் உடலுக்குத் தீங்கான ரசாயனங்கள் எதுவும் இல்லாமல் தயாரிக்கப்பட்டவை என்று சொல்லும் தைரியம் இருக்கிறதா? ஆரோக்கியத்தின் அடிப்படையில் பார்க்கும்போது நமது பாரம்பர்யத்துக்கு முன் நிற்க திராணியற்று நவீனம் வீழ்ந்துவிடும். நமது ஆரோக்கியத்தைவிட, குழந்தைகளின் உயிரைவிட, நவீன வீடுகளும் அலங்காரமான சுவர்ப் பூச்சுகளும் முக்கியம். அவைதான் சமூக அந்தஸ்தை வழங்கும் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும்வரை, எதிர்காலத் தலைமுறையினரைக் காப்பாற்ற முடியாது.

ஆரோக்கியமும் பொருளாதாரமும்

நாங்கள் சம்பாதிப்பதும், இந்த அலங்காரமும் பகட்டும் குழந்தைகளுக்காகத்தான் என்று நீங்களாகவே நம்பி ஏமாறாதீர்கள். ஏனெனில், இந்த நவீன அலங்காரங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மட்டுமல்ல; உங்கள் பொருளாதாரத்தையும் சேர்த்தே உறிஞ்சுகின்றன. ஒரு சுண்ணாம்புக் கல்லை வாங்குவதற்கு உங்களுக்கு ஆகும் செலவைவிட பெயின்ட் வாங்குவதற்கான செலவு பத்து மடங்கு அதிகம். பிறகு அந்த பெயின்ட்களில் உள்ள ரசாயனங்களில் காற்றில் கலந்து நுரையீரலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளைச் சீர்செய்ய மருத்துவர்களை நோக்கி ஓட வேண்டும். அப்படிச் சென்றால், நீங்கள் பெயின்ட் அடித்த அந்த வீட்டை விற்றுத்தான் மருத்துவச் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இது வெறும் எடுத்துக்காட்டுதான். இவ்வாறான பல பாரம்பர்யங்களையும் ஆரோக்கியங்களையும் நாம் நவீனம் என்ற பெயரில் தொடர்ந்து தொலைத்து வருகிறோம். இம்மாதிரியான விழாக்களிலாவது ஊர்களுக்குத் திரும்பி, சூழலுக்கு உகந்த இல்லங்களையும், இல்லங்களுக்கு உகந்த திருவிழாக்களையும் பிற தொழிலாளர்களுடனும், பாரம்பர்யத்துடனும் கொண்டாடுங்கள். இச்செயல் நம் ஆரோக்கியத்துக்கானது மட்டுமல்ல; சிதறிக்கிடக்கும் உறவுகளை இணைப்பதற்கும் நவீனத்தில் தொலைக்கப்பட்ட நம் வாழ்க்கையின் சுவையை மீட்டெடுப்பதற்கும், நம் குழந்தைகளுக்கான சிறந்த சூழலை உருவாக்குவதற்கும்தான்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 15 ஜன 2018