காய்கறிகள் வரத்து அதிகரிப்பு!


கோயம்பேடு காய்கறி சந்தைக்குக் காய்கறிகள் வரத்து அதிகமாகவுள்ளதால் மொத்த விற்பனையில் காய்கறிகள் விலை குறைந்துள்ளது.
இதுகுறித்து கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தின் மொத்த பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், “காய்கறிகள் வரத்து கோயம்பேடு சந்தைக்கு 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கத்திரிக்காய், பீன்ஸ், வெண்டைக்காய், பட்டை அவரை மற்றும் தக்காளி ஆகிய காய்கறிகள் மொத்த விற்பனையில் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய்க்கும் குறைவாகவே விற்பனையாகிறது” என்றார்.
பொங்கல் பண்டிகையையொட்டி காய்கறிகள் வரத்து கோயம்பேடு மொத்த விற்பனை சந்தைக்கு அதிகமாக வந்துள்ளது. சுமார் 450 டிரக்குகளில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற பகுதிகளிலிருந்து காய்கறிகள் வந்துள்ளது. வழக்கத்தைவிட 50 டிரக்குகளில் காய்கறிகள் கூடுதலாக வந்துள்ளது என்று விற்பனையாளர்கள் கூறுகின்றனர். வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரையும், உருளைக்கிழங்கு கிலோ ஒன்றுக்கு ரூ.20 வரையும், கருணைக்கிழங்கு கிலோ ஒன்றுக்கு ரூ.25 வரையும் விற்பனையானது.